Wednesday, 22 May 2013

பத்திரமா பாத்துக்கோங்க உங்க பற்களை...

பத்திரமா பாத்துக்கோங்க உங்க தலைமுடிய அப்படினு ஒரு விளம்பரம் பாத்து இருப்பீங்க..இது என்ன தலைப்பு வித்தியாசமா இருக்குனு  கேக்கறீங்களா ..தலைமுடி இல்லாமல் கூட ஒருவர் வாழ்ந்துவிடலாம்..ஆனால் பற்கள் இல்லாமல் ஒருவரின் வாழ்க்கையை நினைத்துப்பாருங்கள்.. நாளுக்குநாள்  புதிதுபுதிதாக முளைத்துவரும் பல்மருத்துவமனைகள் என்ன உணர்த்துகின்றன என்று உங்களுக்குப் புரியவில்லையா..

எப்படி செல்போன் இல்லாத குடும்பத்தைப் பார்க்கமுடிவதில்லையோ அதேபோல் இன்று பல்சொத்தை பிரச்சனை இல்லாத குடும்பத்தைப் பார்ப்பது அரிதாகிவிட்டது..சாம்பலும் செங்கல்தூளும் போட்டு பல்துலக்கிய அந்தக்காலத்தில் கூட இதுபோன்ற பிரச்சினைகள் குறைவாகவே இருந்தன..ஆனால் இன்று புதுப்புது வகையிலெல்லாம் பல் பிரச்சினைகள் பெருகிவருகின்றன..

நீ வாத்தியார் வேலைதானே பாத்த அதுக்குள்ள எப்படி  எம்.பி,பி.எஸ் எல்லாம் படிச்சி எப்ப டாக்டரானனு கேக்கறீங்களா..அப்படிலாம் ஒன்னுமில்லீங்க..இங்கதான் போனவாரமே புடுங்கிட்டாங்க..நீங்களாவது கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோங்க அப்படினு ஒரு social service தாங்க..ரெண்டுவாரமா ப்ளாக் பக்கம் வராம அப்பீட்டாயிப் போனதுக்குக் காரணம் இதாங்க மேட்டர்..

அப்பப்பா பல்வலி ..அது உயி ர்வலி.. என்னதான் வாத்தியார் வேலையில இருந்தாலும் சின்ன வயசுல கொஞ்சம் பல்சுத்தத்துல அக்கறை இல்லாம இருந்ததால இப்போ படாத பாடு படறன்.. என்னுடைய தலைமை ஆசிரியர் அடிக்கடி என்னை நக்கல் அடிப்பார்  என்னையா எனக்கு அறுபது வயசு ஆகப்போகுது..இதுவரைக்கும்  எனக்கு ஒரு சொத்தைப்பல் கூட வந்ததில்லைனு சொல்லிக்கிட்டே இருப்பார்..அவங்கவங்களுக்கு வந்தா தெரியும்னு மனசுக்குள்ள சொல்லிக்குவன்..

இதுவரை என்னுடைய பல்வலி பிரச்சினைக்காக நான் தனியார் மருத்துவமனைக்குச்சென்று செலவு செய்த தொகைமட்டும் எப்படியும் முப்பதாயிரத்தைத் தாண்டும்..பல்வலியைக்கூட தாங்கிக்கொள்ளலாம் போல ஆனால் பல்மருத்துவர்கள் கேட்கும் பணத்தைக் கேட்கும்போது வரும் நெஞ்சுவலியைத்தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை..இதற்கு பயந்தே பல ஏழைமக்கள்  வாழ்நாள் முழுதும் பல்வலியுடனேயே காலத்தைக்கழிக்கின்றனர்..இது நிதர்சனமான உண்மை..

அரசாங்கம் செய்யும் வசதிகளை ஏன் பயன்படுத்த மாட்டுகிறீர்கள்..ஏன் அரசு மருத்துவமனைக்குச் சென்றால் இலவசமாக மருத்துவம் பார்த்துக்கொள்ளலாமேளென்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது.. நானும் ஒரு அரசு ஊழியர்தான் ..அதனால் அரசாங்கத்தைக் குறைசொல்ல விரும்பவில்லை..அங்கே பல நடைமுறைச்சிக்கல்கள் இருக்கக்கூடும்..நான் ஒருமுறை பயங்கரமான பல்வலியோடு எங்கள் ஊரில் இருக்கும் அரசு பல்மருத்துவக்கல்லூரிக்குச் சென்றேன்.. போதாத குறைக்கு அவர்களும் கொஞ்சம் குத்திப்பார்த்துவிட்டு இருந்தவலியை இன்னும் கொஞ்சம் அதிகமாக்கிவிட்டார்கள்..அடுத்தது அவர்கள் கூறியதுதான் கொஞ்சம் அதிர்ச்சியானது..மார்ச் ஒன்றாம் தேதி போன என்னை இன்று போய் அடுத்த மாதம் ஐந்தாம் தேதி காலையில் ஆறு மணிக்குச் சரியாக வந்தால் உங்கள் பல் சொத்தையை அடைத்துவிடுவோம் என்று கூறி அனுப்பிவிட்டார்கள் என்னை..அவர்களையும் குறைசொல்லமுடியாது ..அங்கு அவ்வளவு கூட்டம் வருகிறது..இதனால்தான் நான் தனியார் மருத்துவமனையை நாடிச்செல்ல வேண்டியதாயிற்று..

நான்கு வருடங்களாக நாயாய் அலைந்து கொண்டிருக்கிறேன் இந்த பல்வலியால்..ஆனால் இன்னும் இன்ஃபினிடியாய் தொடர்கிறது..அந்த காலத்தில் எப்படிதான் தாங்கிக்கொண்டார்களோ தெரியவில்லை.பழங்காலத்தில் எப்படி பல் பிடுங்குவார்கள் என்பதை விளக்கும் படம் ஒன்றை ஒட்டியிருந்தார்கள் ஒரு பல்மருத்துவமனையில்..அதைப்பார்த்ததும் அதிர்ந்துபோனேன்..இரண்டு பேர் நோயாளியின் கைகளையும் இரண்டு பேர் கால்களையும் பிடிக்க மருத்துவர் மடாரென்று பிடுங்கிக்கொண்டிருந்தார் பல்லை..இன்றைய காலகட்டத்தில் அதுமட்டும்தான்  நமக்கு ஆறுதலான விஷயம்..

வளர்ந்துவிட்ட மருத்துவ வசதிகளால் மருப்பு ஊசியெல்லாம் போட்டுத்தான் பல்லைப் பிடுங்குகிறார்கள்..அதனால் எந்த ஒரு வலியும் தெரிவதில்லை..சென்ற வாரம்தான் கீழிருக்கும் ஒரு கடைவாய்ப்பல்லை எடுத்து வந்தேன்..கடைசி பல்லென்பதால் கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் பிடுங்கினார் டாக்டர்.. பிடுங்கிய கையோடு 1800 ரூபாய் பணத்தையும் பிடுங்கினார்..நீ எதப்புடுங்கனா எங்களுக்கென்ன..அத ஏன் எங்ககிட்ட சொல்ற..நீ ஆணியே புடுங்க வேணாண்ணுதானே சொல்றீங்க..

நீங்களாவது உஷாரா இருந்துக்கோங்கனுதான்  இந்த பதிவு..இடைப்பட்ட காலத்தில் நான் அறிந்துகொண்ட சில கிராம வைத்தியங்கள் உங்களுக்காக..பல்வலிக்கும் இடத்தில் இரண்டு கிராம்புத் துண்டுகளை வைத்துக்கொண்டால் பல்வலி ஓரளவு குறையும்..படிகாரத்தைவெண்ணீரில் போட்டு வாய்கொப்பளித்தால் ஈறுவலி குறையும்..பல்சொத்தை இருக்கும் இடத்தில் பப்பாளி பால்விட்டால் சொத்தை பரவாமல் இருக்கும்.. இவையெல்லாம் தற்காலிக தீர்வுகளே..வருமுன் காப்பதே நிரந்தரத் தீர்வாக இருக்கும்..

எனவே அன்பார்ந்த பெற்றோர்களே ,ஆசிரியர்களே  உங்கள் குழந்தைகளின் பல் சுத்தத்தில் அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள்..அசைவ உணவு சாப்பிட்டவுடன் வாயைச்சுத்தம் செய்ய கற்றுக்கொடுங்கள்..இரவில் படுக்கும்போது பல்துலக்காவிட்டாலும் பரவாயில்லை, வாயைக்கொப்பளித்து விட்டாவது படுக்கச் சொல்லுங்கள்..

யாருக்கும் தெரியாத மேட்டர அப்படியே சொல்ல வந்துட்டார்டா அப்படிதானே நினைக்கறீங்க..மனிதர்களைப்பற்றித் தெரியாதா..கெட்ட விஷயத்தை ஒருவர் சொன்னாலே கெக்களித்துக்கொண்டு கேட்போம் நாம்..ஆனால் நல்ல விஷயத்தை 400 பேர் 40 முறை சொன்னால்தான் 4 பேராவது கேட்போம்..மறுபடியும் ஒருமுறைக் கூறிக்கொள்கிறேன்  பத்திரமா பாத்துக்கோங்க உங்க பற்களை...அடுத்த பதிவில் தொடர்கிறேன் ..நன்றி..

.

9 comments:

 1. //நீ எதப்புடுங்கனா எங்களுக்கென்ன..அத ஏன் எங்ககிட்ட சொல்ற..நீ ஆணியே புடுங்க வேணாண்ணுதானே சொல்றீங்க..// நல்ல நையாண்டியானா நடை உங்களுக்கு

  நானும் அவஸ்தைப் பட்டுள்ளேன், உயிர் போகும் வலி அது... மருத்துவ வசதி அதிகரிக்க அதிகரிக்க வியாதிகளும் அதிகர்த்துக் கொண்டுதான் உள்ளது, அதனால் தான் புதிய புதிய மருத்துவ மனைகளும் முளைகின்றன....

  பத்தரமா பார்த்துக்கணும் பற்களை ... அவசியமான பதிவு

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி நண்பா..

   Delete
 2. பல் போனால் சொல் போச்சு என்பார்கள்.பல் பாதுகாப்பின் அவசியம் பற்றிப் பதிவிட்டமைக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா..

   Delete
 3. அகஸ்மாத்தாக தங்களின் இந்தப்பதிவினைப் படிக்க நேர்ந்த்து. பிறருக்கு ந்ல்ல எச்சரிக்கை செய்துள்ளீர்கள்.

  நானும் ஏற்கனவே எச்சரிக்கை செய்து எழுதியுள்ளதையும் படியுங்கள். நல்ல நகைச்சுவையாகவே இருக்கும். இணைப்பு இதோ:

  http://gopu1949.blogspot.in/2011/08/blog-post_07.html

  ”பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா?” பகுதி-1 / 2

  http://gopu1949.blogspot.in/2011/08/2-of-2.html பகுதி 2 / 2

  ReplyDelete
 4. அகஸ்மாத்தாக தங்களின் இந்தப்பதிவினைப் படிக்க நேர்ந்த்து. பிறருக்கு ந்ல்ல எச்சரிக்கை செய்துள்ளீர்கள்.

  நானும் ஏற்கனவே எச்சரிக்கை செய்து எழுதியுள்ளதையும் படியுங்கள். நல்ல நகைச்சுவையாகவே இருக்கும். இணைப்பு இதோ:

  http://gopu1949.blogspot.in/2011/08/blog-post_07.html

  ”பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா?” பகுதி-1 / 2

  http://gopu1949.blogspot.in/2011/08/2-of-2.html பகுதி 2 / 2

  ReplyDelete
 5. //இரவில் படுக்கும்போது பல்துலக்காவிட்டாலும் பரவாயில்லை, வாயைக்கொப்பளித்து விட்டாவது படுக்கச் சொல்லுங்கள்..// கர்ர்ர். கொப்பளிப்பதால் சுவை இல்லாமல் போகுமே தவிர பல்லிடுக்குகளில் இருப்பவை நீங்குவதில்லை. இரவில் கட்டாயம் பல் துலக்க வேண்டும். ஒழுங்கா கற்றுக் கொடுக்கணும் சார். :-)

  ReplyDelete
  Replies
  1. சரிங்க.நீங்க சொன்னா சரிதான்

   Delete
 6. பயனுள்ள பதிவு..
  வாழ்த்துக்கள்

  ReplyDelete