Friday 5 June 2015

ஏழைகள்தான் ஏமாந்தவர்களா ?

பதிவுலகம் பக்கம் வந்து பலகாலமாகி விட்டது..நீண்ட நாட்களாக நெஞ்சில் இருக்கும் கோபத்தின் வெளிப்பாடுதான் இப்பதிவு..

ஆம்..தொடர்ச்சியாக ஏழைகள் மீதே அனைத்து சுமைகளையும் வைக்கிறது ஒவ்வொரு அரசாங்கமும்...எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதே நிலைதான் நீடிக்கிறது..

மத்திய அரசின் பல்வேறு நிறுவனங்களில் இருக்கும் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அடிக்கடி செய்தித்தாள்களிலும் ஊடகங்களிலும் பல்வேறு அறிவிப்புகள் வருவதை நாம் பார்த்திருப்போம்...
வங்கித்தேர்வுகள் கூட அடிக்கடி நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்...

இவையெல்லாம் நல்ல விஷயம்தான்...ஆனால் பிரச்சனை ஆரம்பிக்கும் இடம்  விண்ணப்பக் கட்டணம் ,தேர்வுக்கட்டணம் என்ற பெயரில் ரூபாய் 500 முதல் 1000 வரை கட்டச்சொல்லுகின்ற அநியாயம் இருக்கிறதே அதுதான் கொடுமையிலும் கொடுமை...

வேலையில்லாமல் தவிக்கும் ஏழைகள்தான் பாதிபேர் இத்தகைய தேர்வுகளை எழுதுகின்றனர்..அவர்கள் இருக்கும் நிலைமையில் ஒவ்வொரு வேலைக்கும் 500, 1000 என்று கட்டச் சொன்னால் அவர்கள் எங்கே போவார்கள்.

திறமை இருக்கும் பல்வேறு மாணவர்கள்  பணம் கட்ட இயலாமலே இத்தகைய தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதே இல்லை..பெண்களுக்கு மட்டும் ஒரு சில வேலைகளுக்கு தேர்வுக்கட்டணம் கட்டத்தேவையில்லை என்பது கொஞ்சம் ஆறுதல்....மக்கள் திருந்திவிட்டார்கள் ...அரசாங்கம்தான் சாதி மத பேதத்தை மக்கள்  மனதில் விதைக்கிறது...

கோடி கோடியாய் தொழில் தொடங்கவும் மானியமாகவும்  கோடீசுவரர்களுக்கு கொட்டிக்கொடுக்கும் இந்த அரசாங்கம் வேலை தேடி அலையும் ஏழைகளின் வயிற்றில் ஏன் அடிக்க வேண்டும்...ஏன் எந்த அரசியல்வாதியும் இதைக் கேட்பதில்லை என்று தெரியவில்லை...

பத்து வருடங்களுக்கு முன் நான் எப்படியோ படித்து பத்து பைசா செலவில்லாமல் இந்த ஆசிரியர் பணிக்கு வந்துவிட்டேன்...ஆனால் என்னைப்போல ஏழைக்குடும்பத்தில் பிறந்த எத்தனையோ பேர் திறமையிருந்தும் அரசாங்கத்தின் இதுபோன்ற அநியாயங்களால் வேலையில்லாப் பட்டதாரிகளாகவே  அலைந்து கொண்டிருக்கின்றனர்...

இளைஞர்கள் அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் சொந்தமாக தொழில்தொடங்கலாம் என்று பார்த்தால் கூட எந்த வங்கியில் மனிதனை நம்பி கடன் தர தயாராயிருக்கிறார்கள்...

குறைந்தபட்சம் வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ளவர்களுக்கு மட்டுமாவது இலவசமாக தேர்வெழுத அனுமதிக்கலாம்...அரசாங்கம் மாறுவது முக்கியமல்ல...அரசின் மனம் மாறவேண்டும்...படிக்காமல் இருந்திருந்தாலவது ஏதாவது அப்பன் செய்த குலத்தொழிலையோ விவசாயம் செய்தோ வருமானத்திற்கு வழி செய்திருப்பர். அனைவருக்கும் கல்வி என்று அறைகூவல் விடுத்து வீட்டிற்கு ஒரு என்ஜினியரையும் பட்டதாரியையும் உருவாக்கி வைத்துவிட்டீர்கள்.. ஆனால் வேலைக்கோ பணமிருக்கும் பணக்காரர்கள் மட்டுமே எத்தனை முறை வேண்டுமானாலும்  பணம் கட்டி தேர்வெழுதுகிறார்கள்...

எங்கள் ஊரில் பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவன் ஒருவன் பட்டப்படிப்பை முடித்துவிட்டு அவன் அப்பா இறந்துவிட்டதால் குடும்ப பாரத்தை தன் தலையில் சுமந்து கொண்டு ரூ 7000 சம்பளத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறான்...இதைப்போன்ற கோடிக்கணக்கான ஏழை திறமைசாலிகள் இந்தியாவில் இருக்கிறார்கள்..
.ரூ 7000 சம்பளத்தில் அவன் குடும்பத்தை நடத்துவதா அல்லது ஒவ்வொரு அரசுத்தேர்வுக்கும் ஆயிரம் கட்டுவதா....சிந்திப்பார்களா தெரியவில்லை அரசியல்வாதிகள்...ஏழைகளையும் கொஞ்சம் ஏறெடுத்துப் பாருங்கள்.....