Tuesday, 30 April 2013

சின்னக்குயில் சித்ராவின் இனியகீதங்கள்- எனக்குப் பிடித்த பாடல்கள்..

    முழு ஆண்டுத்தேர்வு முடிந்து பள்ளிக்கூடத்திற்கு விடுமுறை விட்டாச்சு.. ஒரு வாரமா வீட்லதான் இருக்கன்..அதான் தினமும் ஒரு பதிவெழுதி உங்களையெல்லாம் டார்ச்சர் செய்து கொண்டிருக்கிறேன்..இந்த ஒருமாதம் பொறுத்துக்கொள்ளுங்கள்..ஸ்கூல் ஆரம்பிச்சிட்டா அதிகமா தொல்லை கொடுக்கமாட்டேன்..ஓகேவா..

சரி மேட்டருக்கு வரன் ..உங்களுக்குத்தான் தெரியுமே நம்ம மியூசிக் ஆர்வத்தைப் பத்தி...நமக்கு ரொம்ப புடிச்ச சுவர்ணலதா பாடல்கள் பத்தி ஒரு பதிவு எழுதியாச்சு...போனவாரம் சித்ரா அக்கா ஃபோன் பண்ணி ரொம்ப கோச்சிக்கிட்டாங்க..சுவர்ணலதா பாட்டுதான் எழுதுவியா..என் பாட்டெல்லாம் எழுதமாட்டியானு கேட்டாங்க..(உண்மையத்தான் சொல்றங்க)..அவங்களோட ஆசையை நிறைவேத்தத்தான் இப்பதிவு..(அதுக்கு எங்க உயிர ஏன்டா வாங்குறனு கேக்கக்கூடாது)..

ஓகே மறுபடியும் மேட்டருக்கு வரன்..நம்ம சித்ரா அக்கா ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியிருந்தாலும் எனக்குப் பிடித்த பத்து பாடல்களை மட்டும் உங்களோடு பகிர்கிறேன்..உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்..

1.பாடல் : கண்ணாளனே எனது கண்ணை..

படம்:  பம்பாய்.

மனதுக்குள் காதலை வைத்துக்கொண்டு சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்கும் பெண்ணின் மனதை சித்ராவின் குரலில் கேட்கும்போது அருமையாக இருக்கும்..நான் இந்தப்பாடலை இதுவரையில் ஒரு ஆயிரம் முறையாவது கேட்டிருப்பேன்..தமிழக அரசின் மாநில விருதைப் பெற்றுத்தந்த பாடல்..

2.பாடல்:  கருவாப்பையா கருவாப்பையா

படம் : தூத்துக்குடி.

இந்தப் பாடலுக்காகவே  ஹிட்டாகிய படம்..இந்த பாடலை சித்ராவைத்தவிர வேறு யார் பாடியிருந்தாலும் இவ்வளவு அழகாக இருந்திருக்குமா என்று தெரியவில்லை.இப்படியொரு இனிமையான குரல் உள்ள பாடகிகள் இதன்பிறகு தோன்ற வாய்ப்பேயில்லை..

3.பாடல்:  இதுதானா

படம் : சாமி

திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணநாளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அனைவரின் மனதில் ஓடும் ரிங்டோன் இப்பாடலாகத்தான் இருக்கும்..(கல்யாணத்துக்கு அப்புறம் இந்த பாட்ட ஏன்டா கேட்டோம்னு நெனைப்பாங்க..அது வேற விஷயம்.)

4பாடல்:  ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்.

படம் : புன்னகை மன்னன்.

 பள்ளியில் என்னுடன் பணிபுரியும் என் நண்பன் புண்ணியமூர்த்திக்கு மிகவும் பிடித்த பாடல்..அவனால்தான் இப்பாடலை அதிகம் கேட்க ஆரம்பித்தேன்..காதல் பாடல்களைப் பாடுவதில் சித்ராவிற்கு இணையாக இன்னொரு பாடகி இவ்வுலகில் தோன்றமுடியாது..

5.பாடல்:  பாடறியே படிப்பறியே

படம் : சிந்துபைரவி

நம்ம சின்னக்குயிலை திரையுலகத்திற்கு அறிமுகம் செய்துவைத்த பாடல்..இந்தியாவிலேயே முதல் பாடலுக்கு தேசியவிருது பெற்ற பாடகி சித்ராவைத்தவிர வேறு யாரும் இருக்க வாய்ப்பில்லை..

6.பாடல்:  இந்தமான் உந்தன் சொந்தமான்

படம் : கரகாட்டக்காரன்.

பாடல்களுக்காக மட்டுமே படங்கள் ஓடியது அக்காலம்..இப்படத்தில் வரும் மாங்குயிலே பூங்குயிலே பாடலைவிட இப்பாடல்தான் எனக்கு மிகவும் பிடிக்கும் சித்ராவுக்காக..

7.பாடல்:  உன் மனசுல பாட்டுத்தான் இருக்குது

படம் : பாண்டிநாட்டுத்தங்கம்

கார்த்திக் ,நிரோஷா நடித்த படம்..படத்தின் பெயர் பாண்டிநாட்டுத்தங்கம் என்றுதான் நினைக்கிறேன்..இசையை ரசிப்பவர்கள் எல்லோருக்கும் இப்பாடலை நிச்சயம் பிடிக்கும்..இப்பதிவையும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்..

8.மாருகோ மாருகோ

படம்:  வெற்றிவிழா

இப்பாடல் ஏன் பிடிக்கும் என்றெல்லாம் சொல்லத்தெரியவில்லை..வித்தியாசமான வேகமான பாடல்..சித்ராவின் குரலில் துள்ளலான ஒரு பாடல்..

9.பாடல்:  செம்பூவே பூவே

 படம்: சிறைச்சாலை

சித்ராவின் பாடலில் ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்...காதலும் காமமும் கலந்த பாடல்..எஸ்.பி.பியும் சித்ராவும் போட்டிபோட்டுக்கொண்டு பாடியிருப்பார்கள்..பாடலின் வரிகளுக்கு சித்ரா உயிர் கொடுத்திருப்பார் அருமையாக- வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ-என்னைக்கவர்ந்த வரிகள்..

10.பாடல்:  ஒவ்வொரு பூக்களுமே

படம்:  ஆட்டோகிராஃப்

துன்பத்தில் வாடுபவர்களுக்கும் வாழ்வில் தோல்வி அடைந்தவர்களுக்கும் நம்பிக்கையை வழங்கிய பாடல்..அதுவும் நம்ம சினேகா பாடும்போது அப்பாடல் இன்னும் அழகாக இருக்கும்..

இதைவிட சிறந்த ஏதேனும் பாடல்கள் இருப்பின் கருத்துரையில் பகிருங்கள்..அடுத்த பதிவில் தொடர்கிறேன்..நன்றி....


Monday, 29 April 2013

சனியன் பிடித்த சகுனங்களும் முட்டாள்களின் மூடநம்பிக்கைகளும்...

    இந்தியர்களின் வளர்ச்சியின்மைக்கும்  சோம்பேறித்தனத்திற்கும் முக்கியக் காரணமே இந்த மூடநம்பிக்கைகளும் சகுனங்களுமே..விண்வெளியில் விவசாயம் செய்வது எப்படி என்று விஞ்ஞானிகள் விடை தேடிக்கொண்டிருக்கும் இந்த அறிவியல் யுகத்தில் கூட நம் இந்தியர்கள் இன்னும் சமைப்பதற்குக்கூட சகுனம் பார்ப்பதைத்தான் சகித்துக் கொள்ளமுடியவில்லை..

பூனை குறுக்கில் வந்தால் பொல்லாத சகுனம் என்பார்கள்...நரி நடுவில் வந்தால் நல்ல சகுனம் என்பார்கள்.. விதவைப்பெண்கள் எதிரில் வந்தால் அந்த நாள் வீணாய்ப் போய்விடும் என்பார்கள்..இந்தியாவில் இன்னும் இதுபோன்ற நம்பிக்கைகளோடு இருபது கோடிக்கும் மேற்பட்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்..

தமிழ்க்கலாச்சாரம் அறிவியல் பூர்வமானது என்று ஏற்கனவே ஒரு பதிவில் கூறியிருந்தேன்..ஆனால் அதே தமிழகத்தில்தான் இதுபோன்ற முட்டாள்தனமான மூடநம்பிக்கைகளும் அதிகம் இருக்கின்றன..

ஒரு விதவைப் பெண்ணும் குழந்தையில்லாத பெண்ணும்  நம் நாட்டில் நிம்மதியாக வாழ்வது என்பது எளிதான விஷயமல்ல..யாரோ ஒருவர் வெளியில் போகும்போது ஒரு விதவைப்பெண் எதிரில் வந்துவிட்டால் என்ன டயலாக் வரும் என்பது நீங்கள் அறிந்த்துதானே..சனியன் எதரக்க வந்துடுச்சா இன்னைக்கு நாள் உருப்பட்ட மாதிரிதான் என்பார்கள்..அவர் என்னமோ ஐ.நா சபையில போய் ஆட்ட போற மாதிரி பேசுவார்..கவுண்டமணி  சொல்ற மாதிரி அந்த முக்குல போய் பிச்சை எடுக்கப்போற நாயிக்கு பேச்சப்பாரு   எகத்தாளத்தப் பாரு..

திடீரென்று  எங்கிருந்து இவ்வளவு ஞானம் வந்தது என்றுதானே கேட்கிறீர்கள்..பராசக்தி படத்தில் சிவாஜி சொல்வதுபோல நானே நேரடியாக பாதிக்கப்பட்டேன்..ஆமாம் சுயநலத்திலிருந்துதானே பொதுநலம் பிறக்கிறது..
 
திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் எனக்கு இன்னும் குழந்தை இல்லை..எனக்கும் என் மனைவிக்கும் உடல் ரீதியாக பிரச்சினை இல்லை என்று சொல்லிவிட்டார்கள்..சென்றமாதம் என் மனைவிக்கு லேப்ராஸ்கோபிக் சிகிச்சை மூலம் கண்ணுக்குத் தெரியாமல் இருந்த இரண்டு நீர்க்கட்டிகளை நீக்கிவிட்டார்கள்..இந்த மாதம் கரு தங்கிவிடும் என்ற நம்பிக்கை
யோடு இருக்கிறேன்..நம்பிக்கை..அதானே எல்லாம்..இதுக்காக நான் ரொம்ப ஃபீல் பண்ணதில்ல..

ஆனால் இடைப்பட்ட இந்த காலத்தில் என் மனைவி அனுபவித்த கஷ்டங்கள் அதிகம்..உறவினரின் வீட்டு விஷேஷங்களில் எதற்கும் முன்னால் செல்லமாட்டாள்..என் சொந்த மாமன் மகளின் திருமணத்திற்குக் கூட அவள் நலங்கு வைக்கவில்லை..என்னமோ மூனு புள்ள பெத்த மாதிரி முந்திரிக்கொட்டையாட்டம் முன்னாடி வந்து நலங்கு வைக்குது என்று யாராவது சொல்லிவிடுவார்களோ என்ற ஆற்றாமை..

இதுபோன்ற மனிதர்களின் குணம் எப்பொழுதுதான் மாறும்..மற்றவர்களுக்கும் மனம் இருக்கும் என்பதை அறியாமல் புரளிபேசும் இதுபோன்ற மனிதர்கள் இருக்கும்வரை இந்தியா இன்னும் இருநூறு ஆண்டுகள் ஆனாலும் முன்னேறாது..

தன்முதுகில் ஆயிரம் அழுக்கு மூட்டைகளை வைத்துக்கொண்டு  பிறர் முதுகைப்பார்ப்பவர்களை என்னவென்று சொல்வது..விவேக் சொல்லற மாதிரி இன்னும் நூறு பெரியார் வந்தாலும் உங்களலாம் திருத்தவே முடியாதுடா....

Sunday, 28 April 2013

நீங்க இந்தி பாட்டெல்லாம் கேட்பீங்களா..?

  இப்பொழுது கொஞ்ச நாட்களாக இந்தி பாடல்கள் மீது ஒரு ஈர்ப்பு...நீ என்ன ஆல் இன் ஆல் அழகுராஜாவா..உனக்கு எல்லா லாங்வேஜும் அத்துப்படியோ அப்படித்தானே கேக்கறீங்க..அப்படியெல்லாம் ஒன்னும் இல்லீங்க..எனக்குத் தெரிந்த ஒரே இந்தி வார்த்தை ஹிந்தி நை மாலும் என்பதுதான்..

இந்தி மொழிமீது எந்த ஒரு மொழிப்பற்றோ மண்ணாங்கட்டியோ  கிடையாது..இப்படி ஒரு பதிவு எழுத காரணம் என்னவென்றால் இப்ப வர தமிழ் பாட்டெல்லாம் சகிக்க முடியல பாஸ்..ஒரே வாந்தியா வருது..கும்கி போன்ற ஏதோ ஒருசில படங்கள் மட்டுமே வருடத்திற்கு ஒருமுறை மனதிற்கு ஆறுதல் தந்து தமிழிசை அழியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது..சரி தமிழில் மட்டும்தான் நல்ல பாடல்கள் இருக்குமா..மற்ற மொழிகளிலும் ஏதோ ஒருசில நல்ல பாடல்கள் இருக்காதா என்று இசையால் வென்ற ஒருசில இந்தி பாடல்களை கூகிளில் தேடினேன்...அப்படிக் கிடைத்த ஒருசில அற்புதமான பாடல்களைத்தான் உங்களுடன் பகிர விரும்புகிறேன்..

1.பாடல்:  துஜ் மே ரப் திக்தா ஹே

படம்:  ரப்னே பனா டி ஜோடி..(RAB NE BANA DI JODI)

ஷாருக்கான் நடித்து 2008ல் வெளியான படம்..இப்பாடலை ஒருமுறை கேட்டுப்பாருங்கள்..நிச்சயம் உங்கள் மனதை கொள்ளை கொள்ளும்..மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் பாடல்..இப்பாடல் படத்தில் இருமுறை வரும்..பெண்குரலில் ஸ்ரேயா கோஷல் பாடியிருப்பார்..இந்த பாடலைக்கேட்டால் மொழிக்கு இசைகள் கிடையாது என்று நீங்களும் சொல்வீர்கள்..

2.பாடல்:  தேரே மேரே பீச் மே

படம் : ஏக் துஜே கே லியே (EK DUJE KE LIYE)

நம்ம பாலச்சந்தர் சார் டைரக்‌ஷனில் உலகநாயகன் கமல் நடித்து நம்ம  எஸ்.பி.பி சார் பாடிய பாடல்..நம்ம எஸ் பி பி சாருக்கு தேசிய விருதைப் பெற்றுத்தந்த பாடல்..பலருக்கு எவ்வளவு கோபத்தில் இருந்தாலும் அவர்களுக்கு பிடித்த பாடலை கேட்கும்போது கோபமெல்லாம்  பறந்துபோய்விடும்..

3.பாடல்:  துஜே தேகா டோயே ஜானா சனம்.

படம் : தில்வாலே துல்ஹனியா லே ஜாயாங்கே..(DILWALE DULHANIYA LE JAYENGE)

இப்பாடலை கேட்காதவர்கள் நிச்சயம் இருக்கமுடியாது..அந்தளவுக்கு இப்பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான பாடல்..நம்ம ஷாருக்கானும் கஜோலும் நடித்திருப்பார்கள்..இசையென்ற ஒன்று இருப்பதால்தான் இன்னும் மனித இனம் கொஞ்சமாவது மனிதத்தோடு இருக்கிறது..

4.பாடல்: ஐஸே திவானிஹே

படம் : தீவானா (DEEWANA)

1992ல் வெளிவந்த படம்..ஷாருக்கானின் முதல் படம்..கேட்டுப்பாருங்கள் நிச்சயம் ரசிப்பீர்கள்..

5.பாடல்:  பர்தேசி பர்தேசி ஜானா நஹி

படம் : ராஜா ஹிந்துஸ்தானி

1996ல்  வெளிவந்த வெற்றிப்படம்..அருமையான ஒரு பாடல்..இப்படத்தில் எல்லா பாடல்களுமே நன்றாகத்தான் இருக்கும் .எனக்கு மிகவும் பிடித்தது இப்பாடல்..படத்தைப் பற்றியெல்லாம்  ஒன்றும் தெரியாது. ஏனென்றால் நான் இதுவரை சத்தியமாக ஒரு இந்தி படம் கூட பார்த்ததில்லை..

6.பாடல் : தும் பாசு ஆயே

படம் : குச் குச் ஹோதா ஹே (KUCH KUCH HOTA HE)                                                    

பாடலைக் கேட்டிருப்பீர்களா என்று தெரியவில்லை..ஆனால் இப்படத்தின் பெயரை நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள்..ஷாருக்கான் நடித்த  சூப்பர் ஹிட் படம்  (நெட்ல படிச்சததான் சொல்றேன்,நான் படமெல்லாம் பாக்கலை..)

7.பாடல்:  பெஹலா பெஹலா ப்யார் ஹே

படம் : ஹம் ஆப்கே ஹைன் கோன்..(HUM APKE HAIN KAUN)

அமீர்கான் இப்படத்தில் மிகவும் அழகாக இருப்பார்..இதுவும் நம்ம எஸ்.பி.பி பாடிய பாடல்தான்..எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்..

8.பாடல்:  ராத் கா ஆஷா நபி

படம்:  அசோகா

நம்ம சின்னக்குயில் சித்ரா பாடின பாட்டுங்க..கிரங்கடிக்கும் ஒரு கில்மாவான பாடல்..ஒரேஒரு முறை வீடியோவில் இப்பாடலைப் பார்த்திருக்கிறேன்..கரீனா கபூர் கவர்ச்சியில் கலக்கியிருப்பார்..நம்ம சித்ராவுக்கு இந்த மாதிரி பாட்டெல்லாம் பாடத்தெரியுமா என்று ஆச்சரியப்பட வைத்த பாடல்..

இன்னும் ஏராளமான பாடல்கள் இருக்கின்றன..நான் ஒன்னும் இந்தி பாட்டு கேட்டே வளர்ந்த பரம்பரை இல்லை..இவையெல்லாம் கூகிளில் தேடியவையே..இதேபோல உங்களுக்குத் தெரிந்த சிறந்த பாடல்கள் ஏதாவது இருந்தால் கருத்துரையில் பகிருங்கள்..நானும் கேட்டு மகிழ்கிறேன்.. 

Wednesday, 24 April 2013

கிறிஸ் கெயிலும் அவரது ஸ்டைலும்..

  கிரிக்கெட் ஜாம்பாவான் சச்சினுக்கு இன்று நாற்பதாவது பிறந்தநாள்..அவருடைய கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக என்னுடைய வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொண்டு ,முதன்முதலாக ஒரு கிரிக்கெட் பதிவு எழுதலாம் என்று.....(சகித்துக்கொள்ளுங்கள்)...

போன பதிவில சொன்ன மாதிரியே நான் இசைக்கு மட்டும் மயங்குற கேஸ் இல்ல  கிரிக்கெட்டுக்கும் அப்படித்தான்...ஆசிரியர் பயிற்சி படிக்கும் போது ,மறுநாள் கணிதத்தேர்வை வைத்துக்கொண்டு இந்தியா-பாகிஸ்தான் மேட்ச் பாத்த ஆளுங்க நாங்க...

கிரிக்கெட் பதிவு எழுதற அளவுக்கு பெரிய கிரிக்கெட் வீரரா நீ ..அப்படிலாம் கேக்கக்கூடாது..(பேச்சு பேச்சாத்தான் இருக்கனும்..)..நாம எப்பவுமே டக் அவுட் கேஸ்தான் பாஸ்..(நாங்க உண்மைய ஒத்துக்கற பரம்பரைங்க)..

ஆனா பவுலிங் மட்டும் கொஞ்சம் நல்லா போடுவன்னு ஊர்ல எல்லாரும் சொல்றாங்க..ஆமாங்க கை பிரேக் கால் பிரேக்கெல்லாம் போடுவங்க(லெக் பிரேக் ஆஃப் பிரேக் மாதிரி இதுவும் ஒரு டைப்)..

சரி சரி கோச்சிக்காதீங்க மேட்டருக்கு வந்துடறன்..நேற்று இரவு நடந்த பெங்களூர்-புனே அணிகளுக்கு இடையான ஐபிஎல் மேட்ச் பார்த்தீங்களா..
கிறிஸ் கெயிலின் அதிரடி ஆட்டத்தால் பெங்களூரில் ஒரு தானே புயல் அடித்து ஓய்ந்தது போலிருந்தது..

பெங்களூரில் மையம் கொண்ட அந்த புயல் வடமேற்காக நகர்ந்து புனேயைத் தாக்கியது.அப்பப்பா...அடியா அது..சிங்கம் படத்துல சூர்யா சொல்லற மாதிரி ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெய்ட்டுடா என்பதுபோல் இருந்தது ஒவ்வொரு ஷாட்டும்..

முகத்தில் எந்தவொரு பயமும் இன்றி அடித்த ஒவ்வொரு சிக்சரும் சூப்பர்..ட்விட்டரில் ஒரு கிரிக்கெட் வீரர் கூறியதைப்போல் நேற்றைய ஆட்டத்தில் ஃபீல்டர்கள் எல்லோரும் வெறும் பார்வையாளர்களாகவே இருந்தனர்..பார்வையாளர்களே ஃபீல்டிங் வேலையைச்செய்தனர்..

புனே பவுலர்கள்தான் பாவம்...அதிலும் அசோக் டின்டா ஒவ்வொரு ஆட்டத்திலும் அடி வாங்குகிறார்..புனே அணியின்  புவனேஸ்வர் குமார் மட்டும்தான் கொஞ்சம் தப்பித்தார் கெய்லின் அதிரடியில் ..

ஒன்றா,இரண்டா ஒரே நாளில் மூன்று உலக சாதனைகள்..20 ஒவர் போட்டியில்  ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர்-263 ரன்கள், ஒரு வீரரின் அதிகபட்ச ஸ்கோர்-175 ரன் (66 பந்துகள்), அதிக சிக்சர்கள் அடிக்கப்பட்ட மேட்ச் -17 சிக்சர்கள்..மேலும் ஒரு சாதனையாக ஒரே மேட்சில் மூன்று உலக சாதனைகள் படைத்து  அதையும் ஒரு சாதனையாக்கி இருக்கிறார் கிறிஸ் கெயில்..

அவர் வெளிநாட்டு வீரராக இருந்தாலும் திறமையுள்ள வீரரை மதிக்க வேண்டும்..கிரிக்கெட்டை ரசிப்பவர்கள் ஒவ்வொருவரும் கெய்லையும் ரசிப்பார்கள்..
கடைசி வரை களத்தில் நின்று எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார்.இன்னும் பந்துகள் இருந்திருந்தால் 20 ஓவர் கிரிக்கெட்டில் 200 ரன்கள் கடந்த வீரர் என்ற சாதனையையும் படைத்திருப்பார்...கடினமான பந்துகளை தேவையில்லாமல் அடித்து அவுட்டாகாமல் சிங்கிள்களாக ஆடியது ரசிக்கும்படியாக இருந்தது..நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு ரசிக்கும்படியான ஒரு மேட்சை விருந்தளித்த கெய்லுக்கு ஒரு சல்யூட்...


Saturday, 20 April 2013

பாண்டிச்சேரிக்காரன் என்று சொல்லிக்கொள்ள ஒன்னும் பெருமையாக இல்லை...

 நம் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பெருமை இருக்கும்...திண்டுக்கல் பூட்டு,மதுரை மல்லி,ஊத்துக்குளி வெண்ணெய்,மணப்பாறை முறுக்கு, கும்பகோணம் வெத்தலை,விருதுநகர் பரோட்டா,பத்தமடை பாய், வளையப்பட்டி தவில்,திருநெல்வேலி அல்வா,பழனி பஞ்சாமிர்தம்...இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்..எங்க ஊர் பாண்டிச்சேரியோட பெருமை எதுவென்று உங்களுக்கு எல்லாருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்..

புதுச்சேரி மக்களுக்குக் கிடைத்திருக்கும் கௌரவம் பார்த்தீர்களா  ..எங்கள் ஊருக்கு வரும் உறவினர்கள் எங்களிடம் எதிர்பார்ப்பதும் கூட அதைத்தான்..  உங்கள் ஊருக்கு எவ்வளவு தூரத்திலிருந்து   வந்திருக்கிறோம் சரக்கு வாங்கிக்கொடுத்தால்தானே மரியாதையாக இருக்கும் ...வாங்கித்தரவில்லையென்றால் அவர்களை அவமதித்ததாக வேறு சொல்வார்கள்..

என்னப்பா உங்கள் ஊரைப்பற்றி நீயே இவ்ளோ கேவலமாக சொல்கிறாயே, என்னதான் இருந்தாலும் நாம  பொறந்த ஊர பத்தி தப்பா பேசலாமா என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது..என்ன செய்வது நாங்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்..

நாம் சாதாரணமாக  வெளியூருக்கு எதற்கெல்லாம் செல்வோம்..வேலை தேடி செல்வோம்,படிப்பைத்தேடி செல்வோம்,உறவைத்தேடி செல்வோம்..ஆனால் பாண்டிச்சேரிக்கு வருபவர்களின் புள்ளிவிவரங்களைக் கணக்கெடுத்தால் பாரைத்தேடி வருபவர்கள்தான் அதிகம்...நாங்க எப்படிலாம் சுற்றலாத்துறைய மேம்படுத்தறோம் பாத்துக்கங்க...சகுனி படத்துல கார்த்தி சொல்ற மாதிரி மார்க்கெட்டிங் பாஸ் மார்க்கெட்டிங்...

புதுச்சேரியில் குடிமக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறதோ இல்லையோ, 'குடி'மகன்களுக்கு நிச்சயம் பாதுகாப்பு வழங்கப்படும்..'குடி'மகன்கள் நம்பிக்கையோடு வரலாம்..'பாரு'க்குள்ளே நல்ல நாடு எங்கள் பாண்டிச்சேரி நாடு..

ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் என்பார்கள்.. ஆனால் எங்கள் பாண்டிச்சேரியின் பொன்மொழி பாரில்லா ஊருக்கு முழுதும் பாழ் என்பதே...புதுச்சேரி மாநிலத்தின் மேற்கு எல்லையில் உள்ளது எங்கள் மடுகரை கிராமம்..நான் பிறந்தது,வளர்ந்தது,படித்தது எல்லாமே எங்கள் ஊரில்தான்..நான் படித்த தொடக்கப்பள்ளியில்தான் இப்போது ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்..சிறுவயதில் எனக்கு மிகவும் பிடிக்கும்  எங்கள் ஊரை.

ஆனால் தற்போது எங்கள் ஊர் ஒரு தீவாக மாறிவருகிறது.. ஆமாம் நான்கு பக்கமும் நீரால் சூழப்பட்ட பகுதியை அப்படித்தானே சொல்வார்கள்..என்றைக்கு வேண்டுமானாலும் கடலில் மூழ்கிப்போகலாம்..இந்த தீவிலிருந்து தப்பித்துச்செல்ல ஒரு படகைத் தேடிக்கொண்டிருக்கிறேன்..

பொருளாதாரத்திலும் போக்குவரத்து நெரிசலிலும் வேண்டுமானால் எங்கள் மாநிலம் உயர்ந்து விளங்கலாம்..ஆனால் அன்பு,கருணை, மனிதநேயம்,சகிப்புத்தன்மை இவற்றிலெல்லாம் நாங்கள் ஏழைகள்தான்.. ஒரேஒரு ஆறுதல் என்னவென்றால் இங்கே குடிக்க வருபவர்களைப்போலவே படிக்க வருபவர்களும் அதிகம்..என்ன செய்யறது இப்படிதான் மனச தேத்திக்கனும்..மறுபடியும் சொல்கிறேன் பாண்டிச்சேரிக்காரன் என்று சொல்லிக்கொள்ள ஒன்னும் பெருமையாக இல்லை..(மேற்கண்ட அனைத்தும் என்னுடைய தனிப்பட்ட கருத்து..யார் மனதையேனும் புண்படுத்தும் விதத்தில் இருந்தால் மன்னிக்கவும்)..அடுத்த பதிவில் தொடர்கிறேன்..நன்றி.

Thursday, 18 April 2013

சொக்கவைக்கும் பாடல்கள் தந்த சொர்ணலதா...

    இசைக்கு மயங்கா உயிர்கள் இவ்வுலகில் உண்டோ?  .நான் கொஞ்சம் ஓவரா(!!) மயங்கற கேஸ்..சிறுவயதில் சினிமா படம் பார்ப்பதிலும் பாடல்கள் கேட்பதிலும் அப்படி ஒரு ஈர்ப்பு. அதுவும் இளையராஜா பாட்டென்றால் சொல்லவே வேண்டாம்...உலகத்தையே மறந்துடுவன்..

இந்த ஓவர் இசை ஆர்வத்தால   நிறைய திட்டும் உதையும் வாங்கிய அனுபவமும் உண்டு. நான் எட்டாம் வகுப்பு படிக்கிற சமயத்தில் ,ஆசிரியர் வகுப்புக்கு வரவில்லையென்றால் வகுப்பில் என்னுடைய பாட்டுக்கச்சேரிதான் நடந்து கொண்டிருக்கும்..என் நண்பன் கிருபாகரன் பெஞ்சில் தாளம்போட நான் பாடிக்கொண்டிருப்பேன் ஆசிரியர் வருவதுகூட தெரியாமல்...அப்புறம் என்ன ஆசிரியர் அக்குளில் திருகி எடுத்துவிடுவார்..

அம்மா சிலநேரங்களில் மளிகைக்கடைக்குச் சென்று ஏதாவது இரண்டு மூன்று சாமான் வாங்கிவரச்சொல்வாங்க..ஒழுங்காகத்தான் செல்வேன் ..வழியில் யார்வீட்டிலாவது ரேடியோவில் பாட்டு போகும்..அவ்வளவுதான் அங்கேயே உறைந்து நின்றுவிடுவேன்..பாடல் முடிந்த பிறகுதான் அவ்விடத்தை விட்டு நகர்வேன்  ..என்ன காமெடியென்றால்  கடைக்குச் சென்றவுடன் அம்மா என்ன வாங்கிவரச் சொன்னார்கள் என்பதையே முழுதும் மறந்துவிடுவேன்...உடனே எதுவும் வாங்காமல் வீட்டிற்குத் திரும்பியதும் என் பெயரில் அர்ச்சனை நடக்கும்..

ஒருமுறை என்னுடைய சட்டையை அயர்ன் செய்வதற்காக சூடு வைத்தேன் ..கொஞ்சநேரம் பாட்டுகேட்கலாம் என்று டிவி முன் உட்கார்ந்தேன்.அவ்வளவுதான் அயர்ன் பாக்ஸ் சூடாகி பெட்ஷீட்டெல்லாம் எரிந்துவிட்டது..அன்று என் அண்ணனிடம் வாங்கிய உதை இன்னமும் மறக்கவில்லை..உங்களுக்கும் இதுபோன்ற அனுபவம் இருந்தால் கருத்துரையில் பகிருங்கள்..

சொர்ணலதா பாடல்கள் என்றால் இப்பொழுதும் உயிர்..அவ்வளவு சிறந்த பாடகி நம்மைவிட்டு சிறுவயதிலே மறைந்துவிட்டதாலோ என்னவோ அவருடைய பாடல்களை ஒருநாள் கூட கேட்காமல் இருக்கமாட்டேன்..

சின்னக்குயில் சித்ராவை ரொம்ப பிடிக்கும்..ஆனால் சொர்ணலதா பன்முகத் திறமையுள்ள ஒரு பாடகி..காதல் பாடலாகட்டும்,காமப்பாடலாகட்டும். சோகப்பாடல் வேண்டுமா  சொக்கவைக்கும் பாடல் வேண்டுமா  டப்பாங்குத்து பாட்டானாலும் சரி,,கிராமியத்து கம்மாக்கரை பாடலானாலும் சரி..அவருக்கு நிகர் அவரேதான்...

என்னைக்கவர்ந்த சொர்ணலதா பாடல்கள் ஒருசில உங்கள் பார்வைக்காக...

1.போறாளே பொன்னுத்தாயி-கருத்தம்மா

சொர்ணலதாவிற்கு சோகப்பாடலும் பாடத்தெரியும் என்று நிரூபித்த பாடல்.அவருக்கு தேசிய விருதைப் பெற்றுக்கொடுத்த பாடல்..

2.மொட்டு மொட்டு மலராத மொட்டு-காதல்கோட்டை

காதலையும் காமத்தையும் கலந்து கலக்கிய பாடல்..

3.அடி ஆசமச்சான் -கும்மிப்பாட்டு

கிரங்கடிக்கும் கிராமிய காதல் பாடல்

4.ஆட்டமா தேரோட்டமா-கேப்டன் பிரபாகரன்

கேட்கும் அனைவரையும் இன்றும் தாளம்போட வைக்கும் பாடல்.

5.மாலையில் யாரோ-சத்ரியன்

இளையராஜாவின் இசையில் மனதை மயக்கும் மந்திரப்பாடல்..

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..அதையெல்லாம் எழுத இந்த ஒரு பதிவு போதாது..காற்றில் கலந்துவிட்டது அவர் உயிர் மட்டுமல்ல, அவருடைய பாடல்களும்தான்..என்றும் நம் மூச்சுக்காற்றில் கலந்திருக்கும்..

Tuesday, 16 April 2013

உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலில் தமிழில் எழுதுவது எப்படி ?

  புதிதாக ஆன்ட்ராய்டு மொபைல் பயன்படுத்துபவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கில் இப்பதிவை எழுதுகிறேன்..

உண்மையில் சொல்லப்போனால் ஒருமாதம் முன்புவரை என்னுடைய மொபைலில் எனக்கு தமிழில் எழுதத்தெரியாது.  எப்படியோ என் நண்பன் ஒருவனின் உதவியோடு கடந்த ஜூலை மாதம்தான் ப்ளாக் தொடங்கினேன்.
ஆனால் தமிழில் எழுதத்தெரியாத காரணத்தாலேயே  ஏறத்தாழ 8 மாதங்கள் என்னுடைய ப்ளாக்கில் எதுவுமே எழுதாமல் இருந்தேன்..

எப்படியோ இந்த மார்ச் மாதம்தான் ஏதோ ஒரு அசட்டு நம்பிக்கையில் இகலப்பை மென்பொருளை என் கணினியில் நிறுவி எழுதத்தொடங்கினேன்.
தமிழில் எழுத இதைவிட சிறந்த ஒரு மென்பொருள் இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை..

லேப்டாப்பில் ஒருநாளைக்கு ஒருமணி நேரம் அளவுக்குத்தான் அனுமதி...அதற்குமேல் சிஸ்டத்தில் உட்கார்ந்திருந்தால் என் மனைவியின் முகத்தைப் பார்க்க முடியாது...எப்பவும் சிஸ்டத்துலே உக்காந்து இருக்கீங்க,,என்னை கண்டுக்கவே மாட்ரீங்கனு சொல்ல ஆரம்பித்துவிடுவாள்..அவளின் உணர்வுக்கும் கொஞ்சம் மரியாதை கொடுத்து லேப்டாப்பை மூடிவைத்து விடுவேன்..

நண்பர்கள் பலரின் பதிவுகளையும் மனைவி பார்க்காத நேரத்தில் மொபைலில் படிப்பேன்..அப்பதிவுகளுக்கு கமெண்ட் எழுதவேண்டும் என்று நினைப்பேன்.
ஆனால் மொபைலில் தமிழில் எழுதத் தெரியாது என்பதால் அப்படியே விட்டுவிடுவேன்..மறுபடியும் லேப்டாப்பைத் திறந்தால் அவ்வளவுதான்...புரிகிறதா...

எப்படியாவது ஆன்ட்ராய்டு மொபைலில் தமிழில் எழுத வேண்டும் என்று முடிவுசெய்தேன்..PLAY STOREல் தேடியபொழுது தமிழ்விசை என்ற அப்ளிகேஷனைக்கண்டறிந்தேன்.. என்னைப் போன்றவர்களுக்கு உதவுமே என்ற எண்ணத்தில்தான் இப்பதிவு தோன்றியது..

TAMILVISAI  மென்பொருளை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள். SETTINGS சென்று  LOCALE AND TEXT செலக்ட் செய்து

INPUT METHOD என்ற ஆப்ஷனை கிளிக் செய்து TAMILVISAI செலக்ட் செய்யவும்..அவ்வளவுதான் இனி உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலில் நீங்கள்  தமிழில் எழுதலாம்..என்னை மாதிரியே...Sunday, 14 April 2013

தமிழ்ப்புத்தாண்டு வேண்டாமே!...புத்தாண்டு என்போம்..!!.

       அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..காலையிலிருந்து பார்க்கும் முகங்களும், கேட்கும் குரல்களும் சொல்லும் ஒரே வார்த்தை இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்பதுதான்..கேட்பதற்கு மனதிற்குக் கொஞ்சம் நெருடலாகத்தான் இருக்கிறது..

இதிலென்ன கஷ்டம்,நல்ல விஷயம்தானே என்று கேட்கிறீர்களா  ..ஆங்கிலப் புத்தாண்டுக்குக் கொடுக்கும் முக்கியத்துவமும்,ஆரவாரமும் நம் புத்தாண்டன்று இல்லாமல் போவது ஏன் என்ற நெருடல்தான்...

நம்மவர்களுக்கு எப்போதுமே அயல்நாட்டுக்காரன் மொழியான ஆங்கிலத்தின் மீதுதானே அதீத பாசம். ஆங்கிலப் புத்தாண்டன்று யாருமே  HAPPY ENGLISH NEW YEAR என்று கூறுவதில்லை.ஆனால் நம் தாய்த்தமிழின் புத்தாண்டை என்னமோ வேறு மொழி போல தமிழ்ப் புத்தாண்டு என்று அழுத்தம் கொடுத்துச் சொல்லும் அளவுக்கு தமிழ் தரம் தாழ்ந்துவிட்டதா தமிழர்களே..?

தமிழர்களே இனியும் தயக்கம் வேண்டாம் ..இயன்றவரை தமிழில் எழுதுங்கள்.. தமிழைக் கொண்டாடுவோம்..தமிழனின் புத்தாண்டை தமிழ்க்கலாச்சாரத்தோடு கொண்டாடுங்கள்..

இன்னுமொரு சிறு விளக்கம்..வாழ்த்துகள் என்பது சரியா அல்லது வாழ்த்துக்கள் என்பது சரியா என்பதில் நம்மில் பலருக்கும் பல காலமாக சந்தேகம்..யாரோ ஒருவர் அவருடைய புத்தகத்தில் எழுதிவிட்டார் என்பதற்காக அதை அப்படியே பயன்படுத்த வேண்டும் என்று அவசியமில்லை.. உண்மையில் வாழ்த்துக்கள் என்பதே சரியான வார்த்தை..

கண்ணபிரான் என்னும் நண்பரின் பதிவைப் படிக்கும்போதுதான் மேற்கண்ட விளக்கங்களை அறிந்துகொண்டேன்..எழுத்துக்கள், வாழ்த்துக்கள் என்பதே சரியென்று தொல்காப்பியர், நச்சினார்க்கினியார் ஆகியோரின் உரையோடு தெளிவாக விளக்கியிருந்தார்..இந்த தருணத்தில் அவருக்கு என்னுடைய நன்றியையும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்..

மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..அடுத்த பதிவில் தொடர்கிறேன்..Saturday, 13 April 2013

கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று என்னிடம் கேட்டால் என் பதில் இல்லையென்றுதான் சொல்வேன். கடவுள் முன் அனைவரும் சமம் என்று கூறிவிட்டு கோயில்களில் 100ரூபாய் தரிசனம், விஐபி தரிசனம் என்று வியாபரமாக்கியபிறகு எங்கே இருக்கிறார் கடவுள் ?.

ஆனால் தமிழர்களின் கலாச்சாரத்தையும், புராதாண கோயில்களையும் மதிப்பவன் நான்..வாசலில் சாணமிடுவது, கோமியம் தெளிப்பது ,மஞ்சள் தெளித்தல்,முகத்தில் மஞ்சள் பூசுவது, தாலிக்கயிறு அணிவது போன்ற அறிவியல் பூர்வமான அற்புத தமிழ் கலாச்சாரங்கள் இன்று கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன..

தாலிக்கயிறெல்லாம் இப்பொழுது தங்கச்சரடுகளாக தரம் உயர்ந்துவிட்டன..மஞ்சள் இருந்த  இடமெல்லாம் இப்பொழுது ஃபேர் அண்டு லவ்லிகள் நிரப்பிவருகின்றன.. இன்றைய மாடர்ன் பெண்கள் சாணத்தைப்பார்த்தாலே சாக்கடையைப் பார்ப்பது போல் பார்க்கிறார்கள்.கௌரவக்குறைச்சலாக நினைக்கிறார்கள்..கோயில்களுக்குப் போவதைக் குற்றமாக நினைக்கிறார்கள்...

 நல்லதைச் செய்யக்கூட நம் மக்களை பயமுறுத்த வேண்டியிருக்கிறது..கடவுள் இருக்கிறார் என்ற பயம் இருந்த்ததால்தான் அக்காலத்தில் குற்றங்கள் குறைவாக நடந்தன..ஆனால் இன்று கலாச்சாரமும் காணோம், கடவுளையும் காணோம்...இன்று கோவில்களுக்குச் செல்லும் ஒருசிலர் கூட வெட்டிக்கதை பேசவும், பெண்களை ரசிக்கவும் மட்டுமே செல்கிறார்கள் என்பது உண்மைதானே..

சூரிய ஒளியில் விட்டமின் டி இருப்பதை ஒத்துக்கொள்கிறீர்களா  ?அப்படியென்றால் முழுநிலவின் ஒளியில் ஏன் விட்டமின் சி இருக்கக்கூடாது?.,செவ்வாய் கோளின் ஒளியில் கூட விட்டமின் ஏ இருக்கலாம் அல்லவா?  .புதன் கோளில் கூட புத்திர பாக்கியம் தரக்கூடிய விட்டமின் ஈ இருக்கக்கூடும்...

சில ஆண்டுகளுக்கு முன்னர் அயல்நாட்டு அறிவியல் அறிஞர்கள் செவ்வாய் கோள் சிவப்புக்கோள்  என்று கஷ்டப்பட்டு கண்டறிந்ததை ,ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் தமிழர்கள் செவ்வாய் என்று பெயரிட்டது அறிவியல் ஆச்சர்யம் அல்லவா?  ..தீமிதிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக அறிஞர்கள் இன்று கண்டறிந்திருப்பதை, நம் தமிழர்கள் காலங்காலமாய் பின்பற்றி வருகிறோம்.

அமெரிக்கா காரன் சொன்னால்தானே  நாம் எதையும் கேட்போம்,ஆர்யபட்டா சொன்னதை நாம் என்று கேட்டிருக்கிறோம்.

கடவுள் இருக்கிறார் என்று நான் விவாதம் செய்யமாட்டேன்..ஆனால் கடவுள் என்ற பெயரும் ,காவல்துறை என்ற பெயரும் இல்லாமல் போயிருந்தால் நம்மவர்கள் எல்லாரும் எப்போதோ கொலை,கொள்ளை,கற்பழிப்பில் ஈடுபடத் தொடங்கியிருப்பார்கள்..

அமெரிக்காவில் ஒருவன் செல்பேசியில் பேசுவதை ஆந்திராவில் இருக்கும் ஒருவன் எந்த குரல்மாற்றமும் இன்றி அப்படியே கேட்க முடிகிறதென்றால் மனிதனின் அறிவுக்கு அப்பாற்பட்ட ஏதோவொரு சக்தி இருப்பதாகத்தானே அர்த்தம்..அந்த அற்புத சக்தியை.நான் கடவுளாக ஏற்றுக்கொள்கிறேன்...

கோவை மாவட்ட சுற்று வட்டாரங்களில் இன்றும் பல வீடுகளில் தாலிக்கயிறு அணிந்திருப்பதையும்,வீடுகளில் சாணம் தெளிப்பதையும் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்..

தமிழர்களே கடவுளை வணங்குகிறீர்களோ இல்லையோ,தமிழ் கலாச்சாரத்தை மதியுங்கள்..நம் தமிழ் கலாச்சாரம் அறிவியல் பூர்வமான அற்புதமான கலாச்சாரம்..அடுத்த பதிவில் தொடர்கிறேன்..நன்றி..

Friday, 12 April 2013

NEET தேர்வுக்கான அனுமதிச்சீட்டு வந்தாச்சு....

நீண்ட நாட்களாக ஆவலோடு எதிர்பார்த்திருந்த தேசிய அளவிலான மருத்துவம் மற்றும் பல்மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத்தேர்வு (NEET UG 2013)அனுமதிச்சீட்டு ஒருவழியாக நேற்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. DOWNLOAD THE ADMIT CARD HERE 


Thursday, 11 April 2013

சிறுவர் உலகம்-வலைப்பதிவு அறிமுகம்

பிளாக்கர் பக்கம் வந்து ஒருவார காலமாகிவிட்டது. வேலைப்பளு காரணமாக இரண்டு மூன்று  நாட்களாக எழுதமுடியவில்லை. இன்று வலைப்பதிவில் கண்ட ஒரு சிறந்த வலைப்பூவைப்பற்றி இப்பதிவில் எழுத விரும்புகிறேன்.

siruvarulakam.blogspot.com என்ற வலைப்பூவே அது. சிறுவர்களுக்குத் தேவையான நூற்றுக்கணக்காண நீதிக்கதைகள் இப்பதிவில் விரவிக்கிடக்கின்றன.நம் சிறுவயதில் படிக்கும் காலத்தில் பள்ளிகளில் நீதிபோதனை என்ற பாடவேளை இருக்கும். செய்யுள் பகுதி நடத்தும்போது கூட ஆசிரியர்கள் ஒருசில நீதிக்கதைகளை கூறியே பாடம் நடத்துவார்கள்.

ஆனால் தற்போது பள்ளிகளில் மாணவர்களுக்குக் கதைகூறும் பழக்கமே மறைந்துபோய்விட்டது.அதனால்தான் இன்றைய சமுதாயத்தில் மனிதாபிமானம்,சகிப்புத்தன்மை,அன்பு,கருணை,பெரியோரை மதித்தல் ஆகிய குணங்கள் அற்றுப்போய்விட்டது.

அன்பார்ந்த ஆசிரியர்களே,பெற்றோர்களே மேற்குறிப்பிட்ட தளத்தைப் பயன்படுத்திப் பாருங்கள். தினந்தோறும் ஒரு நீதிக்கதையை உங்கள் குழந்தைகளுக்குக் கூறுங்கள். வருங்கால சமுதாயம் வன்முறையற்ற சமுதாயமாக மாறட்டும்.

காஞ்சனா ராதாகிருஷ்ணன் என்பவரே மேற்கண்ட தளத்தின் ஆசிரியர். சமுதாயத்துக்குத் தற்போது தேவையான விஷயத்தைப் பதிவிட்டு வரும் அவருக்கு நம் வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்....அடுத்த பதிவில் தொடர்கிறேன்.நன்றி

Friday, 5 April 2013

உணர்வுள்ள உயிருள்ள சமுதாயம் எப்போது தோன்றும்?

நம்முடைய வாழ்வில் பலவிதமான மனிதர்களைப் பலவிதமான சூழல்களில் காண்கிறோம். ஒரு சில சூழல்கள் உங்களுக்காக..

ஒரு பயணி பேருந்தில் பயணிக்கிறார். நடத்துனரிடம் பணம் கொடுத்து பயணச்சீட்டு வாங்குகிறார். நடத்துனர் இரண்டு ரூபாய் சில்லரை பிறகு தருகிறேன் என்று கூறிவிடுகிறார்.

அப்பொழுது ஒரு பிச்சைக்காரர் பேருந்தில் ஏறி மேற்குறிப்பிட்ட பயணியிடம் ஐயா தர்மம் செய்யுங்க என்று கேட்கிறார்.பயணி பிச்சைக்காரரைப் பார்த்து உனக்கு என்ன கேடு ? உழைத்துச்சாப்பிட்டால் என்ன என்று கேட்டு உதாசீனப்படுத்தி அனுப்பிவிடுகிறார்.

பிறகு அப்பயணி பேருந்தைவிட்டு இறங்கும் நேரம் நடத்துனரிடம் மீதி இரண்டு ரூபாய் சில்லரை கேட்க நினைக்கிறார்.ஆனால் அருகில் நிறைய இளம்பெண்கள் ...இரண்டு ரூபாய் சில்லரையைப்போய் எப்படி  கேட்பது என்று அசிங்கப்பட்டுக்கொண்டு பேருந்தைவிட்டு இறங்கிவிடுகிறார்.

இச்சூழலில் யார்மீது தவறு என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? என்னுடைய கருத்து -உழைத்துச்சாப்பிடு என்று உரிமையுடன் கூறினாயே பிச்சைக்காரனை நீ உழைத்துதானே சம்பாதித்தாய் பிறகேன் கேட்கவில்லை உரிமையோடு சில்லரையை.....

இத்தகைய மனநிலையே இன்றைய மனிதர்களிடம் வளர்ந்து வருகிறது.பக்கத்து வீட்டுக்காரன் பார்த்து விடுவானோ,?, எதிர்வீட்டுக்காரன் என்ன நினைப்பானோ என்று நினைத்தே பல நல்ல விஷயங்களை நாம் செய்யத்தயங்குகிறோம்.

மாரியம்மன் கோயில் கூழ் ஊற்றும் திருவிழாவிற்கு சுயகௌரவத்திற்காக
  5000 ரூபாய் நன்கொடை தரும் ஊர் பெரியமனிதர்,பக்கத்துவீட்டு மாரியம்மாளுக்கு உடல்நிலை சரியில்லையென்றால் ஒரு 100 ரூபாய் தர முன்வருவதில்லை.மனிதாபிமானமெல்லாம் இப்போது மரத்துப்போய்விட்டது.
 எதிர்கால சமுதாயம் உணர்ச்சியில்லா  உயிரில்லாமல் ஆகிவிடுமோ என்ற பயம் ஏற்படுகிறது.

அன்பான பெற்றோர்களே, ஆசிரியபெருமக்களே உங்கள் குழந்தைகளுக்கு மனிதாபிமானம் மறந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்,உறவுகளை உடைக்காமல் இருக்க ஊகப்படுத்துங்கள்.உணர்வுள்ள உயிருள்ள ஒரு சமுதாயத்தை உருவாக்க முயல்வோம்..இப்பதிவைப்படிக்கும் இரண்டு பேராவது மனம் மாறினால் எனக்கு மகிழ்ச்சியே....அடுத்த பதிவில் சந்திப்போம்.நன்றி
Tuesday, 2 April 2013

உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலில் மொபைல் பேங்கிங் வசதியைப் பெறுவது எப்படி?

 நம்மில் நிறைய பேர் ஆன்ட்ராய்டு மொபைல் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அதிலிருக்கும் பல்வேறு வசதிகளை நாம் அறிவதில்லை.இன்றைய பதிவில் உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலில் மொபைல் பேங்கிங் வசதியைப் பெறுவது எப்படி என்று பார்ப்போம்.

உங்கள் மொபைலில் GPRS PACK போட்டிருந்தால் நல்லது. முதலில் உங்கள் மொபைலில் < MBSREG> < உங்கள் மொபைல் கம்பனி> <மொபைல் மாடல்> டைப் செய்து 567676 என்ற எண்ணுக்கு SMS செய்யவும்.(எடுத்துக்காட்டு
MBSREG SAMSUNG 6102 ).உடனே உங்கள் மொபைலுக்கு ஒரு USER ID யும் ஒரு பாஸ்வேர்டும் கிடைக்கும்.அதைக் குறித்து வைத்துக்கொள்ளவும். SMSக்கு 3 ரூபாய் செலவாகும் ,அதையும் சொல்லிவிடுகிறேன்.

அடுத்தது நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் மொபைலில் GOOGLE PLAY STOREல் சென்று STATE BANK FREEDOM என்ற அப்ளிகேஷனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள். அந்த அப்ளிகேஷனை ஓப்பன் செய்து உங்களிடம் இருக்கும் USER ID மற்றும் பாஸ்வேர்டைக்கொடுத்து LOGIN செய்துகொள்ளுங்கள்.  CHANGE MPIN  OPTIONஇல் சென்று பாஸ்வேர்டை வேண்டுமானால் மாற்றிக்கொள்ளலாம்.

HDFC,ICICI  ஆகிய வங்கிகளின் அப்ளிகேஷன்களும் ஆன்ட்ராய்டு மொபைலில் கிடைக்கிறது.

நீங்கள் செய்ய வேண்டிய கடைசி வேலை நேராக உங்கள் ATM சென்டருக்கு சென்று உங்கள் கார்டை செருகி SERVICES ஆப்ஷனில் சென்று MOBILE BANKING REGISTRATION சென்று MOBILE NUMBER  கொடுத்து என்டர் செய்யவும். அதன்பின் உங்கள் மொபைலுக்கு ஒரு Confirmation message  வரும்.அவ்வளவுதான் முடிந்தது .இனி உங்கள் மொபைலில் மொபைல் பேங்கிங் வசதியைப் பயன்படுத்தலாம்.

 சந்தேகம் இருந்தால் என்னைத்தொடர்பு கொள்ளவும். தொடர்புக்கு-9940970456