Wednesday 20 November 2019

லிஃப்ட் கொடுப்பதில்தான் எத்தனை வகை!

எவ்வளவு வாகனங்கள் பெருகிப்போனாலும் எவ்வளவு பேருந்துகள் நிரம்பி வழிந்தாலும் அடுத்தவர் பைக்கில் ஓசியில் ஈசியாக லிஃப்ட் கேட்டுச் செல்பவர்களும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்..அதில் பல நேரங்களில் பலவிதமான மனிதர்களைப் பார்க்க நேரிடும் ..அவர்களைப் பற்றியும் ஒரு பதிவு எழுதிவைப்போமே..(எவ்ளோ நாள்தான் சீரியசா எழுதறது ,வேற என்ன எழுதறதுனு தெரியல ..)

நம்ம சுத்தம் சுந்தரராஜன மாதிரி ஒரு குரூப் இருக்காங்க..ரொம்ப பாவமா லிஃப்ட் கேப்பாங்க..
கடைசியில சாராயக்கடை வாசல்ல நிறுத்தச் சொல்வாங்க..அட பண்ணாட இதுக்காடா இவ்ளோ பொறுப்பா லிஃப்ட் கேட்டனு தோணும்..
என்னதான் பெண்கள் வாகனம் அதிகமாக ஓட்டத் தொடங்கிவிட்டாலும் பெண்களிடம் பெண்களே லிஃப்ட் கேட்பதில்லை..அவ்ளோ நம்பிக்கை...ஆண்களிடம் தைரியமாக லிஃப்ட் கேட்டுச் செல்வார்கள்..

தாய்க்குலங்களுக்கு மட்டுமே தாராளமாக லிஃப்ட் கொடுக்கும் உயர்ந்த மனம் கொண்ட பல உத்தமர்களும் உண்டு..

என் மனைவியைத் தவிர இந்த சீட்டு யாருக்கும் கிடையாதுன சொல்ற ஒன்னு ரெண்டு பேரும் இருக்காங்க..
பள்ளி மாணவர்கள் பலர் வீட்டில் பேருந்துக்கு கொடுக்கும் காசையெல்லாம் வாங்கி சாப்டுட்டு இளிச்சவாயன் எவனாச்சும் கெடைச்சா லிஃப்ட் கேட்டு போறவங்களும் இருக்காங்க..சுயமரியாதையோடு யாரிடமும் கேட்காமல் செல்லும் அரசுப்பள்ளி மாணவர்களும் பலர் இருக்கிறார்கள்..அத்தகைய மாணவர்களைப் பல நேரங்களில் தினமும் ஏற்றிச்சென்றிருக்கிறேன் நானும்..சிலர் வண்டியை நிறுத்தறியா இல்லியா என்று நடுரோட்டில் நின்றுகொண்டு லிஃப்ட் கேட்பவர்களும் உண்டு..
எனக்குத் தெரிந்த ஆசிரிய நண்பர் அண்ணன் சுவாமிநாதன் ஒருமுறை ஒரு அம்மாவை பைக்கில் ஏற்றிச் சென்றிருக்கிறார்..வழியில் Speed breakல் ஏறி இறங்கும்போது அந்த அம்மா கீழே விழுந்து அவரை மருத்துவமனையில் சேர்த்ததாகவும்,அதிலிருந்து யாருக்கும் லிஃப்டே கொடுப்பதில்லை என்று கூறுவார்..பாவப்பட்டு லிஃப்ட் கொடுத்துத் தன் பணத்தைப் பறிகொடுத்தவர்களும் இருக்கிறார்கள்.

அது எல்லாம் இருக்கட்டும் உங்க வாழ்க்கை என்ற வண்டியில் கடைசிவரை வரப்போகும் மனைவியை ஏற்றும் முன் நல்லா யோசிச்சு ஏத்துங்க..பாதி வழியில இறக்கிவிட முடியாதில்ல..(மெசேஜ் சொல்லியாச்சு)

நீங்க யாருக்கெல்லாம் லிஃப்ட் கொடுத்திருக்கீங்க..கமெண்டுல சொல்லிடுங்க..உங்கள் கலியபெருமாள்.

Saturday 15 September 2018

என்று தணியும் இந்த குடிபோதை மோகம்?

பாரதியும் அரவிந்தரும்
வாழ்ந்திட்ட பூமி
பாழான மதுவாலே
அழியுதடா சாமி..
அளவற்ற குடியாலே
சாகுதொரு சமுதாயம்.
அதில்தானே அரசாங்கம்
தேடுதிங்கு ஆதாயம்.
ஏழையின் பலவீனம்
ஏமாற்றும் மதுபானம்.
அரசுக்கு வருமானம்
அதுவன்றோ அவமானம்.!
மலிவுவிலையில் ஊருக்கு
ஒன்பது மதுக்கடை
மயக்கத்திலே மனிதன்
சாய்வதோ சாக்கடை.

அவ்வைப்பாட்டி வரிகளை
அர்த்தமாக ஆக்கினான்
ஊக்க  மதுகைவிடேல்
உவகையோடு சொல்கிறான்.
குடிப்பதற்குக் காரணம்
தேடுகிறான் தினம்தினம்
குடல்வெந்து போனபின்னே
ஆகிறானே நடைபிணம்.
மாணவரும் குடிக்கின்றார்
மங்கையரும் குடிக்கின்றார்.
வானத்திலே பறக்கின்றார்
மானமின்றி கிடக்கின்றார்..

மதுவிலக்கை ஓரங்கட்டி
மகாத்மாவைப் போற்றுகிறோம்
காந்திஜெயந் தியில்மட்டும்
கடைகளை மூடிக்கிறோம்.

கள்ளுண்ணாமை அதிகாரத்தைக்
காலில்போட்டு மிதித்துவிட்டு
திருவள்ளுவர் தினத்திலே
திறப்பதில்லை கள்ளுக்கடை.

ஆட்சிகள் மாறுமோ?
அதிகாரம் மாறுமோ?
மதுவிலக்கு வருமோ?
மனநிம்மதி தருமோ?
பகல்கனவாய் பாதியிலே
கலைந்தேதான் சென்றிடுமோ?

இலக்கணப் பிழையின்றி
எழுதினேனா தெரியவில்லை.
இதயத்துக் கோபமோ
இன்னமும் தீரவில்லை..

அடுத்த பதிவில் தொடரும்வரை உங்கள் கலியபெருமாள்.


Tuesday 24 April 2018

ஜனங்களை வென்ற ஜானகியின் பாடல்கள்.

இசைப்பதிவு எழுதி ரொம்ப நாளாச்சு..தேர்வு விடுமுறை விட்டாச்சு..அதான் பதிவுலகம் பக்கம் தலைகாட்டத் தொடங்கியிருக்கிறேன்..கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்..
நேற்று (ஏப்ரல் 23) இசைக்குயில் ஜானகி அம்மாவின் எண்பதாவது பிறந்தநாள்..நேற்றைக்கே இப்பதிவை எழுத நினைத்தேன்..கொஞ்சம் வேலையால் முடியவில்லை..

நெடுந்தூரப் பயணங்களை நிமிடங்களில் முடித்துவைக்க நெஞ்சிற்கினிய பாடல்களால்தான் முடியும்..அப்படி ஒரு அருமையான குரலுக்கு சொந்தக்காரர்தான் ஜானகி அம்மாள்..அவருடைய ஆயிரக்கணக்கான பாடல்களில் சிறந்த பத்து பாடல்களை மட்டும் இங்கே வரிசைப்படுத்தியுள்ளேன்..நீங்களும் ரசித்து மகிழுங்கள்..

1. பாடல்: சின்னத்தாயவள்
  படம்:  தளபதி .
இளையராஜாவின் இசையில் வித்தகக்கவிஞர் வாலி எழுதிய அருமையான பாடல்..நிச்சயம் இந்தப் பாடலைப் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது..மணிரத்னம் படம் என்றாலே பாடல்கள் ஸ்பெஷல்தான்..அதிலும் இப்பாடல் ஜானகியின் காந்தக்குரலில் கவனம் ஈர்க்கும் ரகம்..

2.படம்: மௌனராகம்.
பாடல்: சின்னச்சின்ன வண்ணக்குயில்

மணிரத்னம், இளையராஜா இணையில் மற்றுமொரு அருமையான படம்.. ன,ண,ல,ள உச்சரிப்பு இப்பாடலில் அதிகம் வரும்..தமிழ் சினிமாவில் தவறில்லாமல் தமிழை உச்சரிக்கத் தெரிந்தவர்கள் சிலரே..மன்னவன் பேரைச்சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் என்ற வரிகளை அருமையாகப் பாடியிருப்பார்..

3.படம்: தேவர் மகன்.
பாடல்: இஞ்சி இடுப்பழகா

உலகநாயகன் கமலின் படம்..இசையுலகின் நவரச நாயகி என்று கூறுமளவுக்கு அனைத்து உணர்வுகளையும் அழகாய் வெளிப்படுத்துவதில் அவருக்கு நிகர் அவரே..
ரேவதி பாடுவது போலவே இருக்கும் கேட்கும்போது..

4. படம்: சங்கமம்.
பாடல்: மார்கழித் திங்களல்லவா?
பெரிய நடிகர்கள் இல்லாமல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் அமைந்த அழகிய பாடல்..என்ன ஒரு குரல்..இசைக்குயில் பட்டம் பொருத்தமானதுதான்..

5.வைதேகி காத்திருந்தாள்.
பாடல்: அழகு மயில் ஆட..

மீண்டும் ஒரு நாட்டியப்பாடல் நம்ம இசைஞானியின் இசையில்..இளம் வயதில் கணவனை இழந்த ஒரு கைம்பெண்ணின் உணர்வுகளை ஒவ்வொரு வார்த்தையிலும் வடித்திருப்பார்..இசையை ரசிக்க பெரிய அறிவெல்லாம் தேவையில்லை என்று உணர்த்தும் பாடல்..

6.படம்: ஜானி
பாடல்: காற்றில் எந்தன் கீதம்
எதார்த்த இயக்குனர் மகேந்திரனின் படம்..இளையராஜாவின் இசை பிடித்தவர்களுக்கு நிச்சயம் ஜானகி அம்மாவையும் பிடிக்கும்..நான் ,என் நண்பன் புண்ணியமூர்த்தியோடு கிரிவலம் சென்று வரும்போது இது போன்ற பாடலைத்தான் கேட்டு வருவோம்..களைப்பும் தெரியாது கால்வலியும் தெரியாது..

7. படம்: பதினாறு வயதினிலே..
பாடல்: செந்தூரப்பூவே

இயக்குனர் இமயம் பாரதிராஜா படம்..சமீபத்தில் மறைந்த SRIDEVI யின் படம்..பருவப்பெண்ணின் ஏக்கங்களை பதினாறு வயதுப்பெண்ணாகவே பாடியிருப்பார்..இசையின் மூலக்கூறுகளை ஆராயும் அளவுக்கு விஞ்ஞானம் தெரியாது எனக்கு..ஆனால் மனக்காயங்களுக்கு பல நேரங்களில் மருந்தாவது இந்த இசையே..

8.படம்: கர்ணா.
பாடல்: மலரே மௌனமா..
இசையமைப்பாளர் வித்யாசாகரின் இசையில் அமைந்த பாடல்..அவருடைய சிறந்த ஐந்து பாடல் எடுத்தாலே நிச்சயம் இப்பாடலும் இடம்பெறும்..SPB சாரும் ஜானகியும் போட்டி போட்டுக்கொண்டு பாடிய ஒரு பாடல்..


9. மெல்லத்திறந்தது கதவு
பாடல்: ஊருசனம் தூங்கிடுச்சு.

மெல்லிசை மன்னரும், இசைஞானியும் சேர்ந்து இசையமைத்த படம்..மோகன் படம் என்றாலே பாடல்கள் அருமையாகத்தான் இருக்கும்..ஆயிரம்முறை கேட்டாலும் சலிக்காத ஒரு பாடல்..கன்னிப்பொண்ணு நானே..என் மாமனே..என் மாமனே என்ற வரிகள் போதும் அவருடைய திறமைக்கு..

10. படம்: உயிரே
பாடல்: நெஞ்சினிலே

ஜானகி பாடல் என்று கூறிவிட்டு ROMANTIC பாடல் இல்லாமல் எப்படி?
ரொமான்ஸ் பாடல்கள் பாடல்கள் பாடுவதில் அவருக்கு நிகராக இன்னும் பிறக்கவில்லை என்றே கூறலாம்..ஏ.ஆர்.ரகுமானின் இசையில் காதலைக் கரைத்து ஊற்றிய ஒரு பாடல்..நெஞ்சினிலே ஊஞ்சலே என்று பாடும்போது நாமும் கொஞ்சம் ஆடித்தான் போவோம்..

ஆயிரக்கணக்கான பாடல்களில் இவைதான்  சிறந்தவை என்று அர்த்தமில்லை..என் மனதைவிட்டு நீங்காத சிலவற்றை மட்டுமே எழுதியுள்ளேன்..முடிந்தால் நீங்களும் கேட்டு மகிழுங்கள்..இந்த வாரத்தில் பிறந்தநாள் கொண்டாடும் நண்பர்களுக்கு இப்பதிவைச் சமர்ப்பிக்கிறேன்..நன்றியுடன் உங்கள் கலியபெருமாள்..

Saturday 3 March 2018

கடன் அட்டை ( credit card ) வரமா? சாபமா?

கடன் அட்டை பயன்படுத்துபவர்களுக்காக அல்ல இப்பதிவு..அதைப்பற்றி அறிமுகம் இல்லாதவர்களுக்கு இப்பதிவு உதவும் என்று நினைக்கிறேன்.. கடன்பட்டார் நெஞ்சம்போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்று புராணங்களிலே எழுதப்பட்டது..நம் இந்தியாவைப் பொறுத்தவரை வங்கியில் கடன் வாங்கி ஏமாற்றும் கோடீஸ்வரர்கள் நிறையபேர் இருந்தாலும் கடன் அட்டையைப் பயன்படுத்துபவர்கள் இங்கே மிகவும் குறைவுதான்..

உலக அளவில் அதிகமான கிரெடிட் கார்டு பயன்படுத்தும் நாடு அமெரிக்காதான்..அமெரிக்காவில் ஒருவரே 20,, 30 கடன் அட்டை கூட வைத்திருப்பார்களாம்..2018 பிறந்த பிறகும் கூட நம் நாட்டில் வெறும் 3 கோடி பேர் மட்டுமே கிரடிட் கார்டு பயன்படுத்துகிறார்கள்..நம் மக்கள் தொகையில் 5 சதவீதம் பேர் கூட இல்லை..

இதை நல்லதா ,கெட்டதா என்று சொல்லமுடியவில்லை..ஏனெனில் உண்மையில் யாருமே கடன் வாங்காமல் வாழ்கிறார்களா என்றால் இல்லை என்றுதான் கூறமுடியும்..இந்தியாவில் மக்கள் கொஞ்சம் முன்னெச்சரிக்கையானவர்கள் என்பது எல்லோரும் அறிந்ததே..

கிரடிட் கார்டைப் பற்றி சொன்னாலே நம்மில் பலரும் தூரமாய் ஓடுகிறார்கள்..அநியாயமாக வட்டி போட்டு வாங்குவார்கள்; தேவையற்ற பிரச்சனை வரும் என்று நினைக்கிறார்கள்..ஆனால் உண்மை அதுவல்ல..உண்மையில் சரியான செலவுக்கு சரியான நேரத்தில் பயன்படுத்தி சரியான நேரத்தில் சரியாக திருப்பிச் செலுத்திவிட்டால் எந்தப் பிரச்சனையும் இல்லை..குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தத் தவறினால்தான் வட்டியோடு செலுத்த வேண்டியிருக்கும்..

கிரடிட் கார்டு பற்றி ஒரு சில விஷயங்கள் மற்றும் தெரிந்துகொண்டால் போதும்..உங்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகபட்ச தொகைக்கு எந்தப் பொருள் வேண்டுமானாலும் நம் அவசரத் தேவைக்கு வாங்கிக் கொள்ளலாம்..குறிப்பிட்ட தவணைத் தேதிக்குள் திருப்பிச் செலுத்திவிட்டால் ஒரு பைசா வட்டி கூட இல்லை..

இன்றைய அவசர வாழ்க்கையில் அவசரத்தேவைக்கு எவன் ஒரு பைசா வட்டியில்லாமல் கடன் கொடுக்கிறான்..வாங்குவதில் இருக்கும் பொறுப்பு திருப்பிச் செலுத்துவதிலும் இருந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை..

கடன் அட்டையில் இருக்கும் ஒரே பிரச்சனை திருப்பிச் செலுத்தும்போது வங்கியில் சென்று challan மூலம் செலுத்தினால் அதற்கு ஒரு 100 ரூபாய் charge போடுவார்கள்..அது ஒன்றுதான் பிரச்சனை..PAYMENT காசோலை மூலமாகவோ internet banking மூலமாகவோதான் செலுத்த வேண்டும்..

கிரடிட் கார்டு பயன்படுத்தி ஏமாற்றுபவர்களின் பட்டியலில் இந்தியா உலகில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்த நிலை மாறினால் கிரடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நிச்சயம் உயரும்..அவர்களால்தான் மற்றவர்கள் பயப்படுகிறார்கள்..நேர்மையாக இருப்பவர்கள் நிச்சயமாய் பயப்படத் தேவையில்லை கிரடிட் கார்டைப் பார்த்து..மறைமுகக் கட்டணமெல்லாம் எதுவுமில்லை.

இன்று பல வீட்டு சுபநிகழ்ச்சிகளின் அவசர செலவுக்கு ஆபத்தில் உதவுவது கிரடிட் கார்டு என்றால் மிகையில்லை..

கிரடிட் கார்டு இருக்கிறது என்பதற்காக தேவையே இல்லாமல் கண்ட பொருளையும் வாங்கிக்குவித்தால் நிச்சயமாய் கிரடிட் கார்டு சாபமே..அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே..

தேவைக்கேற்ப அளவோடு பயன்படுத்தினால் கிரடிட் கார்டு வரமே..வாங்க நினைப்பவர்கள் தைரியமாக வாங்குங்கள்..கடன் வாங்கி வாழ விரும்பாதவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை..சந்தேகம் இருந்தால் விளக்கத் தயாராய் உங்கள் கலியபெருமாள்..

Saturday 24 February 2018

கருப்பாய் பிறந்தவர்களுக்கும் கொஞ்சம் கரிசனம் காட்டுங்கள்.

வெள்ளை நிறத்தொரு பூனை எங்கள் வீட்டில் வளருது கண்டீர்... எந்த நிறமிருந்தாலும் அவை யாவும் ஒரே தரமன்றோ? என்று பாட்டுக்கொரு புலவன் பாரதி எழுதிவிட்டுச் சென்றுவிட்டார்..ஆனால் இன்னமும் இங்கே நிறத்தை வைத்துத்தான் பல இடங்களில் தரம் நிர்ணயிக்கப்படுகிறது..

இது ஏதோ இன்று நேற்று வந்த பிரச்சனையாக இல்லை..என் தேசத்தில் மட்டுமல்ல இது ஒரு சர்வதேச பிரச்சனை..

கல்வி மட்டும் போதாது போல இங்கே கலரும்தான் ஒரு மனிதனின் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது..விலங்குகளும் இதற்கு விதிவிலக்கல்ல போல..பசுமாட்டைத்தானே எல்லோரும் பக்தியோடு வழிபடுகிறோம்..கருப்பாய் இருக்கும் எருமைமாட்டை என்னவோ எம வாகனமாகத்தானே சொல்லிவைத்திருக்கிறார்கள்..நாட்டில்தான் இந்நிலை என்றால் காட்டிலும் இதே கதிதான் போல..சிவப்பாய் இருக்கும் சிங்கத்திற்குத்தான் காட்டரசன் பதவி..கம்பீரமாய் இருந்தாலும் கருப்பாய் போனதால் யானைக்கு அடுத்த இடம்தான்..

ரஜினியின் சிவாஜி படத்தில் ஒரு காட்சி வரும் ..அங்கவை சங்கவை நகைச்சுவைக் காட்சி..பார்ப்பதற்கு காமெடியாக இருந்தாலும் கருப்பாய் பிறந்த பெண்களின் மனவலியை ஏன் சூப்பர்ஸ்டார் உணராமல் போனார் என்று தெரியவில்லை..பல சினிமாக்களில் பார்த்திருக்கிறேன்..இந்தியாவில் கருப்பான பெண்களே இல்லாதது போல கருப்பான வேடத்திற்குக் கூட செக்கச்செவேல் என்றிருக்கும் நடிகைகள்தான் தேவைப்படுகிறார்கள்..பாலாவின் பரதேசி படத்தில் கூட மைதாமாவு போலிருக்கும் வேதிகாவிற்கு கரிபூசி நடிக்க வைத்திருப்பார்..

இந்தியாவைப் பொறுத்தவரை சிவப்பானவர்களே சிறந்தவர்கள்,திறமைசாலிகள்..கருப்பாய் பிறந்தவர்கள் எல்லாம் களவாணிகள்,அறிவற்றவர்கள்..இது பொதுவான கண்ணோட்டம் என்றுதான் கூறுகிறேன்..எல்லோரும் அப்படி எல்லா நேரத்திலும் நினைத்திருந்தால் தமிழ்நாட்டிற்கு ஒரு கர்மவீரர் கிடைத்திருக்க மாட்டார்..

இந்த நிறவேறுபாட்டால் கருப்பாய் பிறந்தவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல் பற்றியும் .தாழ்வு மனப்பான்மையால் அவர்களுக்கு ஏற்படும் இழப்புகளைப் பற்றிதான் இப்பதிவில் எழுத நினைத்தேன்..

நானே சிறுவயதில் நிறைய தாழ்வு மனப்பான்மையால் பாதிக்கப்பட்டிருக்கிறேன்..எனக்குக் கிடைத்த சில நல்ல ஆசிரியர்களின் ஊக்கத்தால் எப்படியோ நன்றாகப் படித்து ஒரு நல்ல அரசு வேலைக்கு வந்துவிட்டேன்..வேலைக்கு வந்தபிறகுகூட வாடகைக்கு வீடுகேட்டுச் சென்றால்  வீட்டு ஓனர்கள் என்னைக் கொஞ்சம் சந்தேகக் கண்ணோடுதான் பார்ப்பார்கள் திருடனாய் இருப்பானோ என்று..

நம்ம ஊர்ல ஒன்னு சொல்வாங்க..ஆம்பபுள்ள எப்படி இருந்தாலும் பரவாயில்ல.பொம்பளபுள்ளதான் கருப்பா பொறந்துட கூடாதுன்னு..அவர்களுக்கு என்ன ஆசையா கருப்பாகப் பிறக்க..என்னதான் சமூகம் முன்னேறினாலும் படித்தாலும் கருப்பாய் பிறந்த எத்தனையோ பெண்கள் இன்னும் நிறையபேர் முதிர்கன்னிகளாகத்தான் இருக்கிறார்கள்..காதலுக்குக் கண்ணில்லை என்பார்கள்..ஆனால் அதில்கூட சிவப்பாய் இருக்கும் பெண்களுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது..கருப்பாய் இருப்பவர்களுக்குக் காத்திருப்போர் பட்டியலே நீள்கிறது..  கருப்பாய் பிறந்த பெண்களைக் கல்யாணம் செய்தால் கவர்மென்ட் வேலையில் முன்னுரிமை என்று கூறிப்பாருங்கள்..முதிர்கன்னிகளே யாரும் இருக்கமாட்டார்கள்..

இந்த அவலமெல்லாம் ஒரே நாளில் மாறிவிடாது என்பதை நானும் அறிவேன்..எனக்கு நெருக்கமான ஒருவருக்கு இரண்டு மகன்கள்..சிவப்பாய் இருப்பவனை தவறே செய்தால்கூட தண்டிக்க மாட்டார்கள்..கருப்பாய் இருப்பவனையே எப்போதும் எல்லாவற்றுக்கும் திட்டித் தீர்ப்பார்கள்..இந்தப் பதிவைப் படித்தாலாவது ஒரு நான்கு பேராவது மாறிவிடமாட்டார்களா ் என்ற நப்பாசையில்தாற் இப்பதிவை எழுதுகிறேன்.. அன்புள்ள அம்மாக்களே உங்கள் மகனுக்குப் பெண்பார்க்கும்போது குணத்தில் அழகான பெண்ணையும் கொஞ்சம் பாருங்கள்..

பணிக்கு வந்து பன்னிரண்டு ஆண்டுகளில் நிறவேறுபாடு பார்க்காமல் நடுநிலையோடு நடந்துகொண்டேனா என்று என்னிடம் மனசாட்சியைத் தொட்டுக் கூறச்சொன்னால் ,சரியாக ஞாபகம் இல்லை கொஞ்சம் யோசித்துச் சொல்கிறேன் என்றுதான் கூறத் தோன்றுகிறது..நாமும் மனிதர்கள்தானே..சிவப்பாய் இருக்கும் மாணவர்கள் படிப்பில் சிறந்தவர்கள் என்று பலநேரங்களில் நினைத்ததுண்டு.. ஆசிரியர்களே, பெற்றோர்களே உங்களால்தான் இந்நிலை மாறமுடியும் ..உங்களிடம் படிக்கும் குழந்தைகளை நிறத்தால் மதிப்பிடாதீர்கள்..கருப்பாய் இருக்கும் மாணவர்களின் தாழ்வு மனப்பான்மையைப் போக்குங்கள்..அவர்களுக்கு அன்பையும் தன்னம்பிக்கையையும் அள்ளிக்கொடுங்கள்..நிறவேறுபாடு நீங்கி நிம்மதியான உலகம் தோன்றட்டும்.. சொல்லவந்ததை முழுதாகச் சொன்னேனா என்று தெரியவில்லை..விடுபட்ட கருத்துக்களை விவாதிப்போம்..நன்றியுடன் உங்கள் கலியபெருமாள்..

Sunday 18 February 2018

அரசாங்கத்திலும் கட்டணக்கொள்ளையா!!?

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் ரயில்வேதுறை என்பது அனைவரும் அறிந்ததே..சாமாணிய மக்களின் தொலைதூரப் பயணத்திற்கு உதவும் ஆபத்பாண்டவன் ரயில்வண்டிதான்..அப்படி ஒரு மரியாதை நேற்று வரை இருந்தது..ஆனால் இன்று கோபம் வருகிறது...இவனுக்கு வேற வேலையே இல்ல போல..நாட்டுல எவ்ளோ நல்ல விஷயம் நடக்குது..அதலாம் விட்டுட்டு எங்கெங்க என்னென்ன குறையுதுனு பாக்கறதுதான் உன் வேலையா என்பது காதில் விழுகிறது..நாம எப்படியோ யார் செஞ்ச புண்ணியத்துலயோ ஒரு அரசாங்க வேலைக்கு வந்துட்டோம்..ஆனால் இன்றைய காலகட்டம் அப்படியல்ல...ஆயிரம் பேர் தேவைப்படுற வேலைக்கு 5 லட்சம் பேர் விண்ணப்பிக்கறாங்க..இன்றைய வேலைவாய்ப்பு என்பது ஓட்டப்பந்தயமாக இல்லை..மாரத்தான் ஓட்டமாகி விட்டது...அதிலும் ஓட திறமையான ஒரு ஏழை இளைஞன் வந்தால் அவனிடம் பத்தாயிரம் ரூபாய் கேட்டால் அவன் என்ன செய்வான்..?

இப்படித்தான் உள்ளது இன்றைய அரசின் கொள்கை..சமீபத்தில் ரயில்வே துறையில் வந்த வேலைவாய்ப்புச் செய்தியை எல்லோரும் பார்த்திருப்பீர்கள்...ஒரே சமயத்தில் இரண்டு notification..அதுவும் 89000 பேருக்கு வேலைவாய்ப்பு..ஆஹா அருமையான அரசு..மக்களின் மீது எவ்வளவு அக்கறை என்று பார்த்தால் வச்சாங்க பாரு ஆப்பு..ஒவ்வொரு தேர்விற்கும் 500 ரூபாய் தேர்வுக்கட்டணமாம்..இரண்டு வேலைகளுக்கும் விண்ணப்பிக்க 1000 ரூபாய் செலுத்த வேண்டுமாம்..என்ன ஒரு வியாபார யுக்தி..எப்படியும் பத்தாயிரம் கோடி தேறும் தேர்வுக்கட்டணம்..வங்கி மோசடிகளை சமாளிக்க தேவைப்படலாம்..நான் எந்த கட்சிக்கும் எதிரானவன் அல்ல..சாமாணிய மக்களின் வயிற்றில் இப்படியா அடிப்பது? ஏற்கனவே இதைப்பற்றி ஏழைகள்தான் ஏமாந்தவர்களா? என்னும் தலைப்பில் எழுதியிருக்கிறேன்..

இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய் ஆன்லைன் விண்ணப்பத்தில் ஏதேனும் தவறுசெய்து விட்டால் பரவாயில்லையாம்..அந்தத் தவறைத் திருத்திக்கொள்ள இன்னும் ஒரு 250 ரூபாய் கட்டினால் போதுமாம்..தேர்வு எழுதும் ஏழை மாணவர்கள் மீது என்ன ஒரு பாசம் அரசிற்கு..இதை பகல்கொள்ளை என்று சொல்வதா அல்லது கடல்கொள்ளை என்று சொல்வதா தெரியவில்லை..எப்படியாவது இந்தத் தேர்விலாவது கஷ்டப்பட்டு எழுதி ஒரு வேலைக்குச் சென்றுவிட வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்களை ஊக்கப்படுத்தாவிட்டாலும் பரவாயில்லை..அவர்கள் கனவில் மண் அள்ளிப்போடவா அரசாங்கம்..எத்தனை கோடி இலவசங்கள்,எத்தனை கோடி தள்ளுபடிகள் ?  ஆனால் உங்கள் அரசு வேலைத் தேர்வுக்கு ஏழை மாணவர்களிடம் சுரண்டுவது எந்த வகையில் நியாயம்?

தேர்வுக்கட்டணம் 200 ரூபாய் வைத்தால் கூட பரவாயில்லை..500 ரூபாய் என்பது நடுத்தர குடும்பத்தினருக்கே கொஞ்சம் அதிகமான தொகைதான்..ஒவ்வொரு போட்டித்தேர்வுக்கும் 500,, 1000 கட்டணம் கட்ட பயந்தே பல பேர் விண்ணப்பிப்பதே இல்லை..நல்லதோர் வீணை செய்தே பாடல்தான் நினைவில் வருகிறது..எத்தனையோ திறமைசாலிகள் இத்தகைய பிரச்சனையால் வேலையின்றி திரிகின்றனர்..இதை உடனடியாக அரசின் பார்வைக்கு கொண்டு செல்ல அதிகமாகப் பகிருங்கள்..விரைவில் விடியட்டும் ஏழைகளின் வாழ்வு?

முதல்ல வேலை கொடுங்க..அப்பறம் 500 என்ன 5000 கூட கட்டுகிறோம் என்ற ஏழைகளின் குரலாய் உங்கள் கலியபெருமாள்...

Sunday 11 February 2018

பகுத்தறிவை ஏற்போம்..கொஞ்சம் பாரம்பரியமும் காப்போம்..

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்பார்கள்..அதுபோலத்தான் நம் முன்னோர்களின் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் விரல் நுனியில் பிடித்துக் கொண்டிருக்கும் சிலரால்தான் இன்னமும் என் தேசம் அழியாமல் இருக்கிறது..


இயற்கையைத்தான் நம் முன்னோர்கள் கடவுளாக வணங்கி வந்தார்கள்..கடல்,மலை,மழை,சூரியன், சந்திரன்,கோள்கள் என அனைத்தையும் கடவுளாக வழிபட்டனர்..அதுவரை மனிதன் நல்லவனாகவும் இயற்கையை நேசித்தும் வந்தான்..ஆனால் இயற்கை வேறு, கடவுள் வேறு என்று எண்ண ஆரம்பித்த நாளில் மனித இனத்தின் அழிவு துவங்கியது..உலகில் கடவுள் இல்லை என்று பகுத்தறிவு பேசத்தொடங்கிய நாளில்  நம் பாரம்பரியமும் ஒவ்வொன்றாக காணாமல் போகத்துவங்கியது..

பகுத்தறிவாளர்கள் யாரும் உடனே சண்டைக்கு வந்துவிடாதீர்கள்..நான் பகுத்தறிவுக்கு எதிரானவன் அல்ல...சந்தேகம் இருந்தால் தலைப்பைப் படிக்கவும்..

நான்கு எழுத்து படித்துவிட்டோம் என்ற மமதையில் நம் பெற்றோர் எந்த பழக்கம் சொன்னாலும் அதில் குற்றம்குறை கூறி அவர்களைப் படிக்காத முண்டங்கள் என்று கேலி செய்தோம்..ஆனால் அவர்களின் பழக்கவழக்கங்கள் எல்லாம் இன்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படுகிறது..நானும் கூட என் தாத்தா பாட்டியை நக்கலடித்திருக்கிறேன் பட்டிக்காடுகள் என்று..

இன்று நமக்கு அறிவுரை கூற மூத்தோர்களும் யாரும் நம் வீட்டில் இல்லை..இயற்கையும் இங்கே இல்லை..சாப்பிடும் இலைகூட செயற்கையில் வந்துவிட்டது...

செயற்கைக்கோள் எல்லாம் விட்டு செவ்வாய்க் கோளை சிவப்புக்கோள் என்று சமீபத்தில் கூறியவன் அமெரிக்காகாரன்..ஆனால் பெயரிலேயே செவ் வாய் என்று பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே அழைத்தவன் தமிழன்.

தாலிக்கயிறையே இன்று சிலர் அசிங்கமாக நினைக்கிறார்கள்..ஆனால் தாலிக்கயிறில் மஞ்சள்பூசி குளித்தால் மார்பகப்புற்றுநோய் வராது என்று ஒரு வெள்ளைக்காரன் சொன்னால்தான் நாம் கேட்போம்..குழந்தைகளைப் போட்டோ எடுத்தால் ஆயுசு குறையும் என்று நம் தாத்தாக்கள் கூறுவார்கள்..இன்று கேமராவின் ஒளிக்கதிர்கள் குழந்தைகளின் கண்பார்வையையும் மூளை நரம்புகளையும் பாதிக்கும் என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்..

வீட்டிற்குள் நகம் வெட்டவேண்டாம் என்றது, தொப்புள்கொடி தாயத்து கட்டுவது, கோபுர கலசங்கள் அமைத்தது, விரதங்கள் மேற்கொண்டது, கீழே அமர்ந்து இலையில் சாப்பிட்டது, திருவிழா சடங்குகள், காலையில் பழையசாதம் சாப்பிட்டது என்று எதைப்பட்டியலிடுவது நம் முன்னோர்களின் அறிவை அறிய..அவர்கள் படிக்காத மேதைகளாய் இருந்திருக்கிறார்கள்..நாமோ படித்த முண்டங்களாய் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்..கோவில்களில்  கடவுள் இருப்பதாக நம்பவேண்டாம்..பழங்கால கோவில்கள் அனைத்தும் மனிதனுக்கு புத்துணர்ச்சியை வழங்கிய சக்திமையமாக இருந்திருக்கின்றன என்பதில் ஐயமில்லை..

கடவுளை நம்புகிறீர்களோ இல்லையோ இயற்கையை நம்புங்கள்..மூடநம்பிக்கைகளையும் கொஞ்சம் மறுபரிசீலனை செய்யுங்கள்..அதிலும் ஏதாவது அறிவியல் உண்மை ஒளிந்திருக்கலாம்..ஆலங்குச்சியையும், மாட்டுச்சாணத்தையும் நம்மூரிலும் பாக்கெட்டில் விற்கும் காலம் வரலாம்..விடுபட்டவைகளை விமர்சனத்தில் விவாதிப்போம்..மூத்தோர் சொல்வார்த்தை அமிர்தம் என்னும் கொன்றைவேந்தன் வரிகளோடு விடைபெறுகிறேன்...நன்றியுடன் கலியபெருமாள்..

Saturday 20 January 2018

போக்குவரத்து விதிகளை மீறும் பொ...போக்குகள்..

தலைப்புக்காக நண்பர்கள் முதலில் மன்னிக்கவும்..போக்குவரத்து விதிகளை மதிக்காத பண்ணாடைகளுக்கு இந்த மரியாதையே அதிகம்
என்று நினைக்கிறேன்..அதனால்தான் இந்தத் தலைப்பு..யாருக்கும் அறிவுரை கூறி திருத்துவதற்காக இப்பதிவு எழுதப்படவில்லை...எத்தனையோ திரைப்படங்களில் காட்டுகின்றனர்; தினம்தினம் செய்தித்தாள்களில் எத்தனையோ விபத்துச் செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன...ஆனால் எவனும் இங்கே திருந்திய பாடில்லை..(ஒருசிலரைத் தவிர., அதுவும் திருமணமாகி குழந்தைகள் பிறந்தபிறகு) ..மனதில் இருக்கும் கோபத்தை யாரிடமாவது கொட்டித் தீர்க்கவே இப்பதிவு..

ஒவ்வொரு நாளும் வெளியில் செல்லும்போது இப்போதெல்லாம் திரும்பி உயிருடன் வருவோம் என்ற நம்பிக்கை இல்லாமல்தான் செல்லவேண்டி இருக்கிறது..அதுவும் இருசக்கர வாகனத்தில் செல்வோர் உயிரைப் பிடித்துக் கொண்டுதான் செல்லவேண்டியிருக்கிறது ஒவ்வொரு நொடியும்.

புதுச்சேரியில் வாகனம் ஓட்ட இரண்டு கண்கள் போதாது..குறைந்தது ஆறு கண்களாவது வேண்டும்..இடது பக்கத்தில் ஏறிவரும் எருமைகளைப் பார்ப்பதா? சந்திலிருந்து சரக்கென்று உள்ளே புகும் சனியன்களைப் பார்ப்பதா? விதிகளை மதிக்காதவர்கள் என் தேசத்தில் திறமைசாலிகள்..எல்லாவற்றையும் ஏற்று நடப்பவர்கள் இங்கே ஏமாளிகள்...

இப்போதெல்லாம் நகரத்திற்கு சென்றுவந்தாலே மன உளைச்சலோடுதான் வீட்டுக்கு வரவேண்டியிருக்கு..போக்குவரத்து நெரிசல் பழகிவிட்டது..போக்குவரத்து விதிமீறல்களைப் பார்த்தே மன உளைச்சல் அதிகமாகிறது..எவன் எப்படி போனால் நமக்கென்ன என்று செல்ல முடியவில்லை..ஏனென்றால் அந்த பண்ணாடைகளால் அதிகம் பாதிக்கப்படுவது  ஒழுங்காகச் செல்லும் நாம்தான்..சாலை விபத்துக்களில் உயிரிழக்கும் பாதிப்பேர் ஒழுங்காக ஓட்டிவந்தவர்கள்தான்..அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?

கற்பனையில் மட்டுமே அந்நியன் ஆகமுடிகிறது நம்மால் ..One way ல் செல்லும்போது எதிர்த்திசையில் எழுபது கிலோமீட்டர் வேகத்தில் எருமைகளைப் பார்க்கும்போது செருப்பாலடிக்கத் தோன்றும்...உண்மையில் நாம்தான் தவறாகச் செல்கிறோமோ என்று நினைக்கும் அளவுக்கு வேகமாக வருகிறார்கள்..

என் தேசத்தில்தான் சட்டம் எதுவும் செய்யாதே..அப்புறம் எப்படி பயப்படுவான்..போலீஸ் புடிச்சாலும் வட்டம், மாவட்டம்னு எவனாச்சும் போன் பண்ணுவான்..இதுதான் ஜனநாயக நாடாச்சே..

எதுனா ஒன்னுன்னா சிங்கப்பூர உதாரணமா சொல்றானுங்க..ஆனால் அது சர்வாதிகார சட்டங்கள் கொண்ட நாடென்பது எவனும் அறிவதில்லை..சட்டங்களும் தண்டனைகளையும் கடுமையாக்காமல் இவனுங்கள திருத்தவே முடியாது..மனுநீதிச்சோழன்கள்தான் தேவை இங்கே என் தேசத்திற்கு.. காந்தியே மறுபிறவி எடுத்து வந்தாலும் சிக்னலை மதிக்காதவனையும் தாறுமாறாய் ஓட்டும் தறுதலைகளையும் ரயில்வே கிராசிங்கில் வழியை அடைத்து நிற்கும் ரவுடிகளையும் பார்த்தால் அகிம்சையைத் தூக்கி எறிந்துவிட்டு ஆயுதமே கையில் எடுப்பார்..

எட்டாம் வகுப்பு படிக்கும் பன்றிகள் கூட Enfield ஓட்டுகிறது...யாரை செருப்பால் அடிப்பது இங்கே..ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கூறிக்கொண்டு ஒரு பெண் செல்போனை காதில் வைத்துக்கொண்டு வண்டி ஓட்டிச் சென்ற கொடுமையை நேற்று கண்டேன்..வாழ்க பெண் சுதந்திரம்!?   நீங்க யாரும் இல்லாத ரோட்டுல போய் எப்படியாவது ஓட்டி நாசமா போங்கடா...ஒழுங்கா போறவன் உயிர வாங்காதீங்கடா..சத்தியமா இதப்படிச்சு எவனும் திருந்த மாட்டானு தெரியும்...அடுத்த பதிவில் சந்திக்கும் வரை உங்கள் கலியபெருமாள்...

Thursday 4 January 2018

கந்துவட்டி தற்கொலைகளுக்கு யார் காரணம்?

2017 ஆம் ஆண்டு ஒருவழியாக பல பிரச்சினைகளைப் பார்த்துவிட்டது முடிந்துவிட்டது..சென்ற வருடம் பார்த்த பல்வேறு பிரச்சனைகளுள் ஒன்று கந்துவட்டி  தற்கொலை பிரச்சனை..வருடத்தின் இறுதி நாளில் கூட செய்தித்தாளில் ஒரு தற்கொலை செய்தி கந்துவட்டி பிரச்சனையால் கண்கலங்க வைத்தது..கந்துவட்டி என்ற பெயரில் வட்டிக்குவிடும் பெரியமனிதர்கள் போர்வையில் திரியும் ரௌடிகள் மட்டும்தான் இதற்குக் காரணமா? அவர்களை எல்லோரையும் ஒரே நாளில் இல்லாமல் போகச்செய்து விடமுடியுமா?  அரசாங்கம் நினைத்தால் ஒரே நாளில் ஒழித்துவிட முடியுமா? என்றால் முடியாது என்பதுதான் உடனடி பதில்...

ரஜினி சொல்வது போல இங்கே சிஸ்டமே கெட்டுப் போயிருக்கு..அவற்றை எல்லாம் ஒரே நாளில் அதிரடி நடவடிக்கை இல்லாமல் மாற்ற முடியாது...மாறவேண்டியது உண்மையில் பொதுமக்களாகிய நாமும்தான்...மக்களின் பேராசையால்தான் கந்துவட்டி தொழில் தெருவுக்கு தெரு கொடிகட்டி பறக்கிறது..

இருப்பதைக் கொண்டு யாரும் திருப்தி அடைவதில்லை..ஒரே நாளில் எல்லோருக்கும் அம்பானி ஆக வேண்டும் என்ற ஆசை மட்டும் இருக்கிறது..அம்பானி கூட படிப்படியாகக் கஷ்டப்பட்டு முன்னேறியவர்தான் என்பதை மறந்துவிட்டு...

ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் கடன் வாங்க..சிலர் சொந்தவீடு கட்டவும்,சிலர் தொழில் தொடங்கவும்,சிலர் பெண்ணின் திருமணச்செலவுகளுக்கும், சிலர் அவசர மருத்துவச் செலவுக்கும், சிலர் ஏன் வாங்குகிறோம் என்றே தெரியாமல் வாங்குகின்றனர்..தங்கள் தகுதியை மீறி.. பாட்ஷா படத்தில் ரஜினி பேசும் கடன் வாங்கறதும் தப்பு. கடன் கொடுக்கறதும் தப்பு என்ற வசனம் கேட்பதற்கு ரொம்ப சாதாரணமாகத் தோன்றினாலும் ஆழமாக யோசித்தால் அதன் அர்த்தம் புரிகிறது...

சிலர் எந்த ஒரு பயிற்சியும் முன்னறிவும் இல்லாமலே இருக்கும் வீட்டை அடகுவைத்து தொழில் தொடங்குகின்றனர்...நஷ்டமானால் என்ன ஆகும் என்று எதிர்மறையாகவும் சிலநேரங்களில் சிந்திக்கவேண்டும்..

பலருக்கு வாடிக்கையாளர்களிடம் எப்படி பேச வேண்டும் என்ற பண்பாடு,தொழில் ரகசியம் கூட தெரிவதில்லை..கடனை வாங்கி கடை வைத்து என்ன பயன்..நானே சில கடைகளுக்குச் செல்லும்போது ஏன்டா இந்தக் கடைக்கு வந்தோம் என்று யோசித்திருக்கிறேன்... சிலர் சிடுமூஞ்சிகளாக இருப்பார்கள்..வாடிக்கையாளரின் மனதைக் கொஞ்சமாவது குளிரவைக்கும் ரகசியம் தெரியவேண்டும்...

அப்படியே தொழிலில் நஷ்டம் ஏற்பட்டாலும் கௌரவம் பார்க்காமல் இருப்பதைக் கொண்டு கடனை அடைத்துவிட்டு ஏழையாக வாழ்ந்தாலும் மானத்தோடு வாழ்வதில் தவறில்லை...தற்கொலை ஒன்று மட்டுமே தீர்வல்ல ...வாழ நினைத்தால் வாழலாம்...

ஆனால் பல பணக்காரர்களும் கடன்சுமை அதிகமானாலும் தங்கள் சொகுசு வாழ்க்கையிலிருந்து ஒருபடி கூட இறங்கிவர நினைப்பதில்லை..எது கௌரவம், எது வெட்டி கௌரவம் என்று அறிவதில்லை...

நான் நேரடியாகவே பலரைப் பார்த்திருக்கிறேன்..கடன்காரன் கழுத்தை நெரிக்கும்போது கூட தங்கள் உணவுப் பழக்கம், உடை, வெட்டி செலவுகள் எதையும் குறைத்துக்கொள்வதில்லை...கடன் தொல்லை இருக்கும்போது கூட பியூட்டி பார்லருக்கு பத்தாயிரம் செலவு செய்பவர்களைப் பார்த்திருக்கிறேன்...

இவர்களை யார் திருத்துவது...கடைசியில் கடன் அதிகமாகி விட்டது என்று தற்கொலை செய்வதால் யாருக்கு என்ன லாபம்? கந்துவட்டி காரர்களை கடவுள் பார்த்துக் கொள்வார்...அரசாங்கம் என்ன செய்கிறது என்பதை விட நாமும் மாறவேண்டும்...கந்துவட்டிக் காரர்களுக்கு நான் ஒன்றும் ஆதரவாகப் பேசவில்லை...இந்தக் காலத்தில் கடன் வாங்காமல் வாழ்வதென்பது கொஞ்சம் கஷ்டம்தான்...ஆனால் விரலுக்கேத்த வீக்கத்தோடு வாழப் பழகினால் பல உயி்ர்ப் பலிகளைத் தடுத்திடலாம்...நன்றி..


Sunday 31 December 2017

போதையில்லாத புத்தாண்டு வேண்டும்!!?

புத்தாண்டை எண்ணி புலகாங்கிதம் அடையமுடியவில்லை... புதுவசந்தம் வந்ததென்று புன்முறுவல் பூப்பதில்லை..

புத்தகச் சுமையில்லா பள்ளி என்று வருமோ,
 புகையில்லாத காற்று என்று இருக்குமோ,

போதையில்லா சமூகம் என்று தோன்றுமோ,

புழுதி இல்லாத சாலைகள் உருவாகுமோ,

புரிதலுடன் குடும்பங்கள் என்று இணையுமோ,

புதுமைகளைப் படைக்க இளைஞர்கள் என்று புறப்படுவார்களோ,

பொதுவுடைமைக்காக புரட்சிகள் உதயமாகுமோ,

பூசல் இல்லாமல் மாநிலங்கள் ஆகுமோ,

பூரணமான புத்தாண்டு அன்றுதான் என் தேசத்திற்கு...

இருந்தாலும் என்றாவது ஒருநாள் என் தேசம் முன்னேறிவிடும் என்று வாழும் நேர்மறை மனிதர்களுக்காக என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

Thursday 28 December 2017

இந்திய மாநிலங்களும் தலைநகரங்களும் -இசை வடிவில்

அரையாண்டுத் தேர்வு விடுமுறை என்பதால் மீண்டும் பதிவுலகம் பக்கம் தலைகாட்டிவிட்டு போகலாம் என்று வந்தேன்...போனவருடம் இந்திய மாநிலங்கள் கற்பித்தல் சிறுமுயற்சி என்னும் தலைப்பில் ஒரு சிறு பதிவு எழுதியிருந்தேன்..அதற்கு சில ஆசிரியர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது..என் நண்பர்களிடம் அதைப்பற்றி கூறியபோது மாநிலங்கள் பெயர் மட்டும்தான் பாடுவார்களா? தலைநகரங்கள் தெரியாதா? என்று கேட்டார்கள்..அந்த கேள்விதான் இன்று பதிலாக வந்திருக்கிறது...ஏதோ எனக்குத் தெரிந்த மெட்டில் ஒரு பாடலாக உருவாக்கியிருக்கிறேன்...இசையமைத்துப் பாடுமளவுக்கு இசை ஞானமெல்லாம் கிடையாது..இந்த காலத்து மாணவர்களுக்கு எப்படிப் பாடினால் பிடிக்கும்  என்று யோசித்து முயற்சித்திருக்கிறேன்..என் முயற்சி வீண்போகாது என்று நம்புகிறேன்...அடுத்த வாரத்திற்குள் என் மாணவர்களை மாநிலங்களையும் தலைநகரங்களையும் பாடவைத்துவிடுவேன்  என்று நம்புகிறேன்...


உங்களுக்கும் பிடித்திருந்தால் உங்கள் குழந்தைகளுக்கும் முயற்சித்துப் பாருங்கள்...உண்மையைச் சொல்லப்போனால் பலநேரங்களில் வடகிழக்கு மாநிலங்களின் தலைநகரத்தைக் கேட்டால் நமக்கே தடுமாற்றம் வரும்..ஆனால் இப்பொழுது நான் கற்றுக் கொண்டேன்... என்னாலான இந்த சிறுமுயற்சி யாருக்கேனும் பயன்பட்டால் கடலளவு மகிழ்ச்சி..என் முகத்தைப் பார்த்து யாரும் பயப்பட வேண்டாம்னுதான் முகம் காட்டாமல் பாடியிருக்கிறேன்..அடுத்த பதிவில் சந்திக்கும்வரை உங்கள் கலியபெருமாள்..உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து....

Monday 4 December 2017

எல்.ஐ.சி பாலிசியுடன் ஆதாரை இணைப்பது எப்படி?

அதுக்கு ஆதார் இதுக்கு ஆதார்னு இணைக்கச் சொன்னாங்க..இப்போ LIC policy -யையும் ஆதாரோட இணைக்கச் சொல்லி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது..அதுவும் டிசம்பர் 31க்குள்...ஆனால் அதற்காக யாரும் கவலைப்பட வேண்டியதில்லை..ஆன்லைனிலேயே ஆதாரை இணைக்க LIC link கொடுத்துள்ளது..

licindia.in தளத்தினுள் சென்று link aadhaar இணைப்பை சொடுக்கினால் சில instructions வரும்..

உங்கள் ஆதார் எண்ணையும் PAN எண்ணையும் தயாராக வைத்துக்கொள்ளவும்..உங்கள் பாலிசி எண்களையும் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்..proceed கொடுத்தால் புதிய window வரும்..

அதில் உங்கள் பெயர்,பிறந்த தேதி.,உங்கள் மெயில்,ஆதார் எண்.,PAN எண்,மொபைல் எண்.,பாலிசி எண் ஆகியவற்றை உள்ளிட்டு GET OTP பட்டனை அழுத்தினால் உங்கள் மொபைலுக்கு ஒரு OTP எண் வரும் ..அதை enter செய்து முடித்துவிட்டால் போதும் உங்களது LIC policy ஆதார் மற்றும் PAN உடன் இணைக்கப்பட்டுவிடும்..
பலருக்கும் எளிமையானதாக இருந்தாலும் சிலருக்குப் பயன்படலாம் என்பதால் பகிர்கிறேன்..இன்றே இணைத்திடுங்கள் உங்கள் எல்.ஐ.சியை ஆதாருடன்..ஒரே சமயத்தில் நிறைய பாலிசிகளையும் add policy கொடுத்து இணைக்கலாம்...அடுத்த பதிவில் சந்திக்கும் வரை நன்றியுடன் கலியபெருமாள்..