Monday, 4 November 2013

நாங்கள் மாறிவிட்டோம் ...நீங்கள்..?

சுவாரஸ்யமான பதிவை எதிர்பார்த்து வந்தவர்கள் இத்தோடு அப்பீட்டு ஆகிக்கலாம்..கொஞ்சம் போராதான் இருக்கும் ..பொறுத்துக்கோங்க..புதுச்சேரியில் பலத்த மழையின் காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விட்டுவிட்டார்கள்..வெளியிலும் எங்கும் செல்ல முடியவில்லை...சரி இருக்கவே இருக்காங்க நம்ம திண்டுக்கல் தனபால் அண்ணன், வேலூர் உஷா அக்கா, காணாமல் போன விழியின் ஓவியம் மகேஷ்..எத எழுதனாலும் அதையும் படிச்சிட்டு கண்டிப்பா நாலு கமெண்ட்ஸ் ஆச்சும் எழுதிட மாட்டாங்களானு ஒரு நப்பாசைதான்..

சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்..நான் பதிவுலகத்திற்கு அறிமுகமான புதிதில் என்னையும் மதித்து என்னுடைய பதிவுகளுக்கு முதன்முதலில் பின்னூட்டங்கள் எழுதி எனக்கு ஊக்கம் அளித்தவர்கள் இவர்கள்தான்..இந்த பதிவின் மூலம் அவர்களுக்கு என் நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்...

சரி சரி விஷயத்துக்கு வந்துடறன்...இப்போ நம்ம உலகத்துக்கு பெரிய அச்சுறுத்தலா இருக்கற ரெண்டு விஷயம்னு பார்த்தோம்னா ஒன்று உலக வெப்பமயமாதல் மற்றொன்று பிளாஸடிக் கழிவுகளால் ஏற்படவுள்ள பிரச்சினைகள்தான்..

முதல் பிரச்சினையை தீர்ப்பதென்பது  கடினமான செயல்தான்..இன்றைய அவசர உலகத்தில் வாகன பயன்பாடு அதிகரித்துக்கொண்ண்டுதான் இருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை..நிச்சயம் குறையப்போவதும் இல்லை...அரசாங்கமும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதாய் தெரியவில்லை...விளைநிலங்களெல்லாம் விலைநிலங்களாக மாறுவதையும் தடுக்கமுடியவில்லை...அரசாங்கம்தான் ஏதாவது திட்டம் கொண்டுவரவேண்டும்..சுற்றுச்சூழலைப் பாதிக்காத வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தொழில் தொடங்க பெரிய அளவில் உதவி செய்யலாம்..என்று என்ன நடக்கும் என்று தெரியவில்லை..என்று வேண்டுமானாலும் ஆர்டிக்கும் அண்டார்டிக்காவும் நமது அண்டை நாடுகளாகலாம்..

இரண்டாவது பிரச்சினையான பிளாஸ்டிக் நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது...பெரிய பிளாஸ்டிக்குகளால் உடனடி பாதிப்பு இல்லையென்றாலும் என்னைக்கா இருந்தாலும்  நமக்கெல்லாம் ஆப்புதான்.. அதனால்உடனடியாக நம் நாட்டைவிட்டே துரத்தவேண்டிய எதிரி பிளாஸ்டிக் பைகள்தான்..கேரி பேக்குகள்,மளிகைசாமான் பைகள்,ஜவுளிக்கடை பைகள்,பால் பாக்கெட்டுகள் என்று பல்வேறு பெயர்களுடன் பலமுகங்களோடு நம்மைச் சுற்றியிருக்கும் பல்வேறு எதிரிகள்..நம்முடனேயே கூடவே இருந்து நம் நாட்டின் நிலத்தடி நீர்வளத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டிருக்கும் அசகாயசூரன்தான் இந்த பிளாஸ்டிக் பைகள்...

யாருக்குமே தெரியாதத சொல்ல வந்துட்டார்ரா பெரிய --------மாதிரி என்று நீங்கள் சொல்வது புரிகிறது..எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக இருந்தாலும் எத்தனை பேர் அதை அழிக்க முன்வந்தார்கள்,முயற்சியெடுத்தார்கள் என்பதே முக்கியம்..

இத்தகைய விழிப்பணர்வு வந்ததற்கும் காரணம் இருக்கிறது...புதுச்சேரி மாநிலத்தில் மாணவர்களுக்க் காலை உணவாக பாலும் பிஸ்கெட்டும் வழங்கி வருவதை அனைவரும் அறிவீர்கள் என்று நினைக்கிறேன்...எங்கள் பள்ளியின் பால் காய்ச்சும் ஊழியர்கள் காலி பால் பாக்கெட்டுகளை அப்படியே போட்டுவிட்டு போய்விடுவார்கள்..துப்புரவுப்பணியாளர்கள் அந்த காலி பால் பாக்கெட்டுகள்,பிஸ்கட் பாக்கெட்டுகளைப் பெருக்கி வாரி குப்பையில் (எங்கள் பள்ளி விளையாட்டு மைதானத்தின் ஒரு மூலையில்) கொட்டிவிடுவார்கள்...அக்குப்பைகள் கொஞ்சநேரத்தில் பள்ளிமுழுவதும் பறந்துவந்து எங்கள் பள்ளியே குப்பைமேடாகக் காட்சியளிக்கும்..

என்னுடன் பணிபுரியும் நண்பன் பெருமாள் இதைக்கண்டு இதற்கு ஏதாவது ஒரு வழி செய்யவேண்டும் என்று கூறிக்கொண்டே இருப்பான்..அந்த பிளாஸ்டிக் பைகளை எல்லாம் ஒரு பிளாஸ்டிக் பையில்போட்டு கட்டி குப்பையில் போட்டுவந்தோம்..அதுவும் சரியான தீர்வாக அமையவில்லை..

பிறகு என் நண்பன் பெருமாளின் யோசனைப்படி ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் உதவியோடு காலி பால்பாக்கெட்டை சாக்குகளில் சேமித்துவைத்து அதை  கடையில் போட்டு அதிலிருந்து வரும் பணத்தை பள்ளியின் செலவுக்குப் பயன்படுத்திக்கொண்டோம்..

இருந்தாலும் மனம் நிறைவடையவில்லை...இன்னமும் பிளாஸ்டிக் குப்பைகள் பள்ளி வளாகங்களில் இருந்தவண்ணமே இருந்தது...தனியார் பள்ளிகளில் கண்டிப்பு என்ற முறையால் பள்ளியைச் சுத்தமாக வைத்துக்கொள்கின்றனர்...ஆனால் எங்கள் ஊர் பள்ளிகளில் பிள்ளைகளுக்கு பால் வாங்கிக்கொடுக்கவும் மதிய உணவு ஊட்டிவிடவும் பெற்றோர்கள் பள்ளிக்குள் வருவார்கள்..அப்படி வரும்போது மாணவர்களுக்கு ஏதாவது ஸ்நாக்ஸ் வாங்கிக் கொடுத்துவிட்டு அந்த பிளாஸ்டிக் பைகளைப் பள்ளி வளாகத்திலேயே போட்டுவிடுவர்..அவர்களைப் பள்ளிக்குள் வரவேண்டாம் என்றும் சொல்லமுடியாது..பிளாஸ்டிக் கவர்களை பள்ளி வளாகத்தில் போடாதீர்கள் என்று கூறியும் பயனில்லை..

தமிழ்நாட்டில் ஒருசில நகராட்சிகளிலும்,ஊராட்சிகளிலும் பிளாஸ்டிக் இல்லாத ஊராட்சி என்ற அறிவிப்புப் பலகைகளைப் பார்த்ததுண்டு..நம் பள்ளியிலும் அதைப் பின்பற்றினால் என்ன என்ற யோசனை எனக்குள் தோன்றியது..உடனே செயல்படத்தொடங்கினேன்..

நம் பள்ளி பிளாஸ்டிக் இல்லா பள்ளியாக மாற்றப்படுகிறது என்று நோட்டீஸ் அடித்து பள்ளி வளாகங்களில் ஒட்டினோம்..ஒருநாள் முழுவதும் மாணவர்களின் உதவியுடன் பள்ளிவளாகத்தில் இருந்த பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றினோம்..சட்டமாக போட்டால்தான் நம் மக்கள் எதையுமே மதிக்கிறார்கள்..கட்டாயம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல்  தினம் தினம் பிளாஸ்டிக் பற்றிய விழிப்புணர்வை மாணவர்கள் மனதில் ஏற்படுத்தி வருகிறோம்...இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஆசிரியர்களாகிய நாங்கள் முதலில் அவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க முடிவு செய்தோம்..இனிமேல் ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் எப்பொழுதும் ஒரு துணிப்பையை வைத்திருக்க வேண்டும் என்றும் மாணவர்கள் எதிரில் பிளாஸ்டிக் பையைப் பயன்படுத்த வேண்டாம்
என்றும் முடிவு செய்துள்ளோம்..

உங்கள் பள்ளிவளாகம் மாறிவிட்டால் உலகமே சுத்தமாகிவிடுமா என்ன..இவனுக்கு வேற வேலையே கிடையாது போல என்று பலர் நினைக்கக் கூடும்..ஒவ்வொரு ஆசிரியரும் நினைத்தால் நிச்சயம் சாத்தியமாகும்...ஆசிரியர்களால் மட்டும்தான் சாத்தியமாகும்...அதனால்தான் இந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்..ஏற்கனவே இம்முறை பல பள்ளிகளில் பின்பற்றப்படலாம்..நான் ஒன்றும் முன்னோடியல்ல..இதுவரை செய்யாதவர்கள் இனிமேலாவது என் பின்னால் வாருங்கள் என்றுதான் அழைக்கிறேன்..

இதெல்லாம் வேலைக்கு ஆகாதப்பா என்று மட்டும் ஒதுங்கிக்கொள்ளாதீர்கள்..எங்கள் பள்ளியில் இப்பல்லாம் எங்களைவிட எங்கள் மாணவர்கள்தான் பயங்கர ஈடுபாட்டோடு பின்பற்றுகிறார்கள்..ஒன்று,இரண்டாம் வகுப்பு மாணவர்கள் யாராவது பள்ளி வளாகத்தில் பிளாஸ்டிக் குப்பைகளைப்போட்டால் உடனே ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் தாங்களாகவே ஆர்வமாகச்  சென்று அவர்களிடம் பிளாஸ்டிக் பைகளை பள்ளி வளாகத்தில் போடக்கூடாது என்று அறிவுரை கூறுகிறார்கள்..இது இது இதத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம்..இப்பயணம் எங்களோடு நின்றுவிடாமல் அனைத்துப்பள்ளிகளுக்கும் பரவவேண்டும்..இப்பதிவைப்படிக்கும் நண்பர்கள் உங்களுக்குத் தெரிந்த ஆசிரிய நண்பர்கள் யாரேனும் இருந்தால் அவர்களுக்கும் பகிருங்கள்..

இன்று ஒரு பள்ளி நாளை லட்சம் பள்ளிகளாக மாறலாம்...இன்று பிஞ்சுக்குழந்தைகளின் மனதில் நாம் விதைக்கும் சிறிய விதைகள் நிச்சயம் ஒருநாள் விருட்சமாக தழைத்தோங்கும் என்ற பேராசைக்கனவுகளோடு..உங்கள் இரா.கலியபெருமாள்...

Wednesday, 30 October 2013

அரசுப்பள்ளி என்றால் அவ்வளவு அலட்சியமா...?

அரசாங்கப்பள்ளி என்றாலே அவ்வளவாக யாரும் மதிப்பதில்லை..மக்களின் பார்வையில் பல்வேறு காரணங்கள் இருக்கலாம்...ஆனால் நேரடியாக வந்து பார்ப்பவர்களால் மட்டுமே அரசுப்பள்ளியின் குறைபாடுகளுக்கான காரணங்களைப் புரிந்துகொள்ள முடியும்..

மக்களின் பார்வையில் அரசுப்பள்ளி மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுக்கள்,,

1.மாணவர்கள் ஒழுங்காகப் படிப்பதில்லை.

2.மாணவர்கள் ஒழுக்கமாக இல்லை..

3.மாணவர்கள் அழகாக உடையணிந்து வெளிநாட்டுக்காரன் மாதிரி இல்லை.

4.பள்ளி வளாகம், வகுப்பறைகள் அழகாக இல்லை.

5.பல்வேறு மொழிக்கற்பித்தல் இல்லை.

   இன்னும் பலப்பல கூறிக்கொண்டே இருப்பார்கள்...

ஆனால் தனியார் பள்ளிகளில் படிப்பதால் மட்டுமே ஒருவன் வாழ்க்கையை சுயசார்புள்ளவனாக வாழ்ந்துவிட முடியாது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்..

தனியார் பள்ளி மாணவர்களுக்கு தன் சொந்தக்காலில் நிற்கும் திறமை இருக்குமா என்பதே சந்தேகமே...

மனப்பாடம் மட்டுமே செய்து வாந்தி எடுக்கும் அவர்கள் மேல்படிப்புகளில் பெரிதாக ஜொலிப்பதில்லை..

எல்லாவற்றிற்கும் பிறரைச் சார்ந்தே இருப்பர்..ஒரு சிறிய வேலையைக்கூட சொந்தமாக செய்துகொள்ள இயலாதவர்களாத்தான் இருப்பார்கள்.

அதிகமான தனியார் பள்ளிகளில் உடற்பயிற்சி,விளையாட்டு என்ற பாடவேளையே இருப்பதில்லை..அப்பறம் எப்படி அவர்களால் உடல்திறனோடு இருக்கமுடியும்..

இலட்ச இலட்சமாய் பணத்தை செலவு செய்து படிக்கும் அவர்கள் பணம் சம்பாதிப்பதில் மட்டுமே குறியாக இருப்பார்கள்..அவர்களிடம் அன்பு,கருணை,மனிதாபிமானம் ஆகியவற்றை நிச்சயமாய் எதிர்பார்க்க முடியாது..

சாலையில் ஒருவன் அடிபட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும்போது ஓடிச்சென்று அவனுக்கு உதவி செய்யும் முதல் ஆள் அரசுப்பள்ளியில் படித்த ஒருவனாகத்தான் இருப்பான்..வாழ்க்கையின் இக்கட்டான ஒரு சூழலில் சாதாரண ஒரு செயலைக்கூட தானே செய்து கொள்ளும் ஆற்றல் அரசுப்பள்ளி மாணவனுக்குத்தான் இருக்கும் ..அங்கே தனியார் பள்ளியில் படித்தவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல்தான் தவித்து நிற்பார்கள்..

அடுத்தவங்கள குறைசொல்றத விட்டுட்டு உன் முதுகை முதலில் பார் என்று நீங்கள் சொல்வது புரிகிறது...உண்மைதான் அரசு பள்ளிகளில் ஆங்காங்கே குறைகள் இருப்பதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்...

ஆனால் தனியார் பள்ளிகளின் மாயையான தோற்றத்தைக்கண்டு அரசுப்பள்ளிகளைக் குறைத்து மதிப்பிடாதீர்கள் என்பதே என் கருத்து...அரசுபள்ளிகளிலும் எந்நேரமும் மாணவர்களின் நலனையும் பள்ளியின் வளர்ச்சியையும் பற்றி மட்டுமே சிந்திக்கும் இலட்சக்கணக்கான ஆசிரியர்கள் இங்கே இருக்கிறார்கள்...இப்பதிவை அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்...

நான் காரைக்காலில் பணிபுரிந்தபோது ஒருஆசிரியை சரியாக 9.30 மணிக்கு பள்ளிக்கு வருவார்...ஏதோ பெரிய உலக அரசியல் அறிஞர் போல கையில் செய்தித்தாளோடுதான் பள்ளிக்கு வருவார்...காலையில் வகுப்புக்குள் சென்றதும் செய்தித்தாளைப் பிரித்துப் படிக்கத் தொடங்குவார்...மாலையில் வீட்டுக்குச் செல்லும் வரை செய்தித்தாளின் ஒருவரியைக்கூட விடாமல் படித்துமுடித்து விட்டுத்தான் வீட்டுக்குச் செல்வார்...அவரின் கடமை உணர்ச்சியைக்கண்டு பலசமயங்களில் நான் மெய்சிலிர்த்ததுண்டு..

நல்ல ஆசிரியர்களுக்கு மத்தியில் இதுபோன்ற ஒருசில புல்லுருவிகளால்தான் அனைத்து ஆசிரியர்களுக்கும் அவப்பெயர்...என்ன பிரச்சினையென்றால் மற்ற அரசுத்துறைகளில் தவறு செய்தால் பெரிதாக எந்த இழப்பும் ஏற்படாது..ஆனால் ஒரு ஆசிரியர் சரியில்லையென்றால் அவரிடம் படிக்கும்  அத்தனை மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என்பதை அவர்கள் உணரவேண்டும்...நிச்சயம் அவர்கள் உணரமாட்டார்கள்..

நம்ம நாட்டுல எப்பவுமே அன்பா சொன்னா எவணும் கேக்க மாட்டான்..தண்டனை கிடைக்கும் என்ற பயம்வந்தால் மட்டுமே ஒழுங்கா வேலை செய்வாங்க..அத்தகைய ஆசிரியர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்.. அப்படி நடந்தால் அரசுப்பள்ளிகளும் ஒருநாள் அகிலத்தில் உயரும்...

ஏதேதோ எழுத நினைத்து எங்கேயோ முடித்திருக்கிறேன்...பின்னூட்டங்களில் மீதமிருப்பவற்றை அலசுவோம்...நன்றி...

Saturday, 26 October 2013

தீபாவளியோடு சேர்த்து எங்கள் பள்ளிக்கும் தீப ஒளி ஏற்றுங்கள்...

நான் சிறுவயதில் படித்த பள்ளியிலேயே ஆசிரியராக பணிபுரிவதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்...என்னை ஒரு ஆசிரியராக்கிய பள்ளிக்கு நான் ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் மனதை அரித்துக்கொண்டிருக்கிறது...என் மாணவனுக்கு நான் என்ன செய்தேன் என்று என்னை நானே அடிக்கடி கேட்டுக்கொள்வேன்..புதுச்சேரி மாநிலத்தில் ஒரு சிறந்த பள்ளியாக மாறிக்கொண்டிருக்கிறது எங்கள் பள்ளி...மாணவர்களின் நலனையும் பள்ளியின் வளர்ச்சியையும் பற்றியுமே சிந்திக்கும் சிறப்பான பத்து ஆசிரியர்களைக் கொண்ட பள்ளி...தனியார் பள்ளிகளுக்கு இணையாக எங்கள் பள்ளியையும் முன்னேற்ற வேண்டும் என்று முயற்சித்து வருகிறோம்..இந்தியாவின் சிறந்த ஆயிரம் பள்ளிகளில் ஒரு பள்ளியாக எங்கள் பள்ளியின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது...தேசிய அளவிலான ஓவியப்போட்டியில் பங்கேற்று எங்கள் பள்ளி மாணவர்கள் மூன்று முறை டெல்லி சென்று வந்திருக்கிறார்கள்...புதுவை மாநிலத்திலேயே தேசிய அளவிலான ஓவியப்போட்டிக்கு இதுவரை வேறு எந்த அரசுப்பள்ளியும் தேர்வு பெற்றதில்லை என்பதைப் பெருமையாகக் கூறிக்கொள்கிறேன்..அழகான மூலிகைத்தட்டம் ஒன்றை வைத்து சிறப்பாக பராமரிக்கிறோம்...அரசு பள்ளி என்றாலே 30 முதல் 40 மாணவர்கள்தான் படிப்பார்கள் என்ற நிலையில்லாமல் எங்கள் பள்ளியில் 320 மாணவர்கள் படித்து வருகின்றனர்..புதுச்சேரியிலேயே அதிக மாணவர்களைக்கொண்ட அரசு தொடக்கப்பள்ளிகளில் எங்கள் பள்ளியும் ஒன்று...எங்கள் பள்ளியின் வளர்ச்சிகளை மேலும் அதிகரிக்கவும் கணினிக்கல்வியை மேம்படுத்தவும் கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்தவும் உங்களால் இயன்ற நிதி உதவியை வழங்குமாறு கேட்டுகொள்கிறேன்..எங்கள் பள்ளியின் அவ்வப்போதைய வளர்ச்சியை gpsmadukarai.blogspot.com என்ற வலைப்பூவில் அறிந்துகொள்ளுங்கள்..சினிமா பார்ப்பதற்கும்,ஓட்டலில் சென்று பந்தாவாக சாப்பிடுவதற்கும் எவ்வளவோ பணத்தை வீணாக்குகிறோம்..அதில் ஒரு சிறுபகுதியை  எங்கள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கினால் ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த பல மாணவர்களுக்கு செருப்பு வாங்கவும் நோட்டு புத்தகம் வாங்கவும் உதவும்...ஆயிரக்கணக்கில் செலவுசெய்து பட்டாசுவாங்கி வளிமண்டலத்தை கரிமண்டலமாக்கிக் கொண்டிருக்கும் கணவான்களே !!!
அதில் ஒரு பட்டாசுசரம் வாங்கும் பணத்தை ஒரு ஏழைமாணவனுக்குக் கொடுத்தால் கிழிந்த ஆடைக்குப் பதிலாக ஒரு நல்ல சீருடை வாங்கித்தர முடியும்...ஒரு ஏழை மாணவனின் வாழ்வில் ஒளியேற்றிய பெருமை உங்களையும் சாரும்...சென்ற ஆண்டும் இதேபோல் ஒருசில நண்பர்களிடம்  உதவிகேட்டிருந்தேன்..என்னுடைய வங்கிக்கணக்கிற்கு பணம் போடுமாறு கேட்டது எவ்வளவு பெரிய தவறு என்பதைப் பின்புதான் அறிந்துகொண்டேன்..என்னுடைய பெயருக்குப் பணம் அனுப்பினால் அப்பணம் தவறான முறையில்கூட பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது...ஆகவே உங்களால் முடிந்த சிறு உதவியானாலும் பரவாயில்லை..(.சிறுதுரும்பும் பல்குத்த உதவும்..).  GOVT PRIMARY SCHOOL,MADUKARAI,PUDUCHERRY-605105 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு நட்புடன் வேண்டுகிறேன்...புதுச்சேரியின் ஒரு முன்மாதிரிப் பள்ளியாக எங்கள் பள்ளியும் ஒருநாள் மாறும் என்ற கனவுகளோடு .......உங்கள் கலியபெருமாள்...

Wednesday, 9 October 2013

மாமியார் மருமகள் பிரச்சினைகள்- ஒரு சமநிலையான அலசல்.

EVERY HOME HAS A SKELETON IN ITS CUPBOARD என்றொரு பழமொழி உண்டு ஆங்கிலத்தில்..வீட்டுக்கு வீடு வாசற்படி என்பார்கள் தமிழில் அழகாய்...ஆம் பிரச்சினைகள் இல்லாத குடும்பங்களும் இல்லை ,மனிதனும் இல்லை..ஆனால் இந்தியாவில் மனிதனால் கடைசி வரை தீர்க்கவே முடியாத இரண்டு பிரச்சினைகள் உண்டென்றால் அது கடன் பிரச்சினையும் ,மாமியார் -மருமகள் பிரச்சினையும்தான்.

.நீ என்னப்பா பொம்பள மாதிரி லேடிஸ் பிரச்சினை பத்திலாம் பேச ஆரம்பிச்சட்ட என்று கேட்பது புரிகிறது...ஆனால் இப்பிரச்சினையால் நடுவில் மாட்டிக்கொண்டு இருதலைக்கொள்ளி எறும்பாய் சிக்கித்தவிப்பது நாம்தானே....கண்டுபிடிச்சீட்டீங்களா..(ஆமாம் அதேதான் நம்ம வூட்லயும் இதே பிரச்சினைதான்..)

அந்தக்காலத்தில் நிறைய கல்வியறிவில்லாக் காலத்தில் மட்டுமல்ல வளர்ந்துவரும் இந்த கம்ப்யூட்டர் காலத்திலும் தீர்க்கமுடியாத ஒரே பிரச்சினை இந்த மாமியார்-மருமகள் பிரச்சினைதான்...

இப்பிரச்சினைக்கெல்லாம் ஒரே காரணம் ஈகோ பிரச்சினைதான்..விட்டுகொடுக்கும் மனப்பான்மை இருவரிடமுமே இல்லாமல் போவதுதான்...ஆண்டு அனுபவித்து பல்வேறு அனுபவங்களைப் பெற்ற பெரியவர்களே விட்டுக்கொடுத்து போகாதபோது  இருபது வயது மருமகளிடம் எப்படி விட்டுக்கொடுக்க எதிர்பார்க்க முடியும்...

நான்  என் மனைவியிடம் அடிக்கடி சொல்லுவேன்...ஆயிரம் ஆம்பளங்க இருந்தாலும் அந்த இடத்துல எந்த பிரச்சினையும் வராது..ஆனா ரெண்டு பொம்பளங்க போதும் ஒரு ஊரே அழியறதுக்கு என்று...(நல்ல மாமியார் மருமகள் யாராச்சும் இருந்தா அடியேன அடிக்காம மன்னிக்கனும்)

முக்கியமாய் பிரச்சினை வரும் ஒருசில காரணங்களை இங்கே பட்டியலிடுகிறேன்..அவை எல்லா காலத்திற்கும்,எல்லாருக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்..

1.மாமியார் சொன்ன சாப்பாட்டை மருமகள் செய்யவில்லை.
2.வேறு யாரையோ திட்டும்போது தன்னைத்தான் திட்டுகிறார்கள் என்று நினைத்துக்கொள்வது(உண்மையிலும் அப்படி நடப்பதுண்டு)..
3.தன் வீட்டார் வரும்போது மாமியார் அவர்களிடம் பேசாமல் அவமதிப்பது..
4.சரியான நேரத்திற்கு சாப்பாடு தயார் செய்யாமல் அல்லது பரிமாறாமல் இருப்பது..
5.புதிதாக முளைத்திருக்கும் பிரச்சினை- தொலைக்காட்சி பார்ப்பதில் மாமியார் மருமகளிடையே உள்ள கருத்து வேறுபாடு...

எந்தப்பக்கம் சுற்றிப்பார்த்தாலும் பிரச்சினை இதைச்சுற்றித்தான் இருக்கும்..

இருவரின் சண்டையெனும் தீயில் நடுவில் மாட்டிக்கொண்டு கருகுவது கணவன்மார்கள்தான்..அந்தக்காலத்தில் ஸ்டவ் வெடித்து மருமகள்கள் மட்டும் தான் கருகினார்கள்..ஆனால் இப்போ அவங்க ரொம்ப தெளிவாயிட்டாங்க..நம்மள எரியவிட்டுட்டு அவர்கள் குளிர் காய்கிறார்கள்..இதனாலதான் நெறைய ஆம்பளைங்க கருப்பா இருக்காங்க போலப்பா...

இதில் கணவனாகப்பட்டவன் யார்பக்கம் பேசமுடியும்..யாரை விடுவது,யாரை விட்டுக்கொடுப்பது  ...முதியோர் இல்லங்கள் தோன்றுவதை நான் சத்தியமாய் நியாயப்படுத்தவில்லை..ஆனால் அவை தோன்ற என்ன காரணம் என்று ஒருதலைப்பட்சமாய் யோசிக்காமால் இருபக்கமும் யோசித்துப்பாருங்கள்..பெற்ற தாயை தெருவில் விடும் அளவுக்கு உலகில் எல்லோருமே மனசாட்சி இல்லாத மனிதர்களா...

இங்கிருந்தால்தான் எப்பொழுதும் பிரச்சினையாய் இருக்கிறது..அவர்கள் அங்காவது நல்லபடியாய் இருக்கட்டும் என்று கூட அந்த தாயின் மகன் நினைத்திருக்கலாம் அல்லவா  ...அவனும் என்னதான் செய்வான்..

நீ சொல்வதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றுதானே கூறுகிறீர்கள்...பெற்றதாய் தந்தையர் முக்கியம்தான்...இந்தியாவைப் பொறுத்தவரை ஒருவனுக்கு ஒருத்திதான்...மனைவி சரியில்லையென்று தினம் ஒரு திருமணம் செய்யமுடியுமா...எனக்கு என் தாய்தந்தையர்தான் முக்கியம்.,நீ தேவையில்லை என்று ஒவ்வொரு கணவன்மாரும் கூறத்தொடங்கிவிட்டால் அப்புறம் இந்தியாவில் ஒருநாளைக்கு ஒருலட்சம் விவாகரத்துக்கள் அரங்கேறும்...

மாமியார்கள் தன் மருமகளை மறு மகளாய்ப் பார்க்கும் காலம் வரும் வரை இப்பிரச்சினை ஓயாது..மருமகள்களும் மாமியாரை மற்றொரு தாயாய் பார்க்கும் வரை இப்பிரச்சினை மாறாது....

ஆயிரம் முதியோர்கள் முதியோர் இல்லத்தில் இருக்கிறார்கள்  என்றால் அவர்களின் அத்தனை பிள்ளைகளுமே சுயநலக்காரர்கள்,மனசாட்சியே இல்லாதவர்கள்  என்று அர்த்தமல்ல என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து..(ஐயோ சத்தியமா நான் அப்படிலாம் எதுவும் பண்ணலீங்க..என்னை தப்பா நெனைக்காதீங்க..)

இப்பதிவு எழுதத் தொடங்கும்போதே எதிர்மறையான விமர்சனங்கள் வரும் என்று தெரியும்..நான் ஏதாவது தவறாக எழுதியிருந்தால் மன்னிக்கவும்...இன்னும் விரிவாக எழுதவேண்டும் என்றுதான் ஆரம்பித்தேன்..ஆனால் மாமியார்-மருமகள் பிரச்சினைய ஒருநாள்ள  பேசிமுடிக்க முடியாதுப்பா...எனக்கு இப்பவே கண்ணக்கட்டுது..ஆளவிடுங்க சாமி...

Monday, 7 October 2013

இரத்தம் கொடுக்கப் போன கதை...

பதிவுலகம் பக்கம் தலைகாட்டி ரொம்ப நாளாச்சு..நீங்க எல்லாம் என்ன மறந்து இருப்பீங்கனு நெனைக்குறன்..(அப்புடியே போய்த் தொலைய வேண்டியதுதானேடா..உன்ன யாரு ரீஎன்ட்ரிலாம் கொடுக்கச் சொன்னது...இருந்தாலும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத வேதாளமாய் உங்கள் முன் மீண்டும் வருவதில் மகிழ்ச்சி)...

இணைய இணைப்பு இல்லாததாலும் பள்ளிப் பணிகளில் மூழ்கிவிட்டதாலும் பதிவுகள் எழுதமுடியவில்லை..எங்க ஊர்ல இப்பதான் காலாண்டு விடுமுறை..என் இம்சையை இந்த ஒருவாரம் பொறுத்துக்கோங்க...

கொஞ்ச நாட்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம்..விடுமுறை நாளொன்றில் பள்ளியில் என்னுடன் பணிபுரியும் நண்பன் மோகனிடமிருந்து காலையிலயே செல்பேசியில் அழைப்பு வந்தது..சற்று பதற்றத்துடன் பேசினான்...தன்னுடைய நண்பனின் மனைவிக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் இருப்பதாகவும் உடனடியாக B NEGATIVE இரத்தம் வேண்டும் என்றும் கூறினான்...என்னுடைய இரத்தம் அதே வகைதான் நானே தருகிறேன் என்று கூறினேன்...

உடனே நான் கனவுலகில் மிதக்க ஆரம்பித்துவிட்டேன்...தேர் கொடுத்தவன் ,போர்வை கொடுத்தவன் எல்லாம் வள்ளல் எனும்போது நான் என் உடம்பின் இரத்தத்தையே தானமாகத் தரப்போகிறேன்..அப்படியென்றால் நானும் வள்ளல்தானே...நாளைக்கு நம்ப பேர்லாம் பேப்பர்ல வரும்...பாடப்புத்தகத்துல்லாம் நம்மளப்பத்தியும் எழுதுவாங்கனு ஓவரா பில்டப்லாம் பண்ணிக்கிட்டு கிளம்பினேன்...

அங்க ஒருத்தங்க உயிருக்கு போராடிட்டு இருக்காங்க..நீ என்னானா சல்லிப்பயலாட்டம் கனவு கண்டுட்டு இருக்கியானு திட்டாதீங்க..பொதுநலத்துலயும் கொஞ்சம் சுயநலம் இருக்கத்தானே செய்யுது...

எங்கள் ஊரிலிருந்து கிட்டத்தட்ட 45 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் புதுச்சேரியின் ஒரு புகழ்பெற்ற தனியார் மருத்துவமனையில் அவரைச் சேர்த்திருந்தார்கள்...நானும் உடனடியாக கிளம்பினேன்...

உடனே என் மனைவி வந்து போகாதே போகாதே என் கணவா பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் என்று பாடத்தொடங்கிவிட்டாள்...யாரென்றே தெரியாதவர்களுக்கு நாம் ஏன் ரத்தம் கொடுக்க வேண்டும்,நீ என்ன மாமனா மச்சானா என்று வீரபாண்டிய கட்டபொம்மன் வசனமெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டாள்...

நம்ம ஊரு பொண்ணுங்க நாடகத்த பாத்துட்டு நாலுமணி நேரம் அழுவாங்க..ஓவர் செண்டிமென்ட்லாம் பேசுவாங்க...ஆனா அடுத்தவங்களுக்கு உதவி செய்யனுனா மட்டும் சுயநலமா மாறிடுவாங்க...ஊர்ல எத்தன பேரு இருக்காங்க அவங்களாம் செய்யட்டும்..நாம் ஏன் செய்யவேண்டும் என்பார்கள்..(தாய்க்குலம்லாம் உடனே சண்டைக்கு வந்துடாதீங்க...நான் எல்லா பெண்களையும் சொல்லவில்லை...)

ஒருவழியாக என் மனைவியை சமாதானப்படுத்திவிட்டுப் புறப்பட்டேன்..நண்பனின் பைக்கில் வேகமாகச் சென்றோம்..ஒருமணி நேரத்தில் மருத்துவமனையை அடைந்துவிட்டோம்...என் நண்பன் மோகனின் நண்பர் அழுதுகொண்டிருந்தார்...அவரை ஏதோ சமாதானம் செய்துவிட்டு இரத்தம் கொடுக்கப் புறப்பட்டேன்...

இரத்தம் கொடுக்கும் இடத்தில் ஒரு இளம்பெண் இருந்தார்...நீங்க இதுக்கு முன்னாடி இரத்தம் கொடுதததுண்டா,ஏதாவது வியாதி இருக்கிறதா,ரொம்ப நாளா ஏதாச்சும் மாத்திரை சாப்டுண்டு இருக்கேளா போன்ற கேள்விகளைக் கேட்டார்..எல்லாவற்றுக்கும் ஹரிசாண்டலாய் தலையாட்டினேன்...

உண்மையிலேயே உங்கள் இரத்தம் b negative தானா என்று கேட்டார் அந்தப்பெண்...உண்மையைத்தவிர வேறொன்றுமில்லை என்றேன்..ஏதாவது எய்ட்ஸ் இருந்து தொலைக்கப்போகுதுனு இரத்தம் செக் பண்ணாங்க...அந்தப் பெண் திரும்பி வந்து கூறியபதில் என்னை அதர்ச்சிக்குள்ளாக்கியது...

ஏங்க உங்க இரத்தம் பி நெகடிவ்வே இல்ல ..பி பாஸிட்டிவ்...பெருசா வந்துட்டார் கர்ணமகாராஜா மாதிரி என்று அந்தப்பெண் நினைத்ததை என்னால் யூகிக்க முடிந்தது...எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை..இல்லைங்க நான் ஏற்கனவே இரத்தப் பரிசோதனை செய்திருக்கிறேன்,எனக்கு நன்றாகத் தெரியும் என்றேன்..அந்தப் பெண் ஏற்றுக்கொள்ளவில்லை...அங்கிருந்த வேறொரு ஆளிடம் என்னுடைய இரத்த மாதிரியைக்காண்பித்தார்...அவரும் பார்த்துவிட்டு  ஆமாம் பி பாஸிட்டிவ்தான் என்று கூறிவிட்டார்...கூச்சத்தால் என் முகம் நாணியது...(பேப்பர்ல பேர் வராம போயிடுச்சு அத விடுங்க)..என் நண்பனின் நண்பர் என்னைப்பற்றி என்ன நினைப்பாரோ...(கைகொட்டிச் சிரிப்பார்கள் ஊரார் கைகொட்டிச் சிரிப்பார்கள் என்று பேக்ரவுண்டில் பாட்டெல்லாம் ஓடத்துவங்கியது..)எப்படியோ இரத்தவங்கியில் இருந்த இரத்தத்தைக்கொண்டே நண்பரின் மனைவியைக் காப்பாற்றிவிட்டார்கள்..

போனமச்சான் திரும்பிவந்தான் என்ற கதையாய் வெட்கத்தோடு திரும்பிவந்தேன்...வீட்டிற்கு வந்து நடந்ததை என் மனைவியிடம் கூறினேன்..அவளுக்கோ உள்ளூற மகிழ்ச்சி எப்படியோ நம் கணவருக்கு இரத்தம் எடுக்கவில்லை என்று...அடுத்து நான் செய்த முதல்வேலை ஒரு லேப் க்கு சென்று என்னுடைய இரத்தத்தைப் பரிசோதனை செய்தேன்..

அங்கே மீண்டும் அதிர்ச்சி காத்திருந்தது....கன்ஃபார்மா உங்க இரத்தம்  B NEGATIVE தான் என்றார்கள்....அந்தப்பொண்ணு ஏம்பா அப்புடிச் சொல்லுச்சு..நான் எதுக்குப்பா சரிப்பட்டு வரமாட்டன்......

Monday, 3 June 2013

என் சந்தேகத்தைக் கொஞ்சம் தீர்த்து வையுங்க...

ஒன்றரை மாத கோடை விடுமுறையில் எங்கும் செல்லவில்லை..மனம் மற்றும் பணப்பிரச்சினைகளால் எங்கும் செல்லாமல்  வீட்டிலேயே முடங்கிக்கிடந்தோம்...நேற்று திடீரென்று எங்காவது சுற்றுலா செல்லலாம் என்று முடிவெடுத்தேன்...இடமாற்றம் ஏற்பட்டால் ஏதாவது உடல் மாற்றம்,மனமாற்றம் ஏற்பட்டு வீட்டில் ஏதாவது நல்ல செய்தி (குழந்தைப்பேறு)  வராதா என்றொரு நப்பாசைதான்..

என்னுடைய நண்பன் புண்ணியமூர்த்தியின் காரில் குடும்ப சமேதமாய் செல்லலாம் என்று முடிவெடுத்த வேளையில்  எங்கு செல்லலாம் என்ற குழப்பம் தொற்றிக்கண்டது...தென்தமிழகம் செல்லலாம் என்றொரு முடிவு..கேரளாவில் உள்ள வயநாடு அல்லது கர்நாடகாவில் உள்ள  கூர்க் மலைக்கு செல்லலாம் என்பது என் நண்பனின் விருப்பம்..எனக்கும் அதுதான் விருப்பம்...

இருந்தாலும்  தென்மேற்கு பருவமழை சீசன் தொடங்கிவிட்டதால் எனக்குள் சிறுபயம்..இவ்வளவு தூரம் சென்று வீணாகிவிடுமோ என்ற சலனம்...கேரளா ,கர்நாடகாவில் இந்த சீசனில் நல்ல மழை பெய்யும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்..தெரிந்தே சென்று மாட்டிக்கொள்ள கொஞ்சம் பயமாய்த்தான் இருக்கிறது...

அதனால்தான் முடிவை உங்கள் கையில் விட்டுவிட்டேன்...கர்நாடகாவில் இருக்கும் நண்பர்கள் யாரேனும் இப்பதிவைப் படித்தால் எனக்கு உதவுங்கள்..இப்போதைக்கு அங்குள்ள காலநிலை ,வந்தால் என்ஜாய் பண்ணமுடியுமா..தயவு செய்து என் குழப்பத்தைத் தீர்த்து வையுங்கள்...

வேறு ஏதேனும் சிறந்த இடம் இருந்தாலும் கூறுங்கள்...நண்பனின் காரில்தான் செல்வதால் ஒன்றும் பிரச்சினையில்லை..இன்று இரவு கூட இடம் முடிவு செய்து உடனே கிளம்பி விடுவோம்...

இதற்கெல்லாம் ஒரு பதிவு அவசியமா என்று திட்டாதீர்கள்.. நிமிடக்கதைபோல நிமிடப்பதிவு என்று வைத்துக்கொள்ளுங்களேன்..இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறையாவது நண்பர்களின் பதிவுகளையும் கருத்துக்களையும் படிக்காமல் இருந்தால் என்னவோ மனதிற்கு ஒருமாதிரியாக இருக்கிறது..அந்தளவுக்கு பதிவுலகோடு ஒன்றிவிட்டேன்...

ஒருசில பிரச்சினைகளால் நண்பர்களின் பதிவுகளுக்கும்,கருத்துரைகளுக்கும் பதிலளிக்க முடியவில்லை.. மன்னிக்கவும்..சுற்றுலா சென்றுவந்து புத்துணர்ச்சியோடு  புதிய பதிவோடும் கருத்துக்களோடும் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்..நிலுவையில் இருக்கும் என்னுடைய சுற்றுலா மசோதாவைச் சட்டமாக்க நீங்கள்தான் உங்கள் கருத்துக்கள் மூலம் உதவ வேண்டும்..காத்திருக்கிறேன்...(பின்குறிப்பு..இப்பதிவு இந்த ஒப்புக்கு சப்பாணி பதிவரின் ஐம்பதாவது பதிவு..என்னையும் ஏற்றுக்கொண்ட என் நண்பர்களுக்கு நன்றி..)

Wednesday, 29 May 2013

வெளங்காத வீணாப்போன வெடி கலாச்சாரம்..

ஒருவாரகாலமாக எங்கள் ஊரில் திரௌபதை அம்மன் கோவில் திருவிழா பிரம்மாண்டமாகவும் வெகுவிமரிசையாகவும் நடைபெற்று வருகிறது..நேற்று கூத்தாண்டவர் திருக்கல்யாணம் ,இன்று தேர்த்திருவிழா ,நாளை மறுநாள் தீமிதி திருவிழா என்று ஊரே களை கட்டும்..விழாக்களைக் கொண்டாடுவதன் நோக்கமே உழைக்கும் மக்களின் மகிழ்ச்சிக்காகவும் உறவினர்களோடு ஒன்றுகூடி கலந்து பேசி மகிழ்வதற்குமே..இதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை..

ஆனால் இந்த திருவிழா காலங்களில் வெடிவிடும் கலாச்சாரம் அதிகரித்து வருவதைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..நல்ல விஷேஷத்துக்கும் வெடி வெடிக்கிறாங்க..பிறந்தநாளுக்கும் வெடி ,இறந்த நாளுக்கும் வெடி,அரசியல ஜெயிச்சாலும் வெடி, கிரிக்கெட் மேட்சுல ஜெயிச்சாலும் வெடி..முடியலப்பா..இவங்களாம் இந்த சமுதாயத்துக்கு என்னதான் சொல்ல வராங்கனு தெரியல..

இந்த மூன்று நாட்களில் மட்டும் எங்கள் ஊரில் வெடிக்கப்பட்ட வெடிகளின் எண்ணிக்கை நிச்சயமாக ஆயிரத்தைத் தாண்டும்...நேற்று இரவு சாமி ஊர்வலத்தின்போது பத்து மணி தொடங்கி பன்னிரண்டு மணிவரை தொடர்ச்சியாக வெடி வெடித்து சுற்றுச்சூழலை மாசுபடுத்தி வருகின்றனர்..

மஞ்சள் நீராட்டு விழாவிற்குக்கூட மத்திய மந்திரிகளை அழைத்து வெட்டி பெருமைக்காக வெடிவிட்டு சாகடிக்கிறார்கள்..வளைகாப்புக்கெல்லாம் வார்டு கவுன்சிலரை வரவேற்று வாணவேடிக்கை விட்டு தொல்லை கொடுக்கிறார்கள்..இருந்த பறவைகளை எல்லாம் இப்படி வெடிவிட்டே துரத்தி இயற்கையை அழித்துவிட்டீர்கள் .. இன்னும் என்னென்ன செய்யப்போகிறீர்களோ...


நம்ம இந்தியாவுல மகிழ்ச்சியைக் கொண்டாட அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி வெடிவிடுவதுதான்..இதில் வேற போட்டி போட்டுக்கிட்டு வெடிக்கிறாங்க..கொஞ்சநாள் போன இதுல கின்னஸ் சாதனைலாம் கூட முயற்சி பண்ணுவாங்க போல..யாரோ ஒருவரைக் கூப்பிட்டு ஏன் நீங்கள் வெடிவெடித்து மகிழ்ச்சியைக் கொண்டாடுகிறீர்கள் என்று கேட்டால் எல்லாரும் வெடிக்கிறாங்க நானும் வெடிக்கிறேன் என்பதுதான் பதிலாக இருக்கும்..

நம் மனிதர்களை ஆட்டு மந்தையோடு கூட ஒப்பிடமுடியாது..இப்ப இருக்கற ஆடுலாம் கூட தெளிவா இருக்கு..ஒரு ஆடு பள்ளத்தில் விழுந்தால் எந்தவொரு ஆடும் பின்னால் வரிசையாக சென்று விழுவதில்லை..ஆனால் மனிதன் மட்டும்தான் யாரோ ஒருவர் குழியில் விழுந்தால் வரிசையாக பின்னால் சென்று விழுகிறார்கள்.. உலகின் பகுத்தறிவற்ற ஒரே உயிரினம் மனித இனம் மட்டுமே..

இருக்கும் ஒலிமாசுபாடும் காற்றுமாசுபாடும் போதாதா..ஏன் இப்படி தினமும் பட்டாசுகளையும் வெடிகளையும் வெடித்து சுற்றுச்சூழலை மாசுபடுத்திக்கொண்டிருக்கிறீர்கள்..இல்லை இல்லை நீ சொல்வதை எல்லாம் நாங்கள் கேட்கமாட்டோம்..நாங்கள் இந்தியநாட்டின் பரிபாலணங்களையும் பண்பாட்டையும் கட்டிக்காப்பாற்றியே தீருவேன் என்கிறீர்களா...இருநூறு வெடி விட நினைக்கிறீர்களா..அதை ஐம்பதாக குறைத்துக்கொள்ளுங்கள்..மீதிப்பணத்தை ஏதாவது ஒரு அனாதை இல்லத்திற்கு வழங்கி உங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடலாமே.. அரசியலில் வெற்றி அடைபவர்கள் பொதுமக்களுக்கு ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கி உங்கள் மகிழ்ச்சியைப் பகிரலாமே..

ஏதோ நான் சொல்லறத சொல்லிட்டன்..இரண்டு பேராவது பின்பற்றினால் எனக்கு மகிழ்ச்சியே...அடுத்த பதிவில் தொடர்கிறேன்..நன்றி..

Friday, 24 May 2013

கொஞ்சம் தமிழும் கொஞ்சம் சிரிப்பும்

பிளாக்கில் ஒழுங்காக எழுத ஆரம்பித்து இரண்டு மாதங்கள்தான் ஆகிறது..இரண்டு மாதத்திற்குள் என்னுடைய பிளாக்கின்  total pageviews  அதற்குள் 5000த்தை தாண்டிவிட்டது. என்ன நினைச்சா எனக்கே கொஞ்சம் சிரிப்பு சிரிப்பாத்தான் வருது..ஒரு கதை எழுதத்தெரியாது, கவிதை தெரியவே தெரியாது, அடுக்கு மொழியில் எழுதத்தெரியாது,உவமை-உருவகமெல்லாம் ஒன்றும் தெரியாது..ஆனால் என்னையும் ஒரு மனிதனாக மதித்து என்னுடைய பதிவுகளையும் தொடர்ந்து படித்து வரும் வலையுலக நண்பர்களுக்கும்  இணைய வாசகர்களுக்கும் இந்த தருணத்தில் இனிய நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்..

ஏதோ என் மனதில் தோன்றும் எண்ண அலைகளையும் அனுபவங்களையும் உங்களுடன் பகிர்ந்து வருகிறேன்..ஆனால் எந்த ஒரு பதிவிலும் எந்த ஒரு மதத்தினரையோ,சாதியினரையோ,தனிப்பட்ட மனிதரையோ குற்றஞ்சொன்னதில்லை,குறைகூறியதில்லை..யார் மனதையும் புண்படுத்தும் விதமாக எந்தவொரு பதிவையும் எழுதவில்லை..இனிவரும் காலங்களிலும் நிச்சயம் அதைப் பின்பற்றுவேன்..

என்னுடைய பதிவுகள் எல்லாம் பாலச்சந்தர் சார் படம் மாதிரி..பெருசா காமெடிலாம் ஒன்னும் இருக்காது..படிக்கறதுக்கு கொஞ்சம் பொறுமை வேணும்..கொஞ்சம் ட்ரையாத்தான் இருக்கும்..அதனால்தான் இன்று கொஞ்சம்
நையாண்டியாக ஒரு பதிவு எழுதலாம் என்று முயற்சித்திருக்கிறேன்..யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதவில்லை..குற்றம் குறையிருந்தால் கூறுங்கள்..

ஒரு தமிழ் 'குடிமகன்' குடிப்பதற்காக சாராயக்கடைக்குச் சென்று கொண்டிருக்கிறார்..அவரைப்பிடித்து வந்து  பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கு ஒரு வினாத்தாள் எடுக்கச்சொன்னால்  எப்படி எடுப்பார் என்பதை இங்கே பதிவாக்கியுள்ளேன்..(தமிழைக் கொச்சைப்படுத்தும் எண்ணமெல்லாம் இல்லை..சிரிப்பதற்காக மட்டுமே..)

 1.குறிப்பு வரைக-பீர்,பிராந்தி,ரம்

2.பிரித்து எழுதுக-சாராயக்கடை

3.பொன்முடியார்   பாடலால் அறியப்படும் குடிகாரர்கள் பற்றிய செய்திகளைக் கூறுக.

4. இடம் சுட்டி பொருள் விளக்குக-சாராயம் குடிச்சாக்கா சங்கீதம் தானா வரும்

5.குடித்துவிட்டு குப்புறக் கிடந்தான்-செயப்பாட்டு வினை வாக்கியமாக்குக.

6.தண்ணித்தொட்டி தேடிவந்த கண்ணுக்குட்டி நான் என்னும் பாடலால்

அறியப்படும் வரலாற்றுச்செய்தி யாது..?

7.ஒயின்ஷாப்பின் உன்னதத்தை குவார்டர் கோவிந்தன் எவ்வாறு படம் பிடித்து காட்டுகிறார்.?

8.பெயர்க்காரணம் தருக-கள்ளச்சாராயம்.

9.வாந்தி எடுத்த தலைவனைப் பார்த்து தலைவி தோழியிடம் கூறியது யாது.?

10.தேன்மயங்கு பீரினும் இனிது அவர்நாட்டு பனைமரத்து கள் என்று தலைவன் கூறுவதிலிருந்து பெறப்படும் கருத்து யாது.?


11.சாராயத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் யாவை..?

12.சரக்கடித்தலினும் சைடிஷ் சாப்பிடுவதே சிறந்தது-விளக்குக.

13.ஒயின்ஷாப்பின் இலக்கணமாய் குறள் கூறுவது யாது..?

14.செங்கோல் மன்னன் குடிகாரர்களை எவ்வாறு மதிக்க வேண்டும் என ஆசிரியர் கூறுகிறார்..?

15.குடிகாரர்கள் நிலைமை நெடுநல்வாடையில் எவ்வாறு விளக்கப்பெற்றுள்ளது.?.


இன்னும் சரக்கு மிச்சம் இருக்கு..இருந்தாலும் உங்களுக்கு போதை ஏறிடப்போகுது..போய்ப்படுங்க..அடுத்த பதிவில் தொடர்கிறேன்,நன்றி.....

Wednesday, 22 May 2013

பத்திரமா பாத்துக்கோங்க உங்க பற்களை...

பத்திரமா பாத்துக்கோங்க உங்க தலைமுடிய அப்படினு ஒரு விளம்பரம் பாத்து இருப்பீங்க..இது என்ன தலைப்பு வித்தியாசமா இருக்குனு  கேக்கறீங்களா ..தலைமுடி இல்லாமல் கூட ஒருவர் வாழ்ந்துவிடலாம்..ஆனால் பற்கள் இல்லாமல் ஒருவரின் வாழ்க்கையை நினைத்துப்பாருங்கள்.. நாளுக்குநாள்  புதிதுபுதிதாக முளைத்துவரும் பல்மருத்துவமனைகள் என்ன உணர்த்துகின்றன என்று உங்களுக்குப் புரியவில்லையா..

எப்படி செல்போன் இல்லாத குடும்பத்தைப் பார்க்கமுடிவதில்லையோ அதேபோல் இன்று பல்சொத்தை பிரச்சனை இல்லாத குடும்பத்தைப் பார்ப்பது அரிதாகிவிட்டது..சாம்பலும் செங்கல்தூளும் போட்டு பல்துலக்கிய அந்தக்காலத்தில் கூட இதுபோன்ற பிரச்சினைகள் குறைவாகவே இருந்தன..ஆனால் இன்று புதுப்புது வகையிலெல்லாம் பல் பிரச்சினைகள் பெருகிவருகின்றன..

நீ வாத்தியார் வேலைதானே பாத்த அதுக்குள்ள எப்படி  எம்.பி,பி.எஸ் எல்லாம் படிச்சி எப்ப டாக்டரானனு கேக்கறீங்களா..அப்படிலாம் ஒன்னுமில்லீங்க..இங்கதான் போனவாரமே புடுங்கிட்டாங்க..நீங்களாவது கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோங்க அப்படினு ஒரு social service தாங்க..ரெண்டுவாரமா ப்ளாக் பக்கம் வராம அப்பீட்டாயிப் போனதுக்குக் காரணம் இதாங்க மேட்டர்..

அப்பப்பா பல்வலி ..அது உயி ர்வலி.. என்னதான் வாத்தியார் வேலையில இருந்தாலும் சின்ன வயசுல கொஞ்சம் பல்சுத்தத்துல அக்கறை இல்லாம இருந்ததால இப்போ படாத பாடு படறன்.. என்னுடைய தலைமை ஆசிரியர் அடிக்கடி என்னை நக்கல் அடிப்பார்  என்னையா எனக்கு அறுபது வயசு ஆகப்போகுது..இதுவரைக்கும்  எனக்கு ஒரு சொத்தைப்பல் கூட வந்ததில்லைனு சொல்லிக்கிட்டே இருப்பார்..அவங்கவங்களுக்கு வந்தா தெரியும்னு மனசுக்குள்ள சொல்லிக்குவன்..

இதுவரை என்னுடைய பல்வலி பிரச்சினைக்காக நான் தனியார் மருத்துவமனைக்குச்சென்று செலவு செய்த தொகைமட்டும் எப்படியும் முப்பதாயிரத்தைத் தாண்டும்..பல்வலியைக்கூட தாங்கிக்கொள்ளலாம் போல ஆனால் பல்மருத்துவர்கள் கேட்கும் பணத்தைக் கேட்கும்போது வரும் நெஞ்சுவலியைத்தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை..இதற்கு பயந்தே பல ஏழைமக்கள்  வாழ்நாள் முழுதும் பல்வலியுடனேயே காலத்தைக்கழிக்கின்றனர்..இது நிதர்சனமான உண்மை..

அரசாங்கம் செய்யும் வசதிகளை ஏன் பயன்படுத்த மாட்டுகிறீர்கள்..ஏன் அரசு மருத்துவமனைக்குச் சென்றால் இலவசமாக மருத்துவம் பார்த்துக்கொள்ளலாமேளென்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது.. நானும் ஒரு அரசு ஊழியர்தான் ..அதனால் அரசாங்கத்தைக் குறைசொல்ல விரும்பவில்லை..அங்கே பல நடைமுறைச்சிக்கல்கள் இருக்கக்கூடும்..நான் ஒருமுறை பயங்கரமான பல்வலியோடு எங்கள் ஊரில் இருக்கும் அரசு பல்மருத்துவக்கல்லூரிக்குச் சென்றேன்.. போதாத குறைக்கு அவர்களும் கொஞ்சம் குத்திப்பார்த்துவிட்டு இருந்தவலியை இன்னும் கொஞ்சம் அதிகமாக்கிவிட்டார்கள்..அடுத்தது அவர்கள் கூறியதுதான் கொஞ்சம் அதிர்ச்சியானது..மார்ச் ஒன்றாம் தேதி போன என்னை இன்று போய் அடுத்த மாதம் ஐந்தாம் தேதி காலையில் ஆறு மணிக்குச் சரியாக வந்தால் உங்கள் பல் சொத்தையை அடைத்துவிடுவோம் என்று கூறி அனுப்பிவிட்டார்கள் என்னை..அவர்களையும் குறைசொல்லமுடியாது ..அங்கு அவ்வளவு கூட்டம் வருகிறது..இதனால்தான் நான் தனியார் மருத்துவமனையை நாடிச்செல்ல வேண்டியதாயிற்று..

நான்கு வருடங்களாக நாயாய் அலைந்து கொண்டிருக்கிறேன் இந்த பல்வலியால்..ஆனால் இன்னும் இன்ஃபினிடியாய் தொடர்கிறது..அந்த காலத்தில் எப்படிதான் தாங்கிக்கொண்டார்களோ தெரியவில்லை.பழங்காலத்தில் எப்படி பல் பிடுங்குவார்கள் என்பதை விளக்கும் படம் ஒன்றை ஒட்டியிருந்தார்கள் ஒரு பல்மருத்துவமனையில்..அதைப்பார்த்ததும் அதிர்ந்துபோனேன்..இரண்டு பேர் நோயாளியின் கைகளையும் இரண்டு பேர் கால்களையும் பிடிக்க மருத்துவர் மடாரென்று பிடுங்கிக்கொண்டிருந்தார் பல்லை..இன்றைய காலகட்டத்தில் அதுமட்டும்தான்  நமக்கு ஆறுதலான விஷயம்..

வளர்ந்துவிட்ட மருத்துவ வசதிகளால் மருப்பு ஊசியெல்லாம் போட்டுத்தான் பல்லைப் பிடுங்குகிறார்கள்..அதனால் எந்த ஒரு வலியும் தெரிவதில்லை..சென்ற வாரம்தான் கீழிருக்கும் ஒரு கடைவாய்ப்பல்லை எடுத்து வந்தேன்..கடைசி பல்லென்பதால் கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் பிடுங்கினார் டாக்டர்.. பிடுங்கிய கையோடு 1800 ரூபாய் பணத்தையும் பிடுங்கினார்..நீ எதப்புடுங்கனா எங்களுக்கென்ன..அத ஏன் எங்ககிட்ட சொல்ற..நீ ஆணியே புடுங்க வேணாண்ணுதானே சொல்றீங்க..

நீங்களாவது உஷாரா இருந்துக்கோங்கனுதான்  இந்த பதிவு..இடைப்பட்ட காலத்தில் நான் அறிந்துகொண்ட சில கிராம வைத்தியங்கள் உங்களுக்காக..பல்வலிக்கும் இடத்தில் இரண்டு கிராம்புத் துண்டுகளை வைத்துக்கொண்டால் பல்வலி ஓரளவு குறையும்..படிகாரத்தைவெண்ணீரில் போட்டு வாய்கொப்பளித்தால் ஈறுவலி குறையும்..பல்சொத்தை இருக்கும் இடத்தில் பப்பாளி பால்விட்டால் சொத்தை பரவாமல் இருக்கும்.. இவையெல்லாம் தற்காலிக தீர்வுகளே..வருமுன் காப்பதே நிரந்தரத் தீர்வாக இருக்கும்..

எனவே அன்பார்ந்த பெற்றோர்களே ,ஆசிரியர்களே  உங்கள் குழந்தைகளின் பல் சுத்தத்தில் அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள்..அசைவ உணவு சாப்பிட்டவுடன் வாயைச்சுத்தம் செய்ய கற்றுக்கொடுங்கள்..இரவில் படுக்கும்போது பல்துலக்காவிட்டாலும் பரவாயில்லை, வாயைக்கொப்பளித்து விட்டாவது படுக்கச் சொல்லுங்கள்..

யாருக்கும் தெரியாத மேட்டர அப்படியே சொல்ல வந்துட்டார்டா அப்படிதானே நினைக்கறீங்க..மனிதர்களைப்பற்றித் தெரியாதா..கெட்ட விஷயத்தை ஒருவர் சொன்னாலே கெக்களித்துக்கொண்டு கேட்போம் நாம்..ஆனால் நல்ல விஷயத்தை 400 பேர் 40 முறை சொன்னால்தான் 4 பேராவது கேட்போம்..மறுபடியும் ஒருமுறைக் கூறிக்கொள்கிறேன்  பத்திரமா பாத்துக்கோங்க உங்க பற்களை...அடுத்த பதிவில் தொடர்கிறேன் ..நன்றி..

.

Tuesday, 7 May 2013

பிச்சைக்காரர்களும் மனிதர்கள்தானே...!!

    பிளாக் பக்கம் வந்து ஒருவார காலமாகிவிட்டது..உடலும் மனமும் ஒத்துழைக்காத காரணத்தால் ஒருவாரமாக எதுவும் எழுத முடியவில்லை..நண்பர்களின் பதிவுகளுக்குக் கூட கருத்துரை எழுதமுடியவில்லை..மன்னிக்கவும்..(ஒருவாரமாக நிம்மதியாத்தாண்டா இருந்தோம் அப்படித்தானே சொல்றீங்க..).

சென்றவாரம் முதல் என் மனதை அரிக்கும் ஒரு விஷயத்தையே உங்களுடன் இன்று பகிர விரும்புகிறேன்..மொட்டை போடுவதற்காக சென்றவாரம் கோவிலுக்குச் சென்றிருந்தேன்..நான்கைந்து பிச்சைக்காரர்கள் வரிசையாக அமர்ந்திருந்தார்கள்..பத்து ரூபாய் கொடுத்து அவர்களைப் பிரித்து எடுத்துக்கொள்ளுமாறு கூறிவிட்டுவந்தேன்..உடன்வந்த ஒருசிலர் அந்த பிச்சைக்காரர்களை கேவலமாக பார்த்தது மனதிற்குக் கஷ்டமாக இருந்தது..

மேலே குறிப்பிட்ட மனிதர்களை ஒருசில கேள்விகள் கேட்க விரும்புகிறேன்..
பிச்சைக்காரர்களைப் பற்றிய உங்கள் எண்ணம்தான் என்ன?.  அவர்களுக்கு நாம் ஏன் உதவ வேண்டும் என்பதுதானே ? .. வேறு வழியின்றிதான் பலர் பிச்சையெடுக்கிறார்கள்..பிச்சை எடுப்பது என்பது ஒன்றும் அவ்வளவு சாதாரண காரியமல்ல..ஒரு நாடகத்தில் பிச்சைக்காரன் வேடம் கொடுத்தால்கூட நாம் எவ்வளவு தயங்குவோம்..உண்மையில் பிச்சையெடுப்பவர்களின் மனநிலையை நினைத்துப்பாருங்கள்..

நான் ஒன்றும் பிச்சைக்காரர்களுக்கு வக்காளத்து வாங்குவதற்காக இங்கே வரவில்லை..பிச்சையெடுப்பதை சரியென்றும் நியாயப்படுத்தவில்லை..
உங்களுடைய எண்ணம் என்ன ?  பிச்சைக்கார்கள் பலர் உடல் நன்றாக இருந்தும் உழைக்காமல் நம்மை ஏமாற்றிப் பிழைக்கிறார்கள் என்பதுதானே..!
நீங்கள் வாழ்க்கையில் யாரிடமும் ஒருநாள் கூட ஏமாந்ததே இல்லையா என்பதுதான் என் கேள்வி..

ஒரு கோவிலுக்குச் செல்கிறீர்கள்..அர்ச்சனைத் தட்டெல்லாம் வாங்கிப் படைக்கிறீர்கள்..அர்ச்சகர் தீபத்தட்டை வரிசையாக காட்டி வருகிறார்..உங்கள் பக்கத்தில் இருப்பவர் அர்ச்சகரின் தட்டில் பத்து ரூபாய் போடுகிறார்..உடனே நீங்கள் உங்கள் வெட்டி கௌரவம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக இருபது ரூபாய் போடுகிறீர்கள்..அங்கே உங்கள் வறட்டு கௌரவத்திற்காக ஏமாறவில்லையா..?

நண்பருடன் ஒரு ஓட்டலுக்குச் செல்கிறீர்கள்..இருநூறு ரூபாய்க்குச் சாப்பிடுகிறீர்கள்..பில் கொடுக்கப் போகிறீர்கள்..நான்தான் கொடுப்பேன் என்று உங்களுக்குள் சண்டையெல்லாம் போட்டு முடித்து கடைசியாக யாரோ ஒருவர் பில் பணத்தைக் கொடுக்கிறீர்கள்..வரும்பொழுது உங்களுக்கு பரிமாறிய சர்வருக்கு நம்முடைய வெட்டி கௌரவம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக இருபது ரூபாய் டிப்ஸ் கொடுத்துவிட்டுத்தானே வருகிறோம்..அவர்களுடைய உழைப்புக்குத்தானே கொடுத்தோம் என்பதெல்லாம் வெறும்பேச்சு..எல்லாரும் கொடுக்கிறார்கள், நாமும் கொடுக்கிறோம் என்பதுதானே உண்மை..இங்கெல்லாம் நீங்கள் ஏமாறவில்லையா.. ?

தினம் தினம் ஏமாறும் காதலன்களே நீங்கள் ஒருநாள் கூட உங்கள் காதலியிடம் ஏமாந்ததில்லையா..வருடம் முழுதும் பத்துபைசா பேலன்ஸ்  மட்டுமே வைத்துக்கொண்டு உங்களுக்கு ஒரு மிஸ்டுகால் கொடுத்துவிட்டு மணிக்கணக்காய் உங்களிடம்  பேசி உங்கள் வருமானத்தில் பாதியை ரீசார்ஜ் செலவுக்கே காலி செய்யும் காதலிகளிடம் எந்த ஒரு இளைஞனும் ஏமாந்ததில்லையா..?

ஓட்டலில் சென்று இரண்டு இட்லி ஒரு வடை மட்டும் சாப்பிட்டு விட்டு எண்பது ரூபாய் பில் என்றதும் வாயையும்__________யும் மூடிக்கொண்டு பில்லைக் கொடுத்துவிட்டுத்தானே வருகிறோம்.. ஆனால் பிச்சைக்காரனுக்கு இரண்டு ரூபாய் கொடுக்க நமக்கு மனம் வருவதில்லை..

அப்படியானால் பிச்சையெடுப்பது சரியென்று நான் சொல்லவரவில்லை..சில இடங்களில் அது சமூகக் குற்றமாக்ககூட நடந்துவருவதை நான் மறுக்கவில்லை..நான் சொல்வதெல்லாம் அவர்களையும் சகமனிதர்களாய் மதியுங்கள்..அவர்களும் சதைப்பிண்டம் அடங்கிய உயிர்களே..

பிச்சைக்காரர்கள் இல்லாமல் இருக்கச் செய்வது அரசாங்கத்தின் கடமை..தமிழ்நாட்டின் எத்தனையோ கோயில்களிலும் பொது இடங்களிலும் பலர்  பிச்சையெடுக்கிறார்கள் என்பது அரசாங்கத்திற்கும் காவல்துறைக்கும் தெரியவே தெரியாதா.?. அரசாங்கத்தின் சார்பில் ஒரு சிறுதொழில் நிறுவனம் தொடங்கி அங்கே பிச்சைக்காரர்களுக்கு வேலை கொடுத்து மறுவாழ்வு கொடுக்கலாம்..அவர்களின் பிள்ளைகள் தங்கும் வசதி செய்து பள்ளிக்கூடம் அமைத்து அவர்களுக்குக் கல்வி கொடுக்கலாம்..

உழைக்கும் மக்களையே நீங்கள் உழைக்க வேண்டாம் என்று சொல்லி எல்லா இலவசங்களையும் கொடுத்து நம்மைச் சோம்பிறியாக்கும் இந்த அரசாங்கம் எப்படி பிச்சைக்காரர்களுக்கு  உழைப்பைக் கற்றுக்கொடுக்கும்..?

பிச்சைக்காரர்களைக் கேவலமாகப் பார்ப்பதைத் தவிர வேறு என்ன செய்திருக்கிறோம் நாம்..போக்கிரி படத்தில் விஜய் சொல்வது போல உப்புமாவாச்சும் கொடுத்திருப்போமா.. அபியும் நானும் படத்தில் ஒரு கதையை அற்புதமாக இணைத்திருப்பார் இயக்குநர்..தன் பள்ளி வாசலில் பிச்சை எடுக்கும் ஒருவரைக் கூட்டி வந்து அவர்கள் வீட்டில் வைத்துக்கொள்ளலாம் என்று  திரிஷா தன் தந்தையிடம் வாதிடுவார்..அதில் அவர் வெற்றியும் பெறுவார்..அந்த பிச்சைக்காரனை அவர்கள் குடும்பத்தில் ஒருவராக மதிப்பார்கள்..

 வசதி படைத்த பணக்காரர்கள் ஏன் இதை பின்பற்றக்கூடாது..சினிமாவில் காட்டுவதெல்லாம் நிஜ வாழ்க்கைக்கு ஒத்துவராது என்று பேசாதீர்கள்.. ஏற்றுக்கொள்ள தயங்கும் பல விஷயங்கள்தான் எதிர்காலத்தில்  எதார்த்தமாக மாறியிருக்கின்றன..ஒரு பத்து வருடத்திற்கு முன்னர் எங்கள் ஊரில் நைட்டி அணியும் பெண்களைத் தவறான பெண்கள் என்று கூறுவார்கள்..ஆனால் இன்று அப்படிச்சொல்ல முடியுமா..அப்படிப் பேசியவர்கள் எல்லாம் இன்று நைட்டியைப் போட்டுக்கொண்டுதான்  சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்..

வசதிபடைத்த தொழிலதிபர்கள் அனைவரும் ஒரு பிச்சைக்கார குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கலாம்..காரணமே இல்லாமல் மணிக்கணக்கில் செல்போனில் மொக்கைபோடும் காதலர்களே ..உங்களின் ரீசார்ஜ் செலவில் பாதியைக்குறைத்தாலே இந்தியாவின் பாதி குழந்தைகளைப் படிக்கவைக்கலாம்..

என்ன நல்லா குழப்பி விட்டேனா ?
 எப்படியோ நாரதர் கலகம் நன்மையில் முடிந்தால் சரி..சொல்லவந்த கருத்தைத் தெளிவாக்க் கூறினேனா என்று தெரியவில்லை..குறையிருந்தால் கருத்துரையில் கூறுங்கள்..அடுத்த பதிவில் தொடர்கிறேன் ..நன்றி..

Tuesday, 30 April 2013

சின்னக்குயில் சித்ராவின் இனியகீதங்கள்- எனக்குப் பிடித்த பாடல்கள்..

    முழு ஆண்டுத்தேர்வு முடிந்து பள்ளிக்கூடத்திற்கு விடுமுறை விட்டாச்சு.. ஒரு வாரமா வீட்லதான் இருக்கன்..அதான் தினமும் ஒரு பதிவெழுதி உங்களையெல்லாம் டார்ச்சர் செய்து கொண்டிருக்கிறேன்..இந்த ஒருமாதம் பொறுத்துக்கொள்ளுங்கள்..ஸ்கூல் ஆரம்பிச்சிட்டா அதிகமா தொல்லை கொடுக்கமாட்டேன்..ஓகேவா..

சரி மேட்டருக்கு வரன் ..உங்களுக்குத்தான் தெரியுமே நம்ம மியூசிக் ஆர்வத்தைப் பத்தி...நமக்கு ரொம்ப புடிச்ச சுவர்ணலதா பாடல்கள் பத்தி ஒரு பதிவு எழுதியாச்சு...போனவாரம் சித்ரா அக்கா ஃபோன் பண்ணி ரொம்ப கோச்சிக்கிட்டாங்க..சுவர்ணலதா பாட்டுதான் எழுதுவியா..என் பாட்டெல்லாம் எழுதமாட்டியானு கேட்டாங்க..(உண்மையத்தான் சொல்றங்க)..அவங்களோட ஆசையை நிறைவேத்தத்தான் இப்பதிவு..(அதுக்கு எங்க உயிர ஏன்டா வாங்குறனு கேக்கக்கூடாது)..

ஓகே மறுபடியும் மேட்டருக்கு வரன்..நம்ம சித்ரா அக்கா ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியிருந்தாலும் எனக்குப் பிடித்த பத்து பாடல்களை மட்டும் உங்களோடு பகிர்கிறேன்..உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்..

1.பாடல் : கண்ணாளனே எனது கண்ணை..

படம்:  பம்பாய்.

மனதுக்குள் காதலை வைத்துக்கொண்டு சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்கும் பெண்ணின் மனதை சித்ராவின் குரலில் கேட்கும்போது அருமையாக இருக்கும்..நான் இந்தப்பாடலை இதுவரையில் ஒரு ஆயிரம் முறையாவது கேட்டிருப்பேன்..தமிழக அரசின் மாநில விருதைப் பெற்றுத்தந்த பாடல்..

2.பாடல்:  கருவாப்பையா கருவாப்பையா

படம் : தூத்துக்குடி.

இந்தப் பாடலுக்காகவே  ஹிட்டாகிய படம்..இந்த பாடலை சித்ராவைத்தவிர வேறு யார் பாடியிருந்தாலும் இவ்வளவு அழகாக இருந்திருக்குமா என்று தெரியவில்லை.இப்படியொரு இனிமையான குரல் உள்ள பாடகிகள் இதன்பிறகு தோன்ற வாய்ப்பேயில்லை..

3.பாடல்:  இதுதானா

படம் : சாமி

திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணநாளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அனைவரின் மனதில் ஓடும் ரிங்டோன் இப்பாடலாகத்தான் இருக்கும்..(கல்யாணத்துக்கு அப்புறம் இந்த பாட்ட ஏன்டா கேட்டோம்னு நெனைப்பாங்க..அது வேற விஷயம்.)

4பாடல்:  ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்.

படம் : புன்னகை மன்னன்.

 பள்ளியில் என்னுடன் பணிபுரியும் என் நண்பன் புண்ணியமூர்த்திக்கு மிகவும் பிடித்த பாடல்..அவனால்தான் இப்பாடலை அதிகம் கேட்க ஆரம்பித்தேன்..காதல் பாடல்களைப் பாடுவதில் சித்ராவிற்கு இணையாக இன்னொரு பாடகி இவ்வுலகில் தோன்றமுடியாது..

5.பாடல்:  பாடறியே படிப்பறியே

படம் : சிந்துபைரவி

நம்ம சின்னக்குயிலை திரையுலகத்திற்கு அறிமுகம் செய்துவைத்த பாடல்..இந்தியாவிலேயே முதல் பாடலுக்கு தேசியவிருது பெற்ற பாடகி சித்ராவைத்தவிர வேறு யாரும் இருக்க வாய்ப்பில்லை..

6.பாடல்:  இந்தமான் உந்தன் சொந்தமான்

படம் : கரகாட்டக்காரன்.

பாடல்களுக்காக மட்டுமே படங்கள் ஓடியது அக்காலம்..இப்படத்தில் வரும் மாங்குயிலே பூங்குயிலே பாடலைவிட இப்பாடல்தான் எனக்கு மிகவும் பிடிக்கும் சித்ராவுக்காக..

7.பாடல்:  உன் மனசுல பாட்டுத்தான் இருக்குது

படம் : பாண்டிநாட்டுத்தங்கம்

கார்த்திக் ,நிரோஷா நடித்த படம்..படத்தின் பெயர் பாண்டிநாட்டுத்தங்கம் என்றுதான் நினைக்கிறேன்..இசையை ரசிப்பவர்கள் எல்லோருக்கும் இப்பாடலை நிச்சயம் பிடிக்கும்..இப்பதிவையும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்..

8.மாருகோ மாருகோ

படம்:  வெற்றிவிழா

இப்பாடல் ஏன் பிடிக்கும் என்றெல்லாம் சொல்லத்தெரியவில்லை..வித்தியாசமான வேகமான பாடல்..சித்ராவின் குரலில் துள்ளலான ஒரு பாடல்..

9.பாடல்:  செம்பூவே பூவே

 படம்: சிறைச்சாலை

சித்ராவின் பாடலில் ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்...காதலும் காமமும் கலந்த பாடல்..எஸ்.பி.பியும் சித்ராவும் போட்டிபோட்டுக்கொண்டு பாடியிருப்பார்கள்..பாடலின் வரிகளுக்கு சித்ரா உயிர் கொடுத்திருப்பார் அருமையாக- வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ-என்னைக்கவர்ந்த வரிகள்..

10.பாடல்:  ஒவ்வொரு பூக்களுமே

படம்:  ஆட்டோகிராஃப்

துன்பத்தில் வாடுபவர்களுக்கும் வாழ்வில் தோல்வி அடைந்தவர்களுக்கும் நம்பிக்கையை வழங்கிய பாடல்..அதுவும் நம்ம சினேகா பாடும்போது அப்பாடல் இன்னும் அழகாக இருக்கும்..

இதைவிட சிறந்த ஏதேனும் பாடல்கள் இருப்பின் கருத்துரையில் பகிருங்கள்..அடுத்த பதிவில் தொடர்கிறேன்..நன்றி....


Monday, 29 April 2013

சனியன் பிடித்த சகுனங்களும் முட்டாள்களின் மூடநம்பிக்கைகளும்...

    இந்தியர்களின் வளர்ச்சியின்மைக்கும்  சோம்பேறித்தனத்திற்கும் முக்கியக் காரணமே இந்த மூடநம்பிக்கைகளும் சகுனங்களுமே..விண்வெளியில் விவசாயம் செய்வது எப்படி என்று விஞ்ஞானிகள் விடை தேடிக்கொண்டிருக்கும் இந்த அறிவியல் யுகத்தில் கூட நம் இந்தியர்கள் இன்னும் சமைப்பதற்குக்கூட சகுனம் பார்ப்பதைத்தான் சகித்துக் கொள்ளமுடியவில்லை..

பூனை குறுக்கில் வந்தால் பொல்லாத சகுனம் என்பார்கள்...நரி நடுவில் வந்தால் நல்ல சகுனம் என்பார்கள்.. விதவைப்பெண்கள் எதிரில் வந்தால் அந்த நாள் வீணாய்ப் போய்விடும் என்பார்கள்..இந்தியாவில் இன்னும் இதுபோன்ற நம்பிக்கைகளோடு இருபது கோடிக்கும் மேற்பட்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்..

தமிழ்க்கலாச்சாரம் அறிவியல் பூர்வமானது என்று ஏற்கனவே ஒரு பதிவில் கூறியிருந்தேன்..ஆனால் அதே தமிழகத்தில்தான் இதுபோன்ற முட்டாள்தனமான மூடநம்பிக்கைகளும் அதிகம் இருக்கின்றன..

ஒரு விதவைப் பெண்ணும் குழந்தையில்லாத பெண்ணும்  நம் நாட்டில் நிம்மதியாக வாழ்வது என்பது எளிதான விஷயமல்ல..யாரோ ஒருவர் வெளியில் போகும்போது ஒரு விதவைப்பெண் எதிரில் வந்துவிட்டால் என்ன டயலாக் வரும் என்பது நீங்கள் அறிந்த்துதானே..சனியன் எதரக்க வந்துடுச்சா இன்னைக்கு நாள் உருப்பட்ட மாதிரிதான் என்பார்கள்..அவர் என்னமோ ஐ.நா சபையில போய் ஆட்ட போற மாதிரி பேசுவார்..கவுண்டமணி  சொல்ற மாதிரி அந்த முக்குல போய் பிச்சை எடுக்கப்போற நாயிக்கு பேச்சப்பாரு   எகத்தாளத்தப் பாரு..

திடீரென்று  எங்கிருந்து இவ்வளவு ஞானம் வந்தது என்றுதானே கேட்கிறீர்கள்..பராசக்தி படத்தில் சிவாஜி சொல்வதுபோல நானே நேரடியாக பாதிக்கப்பட்டேன்..ஆமாம் சுயநலத்திலிருந்துதானே பொதுநலம் பிறக்கிறது..
 
திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் எனக்கு இன்னும் குழந்தை இல்லை..எனக்கும் என் மனைவிக்கும் உடல் ரீதியாக பிரச்சினை இல்லை என்று சொல்லிவிட்டார்கள்..சென்றமாதம் என் மனைவிக்கு லேப்ராஸ்கோபிக் சிகிச்சை மூலம் கண்ணுக்குத் தெரியாமல் இருந்த இரண்டு நீர்க்கட்டிகளை நீக்கிவிட்டார்கள்..இந்த மாதம் கரு தங்கிவிடும் என்ற நம்பிக்கை
யோடு இருக்கிறேன்..நம்பிக்கை..அதானே எல்லாம்..இதுக்காக நான் ரொம்ப ஃபீல் பண்ணதில்ல..

ஆனால் இடைப்பட்ட இந்த காலத்தில் என் மனைவி அனுபவித்த கஷ்டங்கள் அதிகம்..உறவினரின் வீட்டு விஷேஷங்களில் எதற்கும் முன்னால் செல்லமாட்டாள்..என் சொந்த மாமன் மகளின் திருமணத்திற்குக் கூட அவள் நலங்கு வைக்கவில்லை..என்னமோ மூனு புள்ள பெத்த மாதிரி முந்திரிக்கொட்டையாட்டம் முன்னாடி வந்து நலங்கு வைக்குது என்று யாராவது சொல்லிவிடுவார்களோ என்ற ஆற்றாமை..

இதுபோன்ற மனிதர்களின் குணம் எப்பொழுதுதான் மாறும்..மற்றவர்களுக்கும் மனம் இருக்கும் என்பதை அறியாமல் புரளிபேசும் இதுபோன்ற மனிதர்கள் இருக்கும்வரை இந்தியா இன்னும் இருநூறு ஆண்டுகள் ஆனாலும் முன்னேறாது..

தன்முதுகில் ஆயிரம் அழுக்கு மூட்டைகளை வைத்துக்கொண்டு  பிறர் முதுகைப்பார்ப்பவர்களை என்னவென்று சொல்வது..விவேக் சொல்லற மாதிரி இன்னும் நூறு பெரியார் வந்தாலும் உங்களலாம் திருத்தவே முடியாதுடா....

Sunday, 28 April 2013

நீங்க இந்தி பாட்டெல்லாம் கேட்பீங்களா..?

  இப்பொழுது கொஞ்ச நாட்களாக இந்தி பாடல்கள் மீது ஒரு ஈர்ப்பு...நீ என்ன ஆல் இன் ஆல் அழகுராஜாவா..உனக்கு எல்லா லாங்வேஜும் அத்துப்படியோ அப்படித்தானே கேக்கறீங்க..அப்படியெல்லாம் ஒன்னும் இல்லீங்க..எனக்குத் தெரிந்த ஒரே இந்தி வார்த்தை ஹிந்தி நை மாலும் என்பதுதான்..

இந்தி மொழிமீது எந்த ஒரு மொழிப்பற்றோ மண்ணாங்கட்டியோ  கிடையாது..இப்படி ஒரு பதிவு எழுத காரணம் என்னவென்றால் இப்ப வர தமிழ் பாட்டெல்லாம் சகிக்க முடியல பாஸ்..ஒரே வாந்தியா வருது..கும்கி போன்ற ஏதோ ஒருசில படங்கள் மட்டுமே வருடத்திற்கு ஒருமுறை மனதிற்கு ஆறுதல் தந்து தமிழிசை அழியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது..சரி தமிழில் மட்டும்தான் நல்ல பாடல்கள் இருக்குமா..மற்ற மொழிகளிலும் ஏதோ ஒருசில நல்ல பாடல்கள் இருக்காதா என்று இசையால் வென்ற ஒருசில இந்தி பாடல்களை கூகிளில் தேடினேன்...அப்படிக் கிடைத்த ஒருசில அற்புதமான பாடல்களைத்தான் உங்களுடன் பகிர விரும்புகிறேன்..

1.பாடல்:  துஜ் மே ரப் திக்தா ஹே

படம்:  ரப்னே பனா டி ஜோடி..(RAB NE BANA DI JODI)

ஷாருக்கான் நடித்து 2008ல் வெளியான படம்..இப்பாடலை ஒருமுறை கேட்டுப்பாருங்கள்..நிச்சயம் உங்கள் மனதை கொள்ளை கொள்ளும்..மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் பாடல்..இப்பாடல் படத்தில் இருமுறை வரும்..பெண்குரலில் ஸ்ரேயா கோஷல் பாடியிருப்பார்..இந்த பாடலைக்கேட்டால் மொழிக்கு இசைகள் கிடையாது என்று நீங்களும் சொல்வீர்கள்..

2.பாடல்:  தேரே மேரே பீச் மே

படம் : ஏக் துஜே கே லியே (EK DUJE KE LIYE)

நம்ம பாலச்சந்தர் சார் டைரக்‌ஷனில் உலகநாயகன் கமல் நடித்து நம்ம  எஸ்.பி.பி சார் பாடிய பாடல்..நம்ம எஸ் பி பி சாருக்கு தேசிய விருதைப் பெற்றுத்தந்த பாடல்..பலருக்கு எவ்வளவு கோபத்தில் இருந்தாலும் அவர்களுக்கு பிடித்த பாடலை கேட்கும்போது கோபமெல்லாம்  பறந்துபோய்விடும்..

3.பாடல்:  துஜே தேகா டோயே ஜானா சனம்.

படம் : தில்வாலே துல்ஹனியா லே ஜாயாங்கே..(DILWALE DULHANIYA LE JAYENGE)

இப்பாடலை கேட்காதவர்கள் நிச்சயம் இருக்கமுடியாது..அந்தளவுக்கு இப்பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான பாடல்..நம்ம ஷாருக்கானும் கஜோலும் நடித்திருப்பார்கள்..இசையென்ற ஒன்று இருப்பதால்தான் இன்னும் மனித இனம் கொஞ்சமாவது மனிதத்தோடு இருக்கிறது..

4.பாடல்: ஐஸே திவானிஹே

படம் : தீவானா (DEEWANA)

1992ல் வெளிவந்த படம்..ஷாருக்கானின் முதல் படம்..கேட்டுப்பாருங்கள் நிச்சயம் ரசிப்பீர்கள்..

5.பாடல்:  பர்தேசி பர்தேசி ஜானா நஹி

படம் : ராஜா ஹிந்துஸ்தானி

1996ல்  வெளிவந்த வெற்றிப்படம்..அருமையான ஒரு பாடல்..இப்படத்தில் எல்லா பாடல்களுமே நன்றாகத்தான் இருக்கும் .எனக்கு மிகவும் பிடித்தது இப்பாடல்..படத்தைப் பற்றியெல்லாம்  ஒன்றும் தெரியாது. ஏனென்றால் நான் இதுவரை சத்தியமாக ஒரு இந்தி படம் கூட பார்த்ததில்லை..

6.பாடல் : தும் பாசு ஆயே

படம் : குச் குச் ஹோதா ஹே (KUCH KUCH HOTA HE)                                                    

பாடலைக் கேட்டிருப்பீர்களா என்று தெரியவில்லை..ஆனால் இப்படத்தின் பெயரை நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள்..ஷாருக்கான் நடித்த  சூப்பர் ஹிட் படம்  (நெட்ல படிச்சததான் சொல்றேன்,நான் படமெல்லாம் பாக்கலை..)

7.பாடல்:  பெஹலா பெஹலா ப்யார் ஹே

படம் : ஹம் ஆப்கே ஹைன் கோன்..(HUM APKE HAIN KAUN)

அமீர்கான் இப்படத்தில் மிகவும் அழகாக இருப்பார்..இதுவும் நம்ம எஸ்.பி.பி பாடிய பாடல்தான்..எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்..

8.பாடல்:  ராத் கா ஆஷா நபி

படம்:  அசோகா

நம்ம சின்னக்குயில் சித்ரா பாடின பாட்டுங்க..கிரங்கடிக்கும் ஒரு கில்மாவான பாடல்..ஒரேஒரு முறை வீடியோவில் இப்பாடலைப் பார்த்திருக்கிறேன்..கரீனா கபூர் கவர்ச்சியில் கலக்கியிருப்பார்..நம்ம சித்ராவுக்கு இந்த மாதிரி பாட்டெல்லாம் பாடத்தெரியுமா என்று ஆச்சரியப்பட வைத்த பாடல்..

இன்னும் ஏராளமான பாடல்கள் இருக்கின்றன..நான் ஒன்னும் இந்தி பாட்டு கேட்டே வளர்ந்த பரம்பரை இல்லை..இவையெல்லாம் கூகிளில் தேடியவையே..இதேபோல உங்களுக்குத் தெரிந்த சிறந்த பாடல்கள் ஏதாவது இருந்தால் கருத்துரையில் பகிருங்கள்..நானும் கேட்டு மகிழ்கிறேன்.. 

Wednesday, 24 April 2013

கிறிஸ் கெயிலும் அவரது ஸ்டைலும்..

  கிரிக்கெட் ஜாம்பாவான் சச்சினுக்கு இன்று நாற்பதாவது பிறந்தநாள்..அவருடைய கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக என்னுடைய வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொண்டு ,முதன்முதலாக ஒரு கிரிக்கெட் பதிவு எழுதலாம் என்று.....(சகித்துக்கொள்ளுங்கள்)...

போன பதிவில சொன்ன மாதிரியே நான் இசைக்கு மட்டும் மயங்குற கேஸ் இல்ல  கிரிக்கெட்டுக்கும் அப்படித்தான்...ஆசிரியர் பயிற்சி படிக்கும் போது ,மறுநாள் கணிதத்தேர்வை வைத்துக்கொண்டு இந்தியா-பாகிஸ்தான் மேட்ச் பாத்த ஆளுங்க நாங்க...

கிரிக்கெட் பதிவு எழுதற அளவுக்கு பெரிய கிரிக்கெட் வீரரா நீ ..அப்படிலாம் கேக்கக்கூடாது..(பேச்சு பேச்சாத்தான் இருக்கனும்..)..நாம எப்பவுமே டக் அவுட் கேஸ்தான் பாஸ்..(நாங்க உண்மைய ஒத்துக்கற பரம்பரைங்க)..

ஆனா பவுலிங் மட்டும் கொஞ்சம் நல்லா போடுவன்னு ஊர்ல எல்லாரும் சொல்றாங்க..ஆமாங்க கை பிரேக் கால் பிரேக்கெல்லாம் போடுவங்க(லெக் பிரேக் ஆஃப் பிரேக் மாதிரி இதுவும் ஒரு டைப்)..

சரி சரி கோச்சிக்காதீங்க மேட்டருக்கு வந்துடறன்..நேற்று இரவு நடந்த பெங்களூர்-புனே அணிகளுக்கு இடையான ஐபிஎல் மேட்ச் பார்த்தீங்களா..
கிறிஸ் கெயிலின் அதிரடி ஆட்டத்தால் பெங்களூரில் ஒரு தானே புயல் அடித்து ஓய்ந்தது போலிருந்தது..

பெங்களூரில் மையம் கொண்ட அந்த புயல் வடமேற்காக நகர்ந்து புனேயைத் தாக்கியது.அப்பப்பா...அடியா அது..சிங்கம் படத்துல சூர்யா சொல்லற மாதிரி ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெய்ட்டுடா என்பதுபோல் இருந்தது ஒவ்வொரு ஷாட்டும்..

முகத்தில் எந்தவொரு பயமும் இன்றி அடித்த ஒவ்வொரு சிக்சரும் சூப்பர்..ட்விட்டரில் ஒரு கிரிக்கெட் வீரர் கூறியதைப்போல் நேற்றைய ஆட்டத்தில் ஃபீல்டர்கள் எல்லோரும் வெறும் பார்வையாளர்களாகவே இருந்தனர்..பார்வையாளர்களே ஃபீல்டிங் வேலையைச்செய்தனர்..

புனே பவுலர்கள்தான் பாவம்...அதிலும் அசோக் டின்டா ஒவ்வொரு ஆட்டத்திலும் அடி வாங்குகிறார்..புனே அணியின்  புவனேஸ்வர் குமார் மட்டும்தான் கொஞ்சம் தப்பித்தார் கெய்லின் அதிரடியில் ..

ஒன்றா,இரண்டா ஒரே நாளில் மூன்று உலக சாதனைகள்..20 ஒவர் போட்டியில்  ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர்-263 ரன்கள், ஒரு வீரரின் அதிகபட்ச ஸ்கோர்-175 ரன் (66 பந்துகள்), அதிக சிக்சர்கள் அடிக்கப்பட்ட மேட்ச் -17 சிக்சர்கள்..மேலும் ஒரு சாதனையாக ஒரே மேட்சில் மூன்று உலக சாதனைகள் படைத்து  அதையும் ஒரு சாதனையாக்கி இருக்கிறார் கிறிஸ் கெயில்..

அவர் வெளிநாட்டு வீரராக இருந்தாலும் திறமையுள்ள வீரரை மதிக்க வேண்டும்..கிரிக்கெட்டை ரசிப்பவர்கள் ஒவ்வொருவரும் கெய்லையும் ரசிப்பார்கள்..
கடைசி வரை களத்தில் நின்று எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார்.இன்னும் பந்துகள் இருந்திருந்தால் 20 ஓவர் கிரிக்கெட்டில் 200 ரன்கள் கடந்த வீரர் என்ற சாதனையையும் படைத்திருப்பார்...கடினமான பந்துகளை தேவையில்லாமல் அடித்து அவுட்டாகாமல் சிங்கிள்களாக ஆடியது ரசிக்கும்படியாக இருந்தது..நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு ரசிக்கும்படியான ஒரு மேட்சை விருந்தளித்த கெய்லுக்கு ஒரு சல்யூட்...


Saturday, 20 April 2013

பாண்டிச்சேரிக்காரன் என்று சொல்லிக்கொள்ள ஒன்னும் பெருமையாக இல்லை...

 நம் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பெருமை இருக்கும்...திண்டுக்கல் பூட்டு,மதுரை மல்லி,ஊத்துக்குளி வெண்ணெய்,மணப்பாறை முறுக்கு, கும்பகோணம் வெத்தலை,விருதுநகர் பரோட்டா,பத்தமடை பாய், வளையப்பட்டி தவில்,திருநெல்வேலி அல்வா,பழனி பஞ்சாமிர்தம்...இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்..எங்க ஊர் பாண்டிச்சேரியோட பெருமை எதுவென்று உங்களுக்கு எல்லாருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்..

புதுச்சேரி மக்களுக்குக் கிடைத்திருக்கும் கௌரவம் பார்த்தீர்களா  ..எங்கள் ஊருக்கு வரும் உறவினர்கள் எங்களிடம் எதிர்பார்ப்பதும் கூட அதைத்தான்..  உங்கள் ஊருக்கு எவ்வளவு தூரத்திலிருந்து   வந்திருக்கிறோம் சரக்கு வாங்கிக்கொடுத்தால்தானே மரியாதையாக இருக்கும் ...வாங்கித்தரவில்லையென்றால் அவர்களை அவமதித்ததாக வேறு சொல்வார்கள்..

என்னப்பா உங்கள் ஊரைப்பற்றி நீயே இவ்ளோ கேவலமாக சொல்கிறாயே, என்னதான் இருந்தாலும் நாம  பொறந்த ஊர பத்தி தப்பா பேசலாமா என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது..என்ன செய்வது நாங்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்..

நாம் சாதாரணமாக  வெளியூருக்கு எதற்கெல்லாம் செல்வோம்..வேலை தேடி செல்வோம்,படிப்பைத்தேடி செல்வோம்,உறவைத்தேடி செல்வோம்..ஆனால் பாண்டிச்சேரிக்கு வருபவர்களின் புள்ளிவிவரங்களைக் கணக்கெடுத்தால் பாரைத்தேடி வருபவர்கள்தான் அதிகம்...நாங்க எப்படிலாம் சுற்றலாத்துறைய மேம்படுத்தறோம் பாத்துக்கங்க...சகுனி படத்துல கார்த்தி சொல்ற மாதிரி மார்க்கெட்டிங் பாஸ் மார்க்கெட்டிங்...

புதுச்சேரியில் குடிமக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறதோ இல்லையோ, 'குடி'மகன்களுக்கு நிச்சயம் பாதுகாப்பு வழங்கப்படும்..'குடி'மகன்கள் நம்பிக்கையோடு வரலாம்..'பாரு'க்குள்ளே நல்ல நாடு எங்கள் பாண்டிச்சேரி நாடு..

ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் என்பார்கள்.. ஆனால் எங்கள் பாண்டிச்சேரியின் பொன்மொழி பாரில்லா ஊருக்கு முழுதும் பாழ் என்பதே...புதுச்சேரி மாநிலத்தின் மேற்கு எல்லையில் உள்ளது எங்கள் மடுகரை கிராமம்..நான் பிறந்தது,வளர்ந்தது,படித்தது எல்லாமே எங்கள் ஊரில்தான்..நான் படித்த தொடக்கப்பள்ளியில்தான் இப்போது ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்..சிறுவயதில் எனக்கு மிகவும் பிடிக்கும்  எங்கள் ஊரை.

ஆனால் தற்போது எங்கள் ஊர் ஒரு தீவாக மாறிவருகிறது.. ஆமாம் நான்கு பக்கமும் நீரால் சூழப்பட்ட பகுதியை அப்படித்தானே சொல்வார்கள்..என்றைக்கு வேண்டுமானாலும் கடலில் மூழ்கிப்போகலாம்..இந்த தீவிலிருந்து தப்பித்துச்செல்ல ஒரு படகைத் தேடிக்கொண்டிருக்கிறேன்..

பொருளாதாரத்திலும் போக்குவரத்து நெரிசலிலும் வேண்டுமானால் எங்கள் மாநிலம் உயர்ந்து விளங்கலாம்..ஆனால் அன்பு,கருணை, மனிதநேயம்,சகிப்புத்தன்மை இவற்றிலெல்லாம் நாங்கள் ஏழைகள்தான்.. ஒரேஒரு ஆறுதல் என்னவென்றால் இங்கே குடிக்க வருபவர்களைப்போலவே படிக்க வருபவர்களும் அதிகம்..என்ன செய்யறது இப்படிதான் மனச தேத்திக்கனும்..மறுபடியும் சொல்கிறேன் பாண்டிச்சேரிக்காரன் என்று சொல்லிக்கொள்ள ஒன்னும் பெருமையாக இல்லை..(மேற்கண்ட அனைத்தும் என்னுடைய தனிப்பட்ட கருத்து..யார் மனதையேனும் புண்படுத்தும் விதத்தில் இருந்தால் மன்னிக்கவும்)..அடுத்த பதிவில் தொடர்கிறேன்..நன்றி.

Thursday, 18 April 2013

சொக்கவைக்கும் பாடல்கள் தந்த சொர்ணலதா...

    இசைக்கு மயங்கா உயிர்கள் இவ்வுலகில் உண்டோ?  .நான் கொஞ்சம் ஓவரா(!!) மயங்கற கேஸ்..சிறுவயதில் சினிமா படம் பார்ப்பதிலும் பாடல்கள் கேட்பதிலும் அப்படி ஒரு ஈர்ப்பு. அதுவும் இளையராஜா பாட்டென்றால் சொல்லவே வேண்டாம்...உலகத்தையே மறந்துடுவன்..

இந்த ஓவர் இசை ஆர்வத்தால   நிறைய திட்டும் உதையும் வாங்கிய அனுபவமும் உண்டு. நான் எட்டாம் வகுப்பு படிக்கிற சமயத்தில் ,ஆசிரியர் வகுப்புக்கு வரவில்லையென்றால் வகுப்பில் என்னுடைய பாட்டுக்கச்சேரிதான் நடந்து கொண்டிருக்கும்..என் நண்பன் கிருபாகரன் பெஞ்சில் தாளம்போட நான் பாடிக்கொண்டிருப்பேன் ஆசிரியர் வருவதுகூட தெரியாமல்...அப்புறம் என்ன ஆசிரியர் அக்குளில் திருகி எடுத்துவிடுவார்..

அம்மா சிலநேரங்களில் மளிகைக்கடைக்குச் சென்று ஏதாவது இரண்டு மூன்று சாமான் வாங்கிவரச்சொல்வாங்க..ஒழுங்காகத்தான் செல்வேன் ..வழியில் யார்வீட்டிலாவது ரேடியோவில் பாட்டு போகும்..அவ்வளவுதான் அங்கேயே உறைந்து நின்றுவிடுவேன்..பாடல் முடிந்த பிறகுதான் அவ்விடத்தை விட்டு நகர்வேன்  ..என்ன காமெடியென்றால்  கடைக்குச் சென்றவுடன் அம்மா என்ன வாங்கிவரச் சொன்னார்கள் என்பதையே முழுதும் மறந்துவிடுவேன்...உடனே எதுவும் வாங்காமல் வீட்டிற்குத் திரும்பியதும் என் பெயரில் அர்ச்சனை நடக்கும்..

ஒருமுறை என்னுடைய சட்டையை அயர்ன் செய்வதற்காக சூடு வைத்தேன் ..கொஞ்சநேரம் பாட்டுகேட்கலாம் என்று டிவி முன் உட்கார்ந்தேன்.அவ்வளவுதான் அயர்ன் பாக்ஸ் சூடாகி பெட்ஷீட்டெல்லாம் எரிந்துவிட்டது..அன்று என் அண்ணனிடம் வாங்கிய உதை இன்னமும் மறக்கவில்லை..உங்களுக்கும் இதுபோன்ற அனுபவம் இருந்தால் கருத்துரையில் பகிருங்கள்..

சொர்ணலதா பாடல்கள் என்றால் இப்பொழுதும் உயிர்..அவ்வளவு சிறந்த பாடகி நம்மைவிட்டு சிறுவயதிலே மறைந்துவிட்டதாலோ என்னவோ அவருடைய பாடல்களை ஒருநாள் கூட கேட்காமல் இருக்கமாட்டேன்..

சின்னக்குயில் சித்ராவை ரொம்ப பிடிக்கும்..ஆனால் சொர்ணலதா பன்முகத் திறமையுள்ள ஒரு பாடகி..காதல் பாடலாகட்டும்,காமப்பாடலாகட்டும். சோகப்பாடல் வேண்டுமா  சொக்கவைக்கும் பாடல் வேண்டுமா  டப்பாங்குத்து பாட்டானாலும் சரி,,கிராமியத்து கம்மாக்கரை பாடலானாலும் சரி..அவருக்கு நிகர் அவரேதான்...

என்னைக்கவர்ந்த சொர்ணலதா பாடல்கள் ஒருசில உங்கள் பார்வைக்காக...

1.போறாளே பொன்னுத்தாயி-கருத்தம்மா

சொர்ணலதாவிற்கு சோகப்பாடலும் பாடத்தெரியும் என்று நிரூபித்த பாடல்.அவருக்கு தேசிய விருதைப் பெற்றுக்கொடுத்த பாடல்..

2.மொட்டு மொட்டு மலராத மொட்டு-காதல்கோட்டை

காதலையும் காமத்தையும் கலந்து கலக்கிய பாடல்..

3.அடி ஆசமச்சான் -கும்மிப்பாட்டு

கிரங்கடிக்கும் கிராமிய காதல் பாடல்

4.ஆட்டமா தேரோட்டமா-கேப்டன் பிரபாகரன்

கேட்கும் அனைவரையும் இன்றும் தாளம்போட வைக்கும் பாடல்.

5.மாலையில் யாரோ-சத்ரியன்

இளையராஜாவின் இசையில் மனதை மயக்கும் மந்திரப்பாடல்..

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..அதையெல்லாம் எழுத இந்த ஒரு பதிவு போதாது..காற்றில் கலந்துவிட்டது அவர் உயிர் மட்டுமல்ல, அவருடைய பாடல்களும்தான்..என்றும் நம் மூச்சுக்காற்றில் கலந்திருக்கும்..

Tuesday, 16 April 2013

உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலில் தமிழில் எழுதுவது எப்படி ?

  புதிதாக ஆன்ட்ராய்டு மொபைல் பயன்படுத்துபவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கில் இப்பதிவை எழுதுகிறேன்..

உண்மையில் சொல்லப்போனால் ஒருமாதம் முன்புவரை என்னுடைய மொபைலில் எனக்கு தமிழில் எழுதத்தெரியாது.  எப்படியோ என் நண்பன் ஒருவனின் உதவியோடு கடந்த ஜூலை மாதம்தான் ப்ளாக் தொடங்கினேன்.
ஆனால் தமிழில் எழுதத்தெரியாத காரணத்தாலேயே  ஏறத்தாழ 8 மாதங்கள் என்னுடைய ப்ளாக்கில் எதுவுமே எழுதாமல் இருந்தேன்..

எப்படியோ இந்த மார்ச் மாதம்தான் ஏதோ ஒரு அசட்டு நம்பிக்கையில் இகலப்பை மென்பொருளை என் கணினியில் நிறுவி எழுதத்தொடங்கினேன்.
தமிழில் எழுத இதைவிட சிறந்த ஒரு மென்பொருள் இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை..

லேப்டாப்பில் ஒருநாளைக்கு ஒருமணி நேரம் அளவுக்குத்தான் அனுமதி...அதற்குமேல் சிஸ்டத்தில் உட்கார்ந்திருந்தால் என் மனைவியின் முகத்தைப் பார்க்க முடியாது...எப்பவும் சிஸ்டத்துலே உக்காந்து இருக்கீங்க,,என்னை கண்டுக்கவே மாட்ரீங்கனு சொல்ல ஆரம்பித்துவிடுவாள்..அவளின் உணர்வுக்கும் கொஞ்சம் மரியாதை கொடுத்து லேப்டாப்பை மூடிவைத்து விடுவேன்..

நண்பர்கள் பலரின் பதிவுகளையும் மனைவி பார்க்காத நேரத்தில் மொபைலில் படிப்பேன்..அப்பதிவுகளுக்கு கமெண்ட் எழுதவேண்டும் என்று நினைப்பேன்.
ஆனால் மொபைலில் தமிழில் எழுதத் தெரியாது என்பதால் அப்படியே விட்டுவிடுவேன்..மறுபடியும் லேப்டாப்பைத் திறந்தால் அவ்வளவுதான்...புரிகிறதா...

எப்படியாவது ஆன்ட்ராய்டு மொபைலில் தமிழில் எழுத வேண்டும் என்று முடிவுசெய்தேன்..PLAY STOREல் தேடியபொழுது தமிழ்விசை என்ற அப்ளிகேஷனைக்கண்டறிந்தேன்.. என்னைப் போன்றவர்களுக்கு உதவுமே என்ற எண்ணத்தில்தான் இப்பதிவு தோன்றியது..

TAMILVISAI  மென்பொருளை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள். SETTINGS சென்று  LOCALE AND TEXT செலக்ட் செய்து

INPUT METHOD என்ற ஆப்ஷனை கிளிக் செய்து TAMILVISAI செலக்ட் செய்யவும்..அவ்வளவுதான் இனி உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலில் நீங்கள்  தமிழில் எழுதலாம்..என்னை மாதிரியே...Sunday, 14 April 2013

தமிழ்ப்புத்தாண்டு வேண்டாமே!...புத்தாண்டு என்போம்..!!.

       அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..காலையிலிருந்து பார்க்கும் முகங்களும், கேட்கும் குரல்களும் சொல்லும் ஒரே வார்த்தை இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்பதுதான்..கேட்பதற்கு மனதிற்குக் கொஞ்சம் நெருடலாகத்தான் இருக்கிறது..

இதிலென்ன கஷ்டம்,நல்ல விஷயம்தானே என்று கேட்கிறீர்களா  ..ஆங்கிலப் புத்தாண்டுக்குக் கொடுக்கும் முக்கியத்துவமும்,ஆரவாரமும் நம் புத்தாண்டன்று இல்லாமல் போவது ஏன் என்ற நெருடல்தான்...

நம்மவர்களுக்கு எப்போதுமே அயல்நாட்டுக்காரன் மொழியான ஆங்கிலத்தின் மீதுதானே அதீத பாசம். ஆங்கிலப் புத்தாண்டன்று யாருமே  HAPPY ENGLISH NEW YEAR என்று கூறுவதில்லை.ஆனால் நம் தாய்த்தமிழின் புத்தாண்டை என்னமோ வேறு மொழி போல தமிழ்ப் புத்தாண்டு என்று அழுத்தம் கொடுத்துச் சொல்லும் அளவுக்கு தமிழ் தரம் தாழ்ந்துவிட்டதா தமிழர்களே..?

தமிழர்களே இனியும் தயக்கம் வேண்டாம் ..இயன்றவரை தமிழில் எழுதுங்கள்.. தமிழைக் கொண்டாடுவோம்..தமிழனின் புத்தாண்டை தமிழ்க்கலாச்சாரத்தோடு கொண்டாடுங்கள்..

இன்னுமொரு சிறு விளக்கம்..வாழ்த்துகள் என்பது சரியா அல்லது வாழ்த்துக்கள் என்பது சரியா என்பதில் நம்மில் பலருக்கும் பல காலமாக சந்தேகம்..யாரோ ஒருவர் அவருடைய புத்தகத்தில் எழுதிவிட்டார் என்பதற்காக அதை அப்படியே பயன்படுத்த வேண்டும் என்று அவசியமில்லை.. உண்மையில் வாழ்த்துக்கள் என்பதே சரியான வார்த்தை..

கண்ணபிரான் என்னும் நண்பரின் பதிவைப் படிக்கும்போதுதான் மேற்கண்ட விளக்கங்களை அறிந்துகொண்டேன்..எழுத்துக்கள், வாழ்த்துக்கள் என்பதே சரியென்று தொல்காப்பியர், நச்சினார்க்கினியார் ஆகியோரின் உரையோடு தெளிவாக விளக்கியிருந்தார்..இந்த தருணத்தில் அவருக்கு என்னுடைய நன்றியையும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்..

மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..அடுத்த பதிவில் தொடர்கிறேன்..Saturday, 13 April 2013

கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று என்னிடம் கேட்டால் என் பதில் இல்லையென்றுதான் சொல்வேன். கடவுள் முன் அனைவரும் சமம் என்று கூறிவிட்டு கோயில்களில் 100ரூபாய் தரிசனம், விஐபி தரிசனம் என்று வியாபரமாக்கியபிறகு எங்கே இருக்கிறார் கடவுள் ?.

ஆனால் தமிழர்களின் கலாச்சாரத்தையும், புராதாண கோயில்களையும் மதிப்பவன் நான்..வாசலில் சாணமிடுவது, கோமியம் தெளிப்பது ,மஞ்சள் தெளித்தல்,முகத்தில் மஞ்சள் பூசுவது, தாலிக்கயிறு அணிவது போன்ற அறிவியல் பூர்வமான அற்புத தமிழ் கலாச்சாரங்கள் இன்று கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன..

தாலிக்கயிறெல்லாம் இப்பொழுது தங்கச்சரடுகளாக தரம் உயர்ந்துவிட்டன..மஞ்சள் இருந்த  இடமெல்லாம் இப்பொழுது ஃபேர் அண்டு லவ்லிகள் நிரப்பிவருகின்றன.. இன்றைய மாடர்ன் பெண்கள் சாணத்தைப்பார்த்தாலே சாக்கடையைப் பார்ப்பது போல் பார்க்கிறார்கள்.கௌரவக்குறைச்சலாக நினைக்கிறார்கள்..கோயில்களுக்குப் போவதைக் குற்றமாக நினைக்கிறார்கள்...

 நல்லதைச் செய்யக்கூட நம் மக்களை பயமுறுத்த வேண்டியிருக்கிறது..கடவுள் இருக்கிறார் என்ற பயம் இருந்த்ததால்தான் அக்காலத்தில் குற்றங்கள் குறைவாக நடந்தன..ஆனால் இன்று கலாச்சாரமும் காணோம், கடவுளையும் காணோம்...இன்று கோவில்களுக்குச் செல்லும் ஒருசிலர் கூட வெட்டிக்கதை பேசவும், பெண்களை ரசிக்கவும் மட்டுமே செல்கிறார்கள் என்பது உண்மைதானே..

சூரிய ஒளியில் விட்டமின் டி இருப்பதை ஒத்துக்கொள்கிறீர்களா  ?அப்படியென்றால் முழுநிலவின் ஒளியில் ஏன் விட்டமின் சி இருக்கக்கூடாது?.,செவ்வாய் கோளின் ஒளியில் கூட விட்டமின் ஏ இருக்கலாம் அல்லவா?  .புதன் கோளில் கூட புத்திர பாக்கியம் தரக்கூடிய விட்டமின் ஈ இருக்கக்கூடும்...

சில ஆண்டுகளுக்கு முன்னர் அயல்நாட்டு அறிவியல் அறிஞர்கள் செவ்வாய் கோள் சிவப்புக்கோள்  என்று கஷ்டப்பட்டு கண்டறிந்ததை ,ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் தமிழர்கள் செவ்வாய் என்று பெயரிட்டது அறிவியல் ஆச்சர்யம் அல்லவா?  ..தீமிதிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக அறிஞர்கள் இன்று கண்டறிந்திருப்பதை, நம் தமிழர்கள் காலங்காலமாய் பின்பற்றி வருகிறோம்.

அமெரிக்கா காரன் சொன்னால்தானே  நாம் எதையும் கேட்போம்,ஆர்யபட்டா சொன்னதை நாம் என்று கேட்டிருக்கிறோம்.

கடவுள் இருக்கிறார் என்று நான் விவாதம் செய்யமாட்டேன்..ஆனால் கடவுள் என்ற பெயரும் ,காவல்துறை என்ற பெயரும் இல்லாமல் போயிருந்தால் நம்மவர்கள் எல்லாரும் எப்போதோ கொலை,கொள்ளை,கற்பழிப்பில் ஈடுபடத் தொடங்கியிருப்பார்கள்..

அமெரிக்காவில் ஒருவன் செல்பேசியில் பேசுவதை ஆந்திராவில் இருக்கும் ஒருவன் எந்த குரல்மாற்றமும் இன்றி அப்படியே கேட்க முடிகிறதென்றால் மனிதனின் அறிவுக்கு அப்பாற்பட்ட ஏதோவொரு சக்தி இருப்பதாகத்தானே அர்த்தம்..அந்த அற்புத சக்தியை.நான் கடவுளாக ஏற்றுக்கொள்கிறேன்...

கோவை மாவட்ட சுற்று வட்டாரங்களில் இன்றும் பல வீடுகளில் தாலிக்கயிறு அணிந்திருப்பதையும்,வீடுகளில் சாணம் தெளிப்பதையும் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்..

தமிழர்களே கடவுளை வணங்குகிறீர்களோ இல்லையோ,தமிழ் கலாச்சாரத்தை மதியுங்கள்..நம் தமிழ் கலாச்சாரம் அறிவியல் பூர்வமான அற்புதமான கலாச்சாரம்..அடுத்த பதிவில் தொடர்கிறேன்..நன்றி..

Friday, 12 April 2013

NEET தேர்வுக்கான அனுமதிச்சீட்டு வந்தாச்சு....

நீண்ட நாட்களாக ஆவலோடு எதிர்பார்த்திருந்த தேசிய அளவிலான மருத்துவம் மற்றும் பல்மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத்தேர்வு (NEET UG 2013)அனுமதிச்சீட்டு ஒருவழியாக நேற்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. DOWNLOAD THE ADMIT CARD HERE 


Thursday, 11 April 2013

சிறுவர் உலகம்-வலைப்பதிவு அறிமுகம்

பிளாக்கர் பக்கம் வந்து ஒருவார காலமாகிவிட்டது. வேலைப்பளு காரணமாக இரண்டு மூன்று  நாட்களாக எழுதமுடியவில்லை. இன்று வலைப்பதிவில் கண்ட ஒரு சிறந்த வலைப்பூவைப்பற்றி இப்பதிவில் எழுத விரும்புகிறேன்.

siruvarulakam.blogspot.com என்ற வலைப்பூவே அது. சிறுவர்களுக்குத் தேவையான நூற்றுக்கணக்காண நீதிக்கதைகள் இப்பதிவில் விரவிக்கிடக்கின்றன.நம் சிறுவயதில் படிக்கும் காலத்தில் பள்ளிகளில் நீதிபோதனை என்ற பாடவேளை இருக்கும். செய்யுள் பகுதி நடத்தும்போது கூட ஆசிரியர்கள் ஒருசில நீதிக்கதைகளை கூறியே பாடம் நடத்துவார்கள்.

ஆனால் தற்போது பள்ளிகளில் மாணவர்களுக்குக் கதைகூறும் பழக்கமே மறைந்துபோய்விட்டது.அதனால்தான் இன்றைய சமுதாயத்தில் மனிதாபிமானம்,சகிப்புத்தன்மை,அன்பு,கருணை,பெரியோரை மதித்தல் ஆகிய குணங்கள் அற்றுப்போய்விட்டது.

அன்பார்ந்த ஆசிரியர்களே,பெற்றோர்களே மேற்குறிப்பிட்ட தளத்தைப் பயன்படுத்திப் பாருங்கள். தினந்தோறும் ஒரு நீதிக்கதையை உங்கள் குழந்தைகளுக்குக் கூறுங்கள். வருங்கால சமுதாயம் வன்முறையற்ற சமுதாயமாக மாறட்டும்.

காஞ்சனா ராதாகிருஷ்ணன் என்பவரே மேற்கண்ட தளத்தின் ஆசிரியர். சமுதாயத்துக்குத் தற்போது தேவையான விஷயத்தைப் பதிவிட்டு வரும் அவருக்கு நம் வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்....அடுத்த பதிவில் தொடர்கிறேன்.நன்றி

Friday, 5 April 2013

உணர்வுள்ள உயிருள்ள சமுதாயம் எப்போது தோன்றும்?

நம்முடைய வாழ்வில் பலவிதமான மனிதர்களைப் பலவிதமான சூழல்களில் காண்கிறோம். ஒரு சில சூழல்கள் உங்களுக்காக..

ஒரு பயணி பேருந்தில் பயணிக்கிறார். நடத்துனரிடம் பணம் கொடுத்து பயணச்சீட்டு வாங்குகிறார். நடத்துனர் இரண்டு ரூபாய் சில்லரை பிறகு தருகிறேன் என்று கூறிவிடுகிறார்.

அப்பொழுது ஒரு பிச்சைக்காரர் பேருந்தில் ஏறி மேற்குறிப்பிட்ட பயணியிடம் ஐயா தர்மம் செய்யுங்க என்று கேட்கிறார்.பயணி பிச்சைக்காரரைப் பார்த்து உனக்கு என்ன கேடு ? உழைத்துச்சாப்பிட்டால் என்ன என்று கேட்டு உதாசீனப்படுத்தி அனுப்பிவிடுகிறார்.

பிறகு அப்பயணி பேருந்தைவிட்டு இறங்கும் நேரம் நடத்துனரிடம் மீதி இரண்டு ரூபாய் சில்லரை கேட்க நினைக்கிறார்.ஆனால் அருகில் நிறைய இளம்பெண்கள் ...இரண்டு ரூபாய் சில்லரையைப்போய் எப்படி  கேட்பது என்று அசிங்கப்பட்டுக்கொண்டு பேருந்தைவிட்டு இறங்கிவிடுகிறார்.

இச்சூழலில் யார்மீது தவறு என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? என்னுடைய கருத்து -உழைத்துச்சாப்பிடு என்று உரிமையுடன் கூறினாயே பிச்சைக்காரனை நீ உழைத்துதானே சம்பாதித்தாய் பிறகேன் கேட்கவில்லை உரிமையோடு சில்லரையை.....

இத்தகைய மனநிலையே இன்றைய மனிதர்களிடம் வளர்ந்து வருகிறது.பக்கத்து வீட்டுக்காரன் பார்த்து விடுவானோ,?, எதிர்வீட்டுக்காரன் என்ன நினைப்பானோ என்று நினைத்தே பல நல்ல விஷயங்களை நாம் செய்யத்தயங்குகிறோம்.

மாரியம்மன் கோயில் கூழ் ஊற்றும் திருவிழாவிற்கு சுயகௌரவத்திற்காக
  5000 ரூபாய் நன்கொடை தரும் ஊர் பெரியமனிதர்,பக்கத்துவீட்டு மாரியம்மாளுக்கு உடல்நிலை சரியில்லையென்றால் ஒரு 100 ரூபாய் தர முன்வருவதில்லை.மனிதாபிமானமெல்லாம் இப்போது மரத்துப்போய்விட்டது.
 எதிர்கால சமுதாயம் உணர்ச்சியில்லா  உயிரில்லாமல் ஆகிவிடுமோ என்ற பயம் ஏற்படுகிறது.

அன்பான பெற்றோர்களே, ஆசிரியபெருமக்களே உங்கள் குழந்தைகளுக்கு மனிதாபிமானம் மறந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்,உறவுகளை உடைக்காமல் இருக்க ஊகப்படுத்துங்கள்.உணர்வுள்ள உயிருள்ள ஒரு சமுதாயத்தை உருவாக்க முயல்வோம்..இப்பதிவைப்படிக்கும் இரண்டு பேராவது மனம் மாறினால் எனக்கு மகிழ்ச்சியே....அடுத்த பதிவில் சந்திப்போம்.நன்றி
Tuesday, 2 April 2013

உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலில் மொபைல் பேங்கிங் வசதியைப் பெறுவது எப்படி?

 நம்மில் நிறைய பேர் ஆன்ட்ராய்டு மொபைல் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அதிலிருக்கும் பல்வேறு வசதிகளை நாம் அறிவதில்லை.இன்றைய பதிவில் உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலில் மொபைல் பேங்கிங் வசதியைப் பெறுவது எப்படி என்று பார்ப்போம்.

உங்கள் மொபைலில் GPRS PACK போட்டிருந்தால் நல்லது. முதலில் உங்கள் மொபைலில் < MBSREG> < உங்கள் மொபைல் கம்பனி> <மொபைல் மாடல்> டைப் செய்து 567676 என்ற எண்ணுக்கு SMS செய்யவும்.(எடுத்துக்காட்டு
MBSREG SAMSUNG 6102 ).உடனே உங்கள் மொபைலுக்கு ஒரு USER ID யும் ஒரு பாஸ்வேர்டும் கிடைக்கும்.அதைக் குறித்து வைத்துக்கொள்ளவும். SMSக்கு 3 ரூபாய் செலவாகும் ,அதையும் சொல்லிவிடுகிறேன்.

அடுத்தது நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் மொபைலில் GOOGLE PLAY STOREல் சென்று STATE BANK FREEDOM என்ற அப்ளிகேஷனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள். அந்த அப்ளிகேஷனை ஓப்பன் செய்து உங்களிடம் இருக்கும் USER ID மற்றும் பாஸ்வேர்டைக்கொடுத்து LOGIN செய்துகொள்ளுங்கள்.  CHANGE MPIN  OPTIONஇல் சென்று பாஸ்வேர்டை வேண்டுமானால் மாற்றிக்கொள்ளலாம்.

HDFC,ICICI  ஆகிய வங்கிகளின் அப்ளிகேஷன்களும் ஆன்ட்ராய்டு மொபைலில் கிடைக்கிறது.

நீங்கள் செய்ய வேண்டிய கடைசி வேலை நேராக உங்கள் ATM சென்டருக்கு சென்று உங்கள் கார்டை செருகி SERVICES ஆப்ஷனில் சென்று MOBILE BANKING REGISTRATION சென்று MOBILE NUMBER  கொடுத்து என்டர் செய்யவும். அதன்பின் உங்கள் மொபைலுக்கு ஒரு Confirmation message  வரும்.அவ்வளவுதான் முடிந்தது .இனி உங்கள் மொபைலில் மொபைல் பேங்கிங் வசதியைப் பயன்படுத்தலாம்.

 சந்தேகம் இருந்தால் என்னைத்தொடர்பு கொள்ளவும். தொடர்புக்கு-9940970456

Sunday, 31 March 2013

சேதாரம் என்னும் வேதாளம்

அனைவருக்கும் வணக்கம். நேற்று கடலூரில் உள்ள பிரபல நகைக்கடைக்குச் சென்றிருந்தேன். மனைவிக்கு ஒரு செயின் எடுப்பதற்காக மனைவியுடன் சென்றிருந்தேன்.ஒரு  பத்து நிமிடத்தில் மாடல் செலக்ட் செய்து விலை பற்றி விசாரிக்கலானேன். ஏதேதோ கணக்கெல்லாம் போட்டு விற்பனைப்பெண் ஒரு பவுன் செயினின் விலை ரூபாய் 25800 என்று கணக்கு போட்டு சொன்னார். சிறிது நேரம் பேரம் பேசிய பிறகு அடுத்து ஒருவர் வந்து ஏதேதோ கணக்குப் போடத்தொடங்கினார். அவர் ஒரு 300 ரூபாய் குறைத்தார். இன்னும் எவ்வளவுதான் குறைப்பீர்கள் என்று கேட்டேன். அடுத்து முதலாளியைப் பார்க்கச் சொன்னார். அவர் மறுபடியும் முதலிலிருந்து கணக்கு போடத்தொடங்கினார். அவர் ஒரு 200 ரூபாய் குறைத்தார்.

நான் இன்னும் 500 ரூபாய் குறைக்கச்சொல்லிக் கேட்டேன். குறைக்க முடியாது என்று கூறிவிட்டார்கள். நானும் வேறு கடையில் வாங்கிக்கொள்கிறேன் என்று வந்துவிட்டேன். மறுபடியும் இன்று புதுவையில் இருக்கும்  பிரபல நகைகடைக்குச் சென்றேன். எங்கள் கடையில் ஒரே விலை, பேரம் கிடையாது என்று கூறிவிட்டார்கள்.நானும் சனியன் ஒழிகிறது என்று 5% சேதாரம் அழுதுவிட்டு ஒரு பவுனில் ஒரு செயின் வாங்கி வந்தேன். நகைக்கடைக்குச் சென்றால் இதெல்லாம் சாதாரணம்தானே ,இதற்கு எதற்கு ஒரு பதிவு என்றுதானே நினைக்கிறீர்கள்.இப்படி நினைத்துத்தான் தினம்தினம் நாம் ஏமாந்து கொண்டிருக்கிறோம். சேதாரம் என்னும் பெயரில் நம் முதுகில் தினமும் ஏறிக்கொண்டு நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கும் வேதாளத்தைப்பற்றிய பதிவுதான் இது.

இலண்டனில் ஒரு பெண்மணி நகைக்கடைக்குச் சென்றிருக்கிறார். சேதாரம் எல்லாம் கொடுத்து ஒரு நகையை வாங்கியிருக்கிறார். பிறகு நேராக நுகர்வோர் கோர்ட்டுக்குச் சென்று நகையின் விலையைவிட அதிகமாக எதற்குச் சேதாரம் கொடுக்க வேண்டும் என்று ஒரு வழக்கைப் பதிவு செய்துவிட்டார்.. அப்புறம் என்ன , சேதாரம் என்று வாங்கிய தொகையை திரும்பவும் பெண்மணியிடம் திருப்பித்தருமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.  என்னதான் சொல்ல வர்ர என்றுதானே கேட்கிறீர்கள்.
உண்மையில் எந்தவொரு நகைக்கடைக்காரருக்கும் சேதாரம் என்று எந்தவொரு சேதமும் நிகழ்வதில்லை.அவையெல்லாம் நம்மை ஏமாற்ற அவர்களுக்குக் கிடைத்திருக்கும் அஸ்திரமே என்பதை நீங்கள் எப்போது உணரப்போகிறீர்கள்? பொற்கொல்லர்கள் நகை செய்யும்போது அதிலிருந்து விழும் கண்ணுக்குத் தெரியாத துகள்களைக்கூட மீண்டும் பெருக்கியெடுத்து உருக்கி விடுவார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?  அப்புறம் எங்கே நேர்கிறது சேதாரம்? இனிமேலாவது விழிப்போடு இருங்கள்.0% முதல் 7%வரை சேதாரமும் ஏமாற்று வேலையே, 9.99% சேதாரமும் ஏமாற்று வேலையே...


இனி எந்த நகைக்கடைக்குச் சென்றாலும் ஏன் சேதாரம் கொடுக்க வேண்டும் என்று  கேள்வி கேளுங்கள்.உங்கள் வெறித்தனமான கேள்விகளால் விற்பனையாளரை விழிபிதுங்கச்செய்யுங்கள். அப்புறம் 916 நகை என்று கூறுவார்களே கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அதுவேறு ஒன்றும் இல்லை. சாதாரண 22 கேரட் தங்கத்தையே 916 நகை என்று கூறி செப்படி வித்தையெல்லாம் காட்டுகிறார்கள். அதாவது சுத்தமான தங்கத்தை 24 கேரட் என்று கூறுவது வழக்கம்.நகை செய்யும்போது 22 பங்கு தங்கமும் 2 பங்கு செம்பும் கலந்து செய்வதை அனைவரும் அறிவீர்கள் அல்லவா? 24 கேரட்டில் 22 பங்கை சதவீதம் ஆக்கிப்பாருங்கள், 91.6% வரும்.இந்த சாதாரண 22 கேரட் தங்கத்தையே 916 நகை அப்படி இப்படி என்று கதை விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

  என்னதான் நான் புலம்பித்தீர்த்தாலும் பெண்களின் நகை மோகம் தீரும்வரை ,வரதட்சணை என்னும் கொடிய பேய் ஒழியும்வரை  இத்தகைய ஏமாற்று வேலைகள் தொடர்ந்து கொண்டுதானிருக்கும். அடுத்த பதிவில் மீண்டும் சந்திப்போம்


Wednesday, 27 March 2013

ஆன்ட்ராய்டு மொபைல் வாங்கப்போறிங்களா...?

  • இப்பதிவு புதிதாக ஆன்ட்ராய்டு மொபைல் வாங்க விரும்புபவர்களுக்கு மட்டும்...ஆன்ட்ராய்டு ஃபோன் பயனுள்ளதா ? என்றால் ,நிச்சயமாக பயனுள்ளதே. ..மிக முக்கியமான ஒருசில பயன்களை மட்டும் பட்டியலிடுகிறேன்.
  • ஆன்ட்ராய்டு போனில் இருக்கும் GOOGLE PLAY   உதவியுடன் நீங்கள் பல்வேறு அப்ளிகேஷன்களை இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
  • சாதாரண மொபைல் தமிழ் எழுத்துருக்களை சப்போர்ட் செய்யாது.ஆனால் ஆன்ட்ராய்டு மொபைலில் தமிழ் -ஆங்கிலம்,ஆங்கிலம்-தமிழ் அகராதி உதவியுடன் எல்லா சொற்களுக்கும் பொருள் காணமுடியும்.
  • HDFC,ICICI,STATE BANK ஆகியவற்றில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் அந்தந்த வங்கி அப்ளிகேஷன்கள் உதவியுடன் மொபைல் பேங்கிங் வசதியைப்பெற முடியும்.
  • GPS என்னும் வசதியுடன் உலகின் எந்த மூலைக்கும் வழியைப்பார்த்துக்கொண்டே செல்ல முடியும்.
  • 5000 ரூபாய் இருந்தால் இப்பொழுது ஆன்ட்ராய்டு மொபைல் வாங்க முடியும்.
  • பல இலவச கேம்களை டவுன்லோடு செய்து விளையாட முடியும்.
  • மேலும் பல பயன்களை அடுத்த பதிவில் தொடர்கிறேன்....

Saturday, 23 March 2013

எதிர்நீச்சல் mp3 பாடல்கள் இலவச டவுன்லோடு

பயணக்கட்டுரை-கோயம்புத்தூர் பயணம்

பயணங்கள் நம் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும்.சில பயணங்கள் வாழ்க்கைப்பாதையையே கூட மாற்றிவிடும்.கோயம்பத்தூர் பயணம் எனக்கும் நிறைய படிப்பினையைத்தந்தது. நான்கு முறை என் நண்பன் புண்ணியமூர்த்தியுடன் பைக்கில் கோவை சென்றிருக்கிறேன். எனக்கு கோவை பிடித்துப்போனதற்கு பல காரணங்கள் உண்டு.பெரிய நகரமும் இருக்கும்,ஆனால் ஒரு அமைதியும் இருக்கும். அனைத்து மனிதர்களிடமும் மனிதாபிமானம் இருக்கும். நகர வாழ்க்கை வாழ்ந்தாலும் அங்கே தமிழ் கலாச்சாரம் இருக்கும். வீட்டு வாசலில் சாணமிடுவது, பெண்கள் கழுத்தில் தாலிக்கயிறு அணிவது அங்கே நகரத்திலும் மேல்குடி மக்களிடமும் காணமுடியும்.நம் புதுச்சேரியில் கிராமங்களில்  கூட இவற்றைக் காணமுடிவதில்லை. கோவையைச்சுற்றிலும் உள்ள மருதமலை,பொள்ளாச்சி, சிறுவாணி, ஆழியாறு,திருமூர்த்தி அருவி,ஈஷா யோகா மையம் ஆகியவை என்னை மிகவும் கவர்ந்த இடங்கள்.நானும் என் நண்பனும் எப்பொழுதும் இரவில்தான் பயணத்தைத் தொடங்குவோம்.வழியில் கோவில் ,பள்ளி போன்ற இடங்களில் எங்காவது உறங்குவோம். எங்கு வேண்டுமானாலும் குளிப்போம். இயற்கையை ரசிப்போம். நீங்களும் ஒருமுறை கோவை சென்று பாருங்கள். மனிதாபிமானமுள்ள மனிதத்தைக் காண்பீர்கள். இன்னும் நிறைய பேச ஆசை. வார்த்தைகள் கிடைக்கவில்லை.அடுத்த பதிவில் தொடர்கிறேன்.நன்றி.

இருசக்கர வாகனம் வாங்க முன்பணம் (MCA) பெற விண்ணப்பம்

Monday, 18 March 2013

ஈட்டிய விடுப்பு விண்ணப்பம்(EL) PDF வடிவில்

TNPSC AND TET முக்கிய பாடக்குறிப்புகள்

TNPSC  மற்றும் TET தேர்வுகளுக்கான அனைத்து பாடங்களுக்கும் தேவையான முக்கிய பாடக்குறிப்புகள் அடங்கிய ஒரு தளத்தைக் கண்டேன்.அதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன். tntet2012.blogspot.com  என்ற அத்தளத்தில் தமிழ், ஆங்கிலம்,கல்வி உளவியல் என எல்லாம் டவுன்லோடு செய்ய சொடுக்கவும்

Saturday, 16 March 2013

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு உதவும் ஒரு வலைத்தளம்

அனைவருக்கும் வணக்கம்.நானே முதலில் எழுதும் பதிவு இது.தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு மிகவும் பயன்படும் ஒரு வலைத்தளத்தை அறிமுகம் செய்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
நூலகம் என்னும் வலைத்தளமே அது.முன்தொடக்கப்பள்ளி குழந்தைகள் முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் வரை அனைவருக்கும் தேவையான 
பாடங்கள் ,காட்சி அட்டைகள்,காட்சிப்பாடல்கள்,வண்ணப்பக்கங்கள் அனைத்தும் இத்தளத்தில் கிடைக்கும்.தளத்திற்குச் செல்ல இங்கே சொடுக்கவும்.CLICK.என்னுடைய முதல் பதிவைப்பற்றிய உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.நன்றி.