Wednesday 29 May 2013

வெளங்காத வீணாப்போன வெடி கலாச்சாரம்..

ஒருவாரகாலமாக எங்கள் ஊரில் திரௌபதை அம்மன் கோவில் திருவிழா பிரம்மாண்டமாகவும் வெகுவிமரிசையாகவும் நடைபெற்று வருகிறது..நேற்று கூத்தாண்டவர் திருக்கல்யாணம் ,இன்று தேர்த்திருவிழா ,நாளை மறுநாள் தீமிதி திருவிழா என்று ஊரே களை கட்டும்..விழாக்களைக் கொண்டாடுவதன் நோக்கமே உழைக்கும் மக்களின் மகிழ்ச்சிக்காகவும் உறவினர்களோடு ஒன்றுகூடி கலந்து பேசி மகிழ்வதற்குமே..இதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை..

ஆனால் இந்த திருவிழா காலங்களில் வெடிவிடும் கலாச்சாரம் அதிகரித்து வருவதைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..நல்ல விஷேஷத்துக்கும் வெடி வெடிக்கிறாங்க..பிறந்தநாளுக்கும் வெடி ,இறந்த நாளுக்கும் வெடி,அரசியல ஜெயிச்சாலும் வெடி, கிரிக்கெட் மேட்சுல ஜெயிச்சாலும் வெடி..முடியலப்பா..இவங்களாம் இந்த சமுதாயத்துக்கு என்னதான் சொல்ல வராங்கனு தெரியல..

இந்த மூன்று நாட்களில் மட்டும் எங்கள் ஊரில் வெடிக்கப்பட்ட வெடிகளின் எண்ணிக்கை நிச்சயமாக ஆயிரத்தைத் தாண்டும்...நேற்று இரவு சாமி ஊர்வலத்தின்போது பத்து மணி தொடங்கி பன்னிரண்டு மணிவரை தொடர்ச்சியாக வெடி வெடித்து சுற்றுச்சூழலை மாசுபடுத்தி வருகின்றனர்..

மஞ்சள் நீராட்டு விழாவிற்குக்கூட மத்திய மந்திரிகளை அழைத்து வெட்டி பெருமைக்காக வெடிவிட்டு சாகடிக்கிறார்கள்..வளைகாப்புக்கெல்லாம் வார்டு கவுன்சிலரை வரவேற்று வாணவேடிக்கை விட்டு தொல்லை கொடுக்கிறார்கள்..இருந்த பறவைகளை எல்லாம் இப்படி வெடிவிட்டே துரத்தி இயற்கையை அழித்துவிட்டீர்கள் .. இன்னும் என்னென்ன செய்யப்போகிறீர்களோ...


நம்ம இந்தியாவுல மகிழ்ச்சியைக் கொண்டாட அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி வெடிவிடுவதுதான்..இதில் வேற போட்டி போட்டுக்கிட்டு வெடிக்கிறாங்க..கொஞ்சநாள் போன இதுல கின்னஸ் சாதனைலாம் கூட முயற்சி பண்ணுவாங்க போல..யாரோ ஒருவரைக் கூப்பிட்டு ஏன் நீங்கள் வெடிவெடித்து மகிழ்ச்சியைக் கொண்டாடுகிறீர்கள் என்று கேட்டால் எல்லாரும் வெடிக்கிறாங்க நானும் வெடிக்கிறேன் என்பதுதான் பதிலாக இருக்கும்..

நம் மனிதர்களை ஆட்டு மந்தையோடு கூட ஒப்பிடமுடியாது..இப்ப இருக்கற ஆடுலாம் கூட தெளிவா இருக்கு..ஒரு ஆடு பள்ளத்தில் விழுந்தால் எந்தவொரு ஆடும் பின்னால் வரிசையாக சென்று விழுவதில்லை..ஆனால் மனிதன் மட்டும்தான் யாரோ ஒருவர் குழியில் விழுந்தால் வரிசையாக பின்னால் சென்று விழுகிறார்கள்.. உலகின் பகுத்தறிவற்ற ஒரே உயிரினம் மனித இனம் மட்டுமே..

இருக்கும் ஒலிமாசுபாடும் காற்றுமாசுபாடும் போதாதா..ஏன் இப்படி தினமும் பட்டாசுகளையும் வெடிகளையும் வெடித்து சுற்றுச்சூழலை மாசுபடுத்திக்கொண்டிருக்கிறீர்கள்..இல்லை இல்லை நீ சொல்வதை எல்லாம் நாங்கள் கேட்கமாட்டோம்..நாங்கள் இந்தியநாட்டின் பரிபாலணங்களையும் பண்பாட்டையும் கட்டிக்காப்பாற்றியே தீருவேன் என்கிறீர்களா...இருநூறு வெடி விட நினைக்கிறீர்களா..அதை ஐம்பதாக குறைத்துக்கொள்ளுங்கள்..மீதிப்பணத்தை ஏதாவது ஒரு அனாதை இல்லத்திற்கு வழங்கி உங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடலாமே.. அரசியலில் வெற்றி அடைபவர்கள் பொதுமக்களுக்கு ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கி உங்கள் மகிழ்ச்சியைப் பகிரலாமே..

ஏதோ நான் சொல்லறத சொல்லிட்டன்..இரண்டு பேராவது பின்பற்றினால் எனக்கு மகிழ்ச்சியே...அடுத்த பதிவில் தொடர்கிறேன்..நன்றி..

Friday 24 May 2013

கொஞ்சம் தமிழும் கொஞ்சம் சிரிப்பும்

பிளாக்கில் ஒழுங்காக எழுத ஆரம்பித்து இரண்டு மாதங்கள்தான் ஆகிறது..இரண்டு மாதத்திற்குள் என்னுடைய பிளாக்கின்  total pageviews  அதற்குள் 5000த்தை தாண்டிவிட்டது. என்ன நினைச்சா எனக்கே கொஞ்சம் சிரிப்பு சிரிப்பாத்தான் வருது..ஒரு கதை எழுதத்தெரியாது, கவிதை தெரியவே தெரியாது, அடுக்கு மொழியில் எழுதத்தெரியாது,உவமை-உருவகமெல்லாம் ஒன்றும் தெரியாது..ஆனால் என்னையும் ஒரு மனிதனாக மதித்து என்னுடைய பதிவுகளையும் தொடர்ந்து படித்து வரும் வலையுலக நண்பர்களுக்கும்  இணைய வாசகர்களுக்கும் இந்த தருணத்தில் இனிய நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்..

ஏதோ என் மனதில் தோன்றும் எண்ண அலைகளையும் அனுபவங்களையும் உங்களுடன் பகிர்ந்து வருகிறேன்..ஆனால் எந்த ஒரு பதிவிலும் எந்த ஒரு மதத்தினரையோ,சாதியினரையோ,தனிப்பட்ட மனிதரையோ குற்றஞ்சொன்னதில்லை,குறைகூறியதில்லை..யார் மனதையும் புண்படுத்தும் விதமாக எந்தவொரு பதிவையும் எழுதவில்லை..இனிவரும் காலங்களிலும் நிச்சயம் அதைப் பின்பற்றுவேன்..

என்னுடைய பதிவுகள் எல்லாம் பாலச்சந்தர் சார் படம் மாதிரி..பெருசா காமெடிலாம் ஒன்னும் இருக்காது..படிக்கறதுக்கு கொஞ்சம் பொறுமை வேணும்..கொஞ்சம் ட்ரையாத்தான் இருக்கும்..அதனால்தான் இன்று கொஞ்சம்
நையாண்டியாக ஒரு பதிவு எழுதலாம் என்று முயற்சித்திருக்கிறேன்..யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதவில்லை..குற்றம் குறையிருந்தால் கூறுங்கள்..

ஒரு தமிழ் 'குடிமகன்' குடிப்பதற்காக சாராயக்கடைக்குச் சென்று கொண்டிருக்கிறார்..அவரைப்பிடித்து வந்து  பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கு ஒரு வினாத்தாள் எடுக்கச்சொன்னால்  எப்படி எடுப்பார் என்பதை இங்கே பதிவாக்கியுள்ளேன்..(தமிழைக் கொச்சைப்படுத்தும் எண்ணமெல்லாம் இல்லை..சிரிப்பதற்காக மட்டுமே..)

 1.குறிப்பு வரைக-பீர்,பிராந்தி,ரம்

2.பிரித்து எழுதுக-சாராயக்கடை

3.பொன்முடியார்   பாடலால் அறியப்படும் குடிகாரர்கள் பற்றிய செய்திகளைக் கூறுக.

4. இடம் சுட்டி பொருள் விளக்குக-சாராயம் குடிச்சாக்கா சங்கீதம் தானா வரும்

5.குடித்துவிட்டு குப்புறக் கிடந்தான்-செயப்பாட்டு வினை வாக்கியமாக்குக.

6.தண்ணித்தொட்டி தேடிவந்த கண்ணுக்குட்டி நான் என்னும் பாடலால்

அறியப்படும் வரலாற்றுச்செய்தி யாது..?

7.ஒயின்ஷாப்பின் உன்னதத்தை குவார்டர் கோவிந்தன் எவ்வாறு படம் பிடித்து காட்டுகிறார்.?

8.பெயர்க்காரணம் தருக-கள்ளச்சாராயம்.

9.வாந்தி எடுத்த தலைவனைப் பார்த்து தலைவி தோழியிடம் கூறியது யாது.?

10.தேன்மயங்கு பீரினும் இனிது அவர்நாட்டு பனைமரத்து கள் என்று தலைவன் கூறுவதிலிருந்து பெறப்படும் கருத்து யாது.?


11.சாராயத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் யாவை..?

12.சரக்கடித்தலினும் சைடிஷ் சாப்பிடுவதே சிறந்தது-விளக்குக.

13.ஒயின்ஷாப்பின் இலக்கணமாய் குறள் கூறுவது யாது..?

14.செங்கோல் மன்னன் குடிகாரர்களை எவ்வாறு மதிக்க வேண்டும் என ஆசிரியர் கூறுகிறார்..?

15.குடிகாரர்கள் நிலைமை நெடுநல்வாடையில் எவ்வாறு விளக்கப்பெற்றுள்ளது.?.


இன்னும் சரக்கு மிச்சம் இருக்கு..இருந்தாலும் உங்களுக்கு போதை ஏறிடப்போகுது..போய்ப்படுங்க..அடுத்த பதிவில் தொடர்கிறேன்,நன்றி.....

Wednesday 22 May 2013

பத்திரமா பாத்துக்கோங்க உங்க பற்களை...

பத்திரமா பாத்துக்கோங்க உங்க தலைமுடிய அப்படினு ஒரு விளம்பரம் பாத்து இருப்பீங்க..இது என்ன தலைப்பு வித்தியாசமா இருக்குனு  கேக்கறீங்களா ..தலைமுடி இல்லாமல் கூட ஒருவர் வாழ்ந்துவிடலாம்..ஆனால் பற்கள் இல்லாமல் ஒருவரின் வாழ்க்கையை நினைத்துப்பாருங்கள்.. நாளுக்குநாள்  புதிதுபுதிதாக முளைத்துவரும் பல்மருத்துவமனைகள் என்ன உணர்த்துகின்றன என்று உங்களுக்குப் புரியவில்லையா..

எப்படி செல்போன் இல்லாத குடும்பத்தைப் பார்க்கமுடிவதில்லையோ அதேபோல் இன்று பல்சொத்தை பிரச்சனை இல்லாத குடும்பத்தைப் பார்ப்பது அரிதாகிவிட்டது..சாம்பலும் செங்கல்தூளும் போட்டு பல்துலக்கிய அந்தக்காலத்தில் கூட இதுபோன்ற பிரச்சினைகள் குறைவாகவே இருந்தன..ஆனால் இன்று புதுப்புது வகையிலெல்லாம் பல் பிரச்சினைகள் பெருகிவருகின்றன..

நீ வாத்தியார் வேலைதானே பாத்த அதுக்குள்ள எப்படி  எம்.பி,பி.எஸ் எல்லாம் படிச்சி எப்ப டாக்டரானனு கேக்கறீங்களா..அப்படிலாம் ஒன்னுமில்லீங்க..இங்கதான் போனவாரமே புடுங்கிட்டாங்க..நீங்களாவது கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோங்க அப்படினு ஒரு social service தாங்க..ரெண்டுவாரமா ப்ளாக் பக்கம் வராம அப்பீட்டாயிப் போனதுக்குக் காரணம் இதாங்க மேட்டர்..

அப்பப்பா பல்வலி ..அது உயி ர்வலி.. என்னதான் வாத்தியார் வேலையில இருந்தாலும் சின்ன வயசுல கொஞ்சம் பல்சுத்தத்துல அக்கறை இல்லாம இருந்ததால இப்போ படாத பாடு படறன்.. என்னுடைய தலைமை ஆசிரியர் அடிக்கடி என்னை நக்கல் அடிப்பார்  என்னையா எனக்கு அறுபது வயசு ஆகப்போகுது..இதுவரைக்கும்  எனக்கு ஒரு சொத்தைப்பல் கூட வந்ததில்லைனு சொல்லிக்கிட்டே இருப்பார்..அவங்கவங்களுக்கு வந்தா தெரியும்னு மனசுக்குள்ள சொல்லிக்குவன்..

இதுவரை என்னுடைய பல்வலி பிரச்சினைக்காக நான் தனியார் மருத்துவமனைக்குச்சென்று செலவு செய்த தொகைமட்டும் எப்படியும் முப்பதாயிரத்தைத் தாண்டும்..பல்வலியைக்கூட தாங்கிக்கொள்ளலாம் போல ஆனால் பல்மருத்துவர்கள் கேட்கும் பணத்தைக் கேட்கும்போது வரும் நெஞ்சுவலியைத்தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை..இதற்கு பயந்தே பல ஏழைமக்கள்  வாழ்நாள் முழுதும் பல்வலியுடனேயே காலத்தைக்கழிக்கின்றனர்..இது நிதர்சனமான உண்மை..

அரசாங்கம் செய்யும் வசதிகளை ஏன் பயன்படுத்த மாட்டுகிறீர்கள்..ஏன் அரசு மருத்துவமனைக்குச் சென்றால் இலவசமாக மருத்துவம் பார்த்துக்கொள்ளலாமேளென்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது.. நானும் ஒரு அரசு ஊழியர்தான் ..அதனால் அரசாங்கத்தைக் குறைசொல்ல விரும்பவில்லை..அங்கே பல நடைமுறைச்சிக்கல்கள் இருக்கக்கூடும்..நான் ஒருமுறை பயங்கரமான பல்வலியோடு எங்கள் ஊரில் இருக்கும் அரசு பல்மருத்துவக்கல்லூரிக்குச் சென்றேன்.. போதாத குறைக்கு அவர்களும் கொஞ்சம் குத்திப்பார்த்துவிட்டு இருந்தவலியை இன்னும் கொஞ்சம் அதிகமாக்கிவிட்டார்கள்..அடுத்தது அவர்கள் கூறியதுதான் கொஞ்சம் அதிர்ச்சியானது..மார்ச் ஒன்றாம் தேதி போன என்னை இன்று போய் அடுத்த மாதம் ஐந்தாம் தேதி காலையில் ஆறு மணிக்குச் சரியாக வந்தால் உங்கள் பல் சொத்தையை அடைத்துவிடுவோம் என்று கூறி அனுப்பிவிட்டார்கள் என்னை..அவர்களையும் குறைசொல்லமுடியாது ..அங்கு அவ்வளவு கூட்டம் வருகிறது..இதனால்தான் நான் தனியார் மருத்துவமனையை நாடிச்செல்ல வேண்டியதாயிற்று..

நான்கு வருடங்களாக நாயாய் அலைந்து கொண்டிருக்கிறேன் இந்த பல்வலியால்..ஆனால் இன்னும் இன்ஃபினிடியாய் தொடர்கிறது..அந்த காலத்தில் எப்படிதான் தாங்கிக்கொண்டார்களோ தெரியவில்லை.பழங்காலத்தில் எப்படி பல் பிடுங்குவார்கள் என்பதை விளக்கும் படம் ஒன்றை ஒட்டியிருந்தார்கள் ஒரு பல்மருத்துவமனையில்..அதைப்பார்த்ததும் அதிர்ந்துபோனேன்..இரண்டு பேர் நோயாளியின் கைகளையும் இரண்டு பேர் கால்களையும் பிடிக்க மருத்துவர் மடாரென்று பிடுங்கிக்கொண்டிருந்தார் பல்லை..இன்றைய காலகட்டத்தில் அதுமட்டும்தான்  நமக்கு ஆறுதலான விஷயம்..

வளர்ந்துவிட்ட மருத்துவ வசதிகளால் மருப்பு ஊசியெல்லாம் போட்டுத்தான் பல்லைப் பிடுங்குகிறார்கள்..அதனால் எந்த ஒரு வலியும் தெரிவதில்லை..சென்ற வாரம்தான் கீழிருக்கும் ஒரு கடைவாய்ப்பல்லை எடுத்து வந்தேன்..கடைசி பல்லென்பதால் கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் பிடுங்கினார் டாக்டர்.. பிடுங்கிய கையோடு 1800 ரூபாய் பணத்தையும் பிடுங்கினார்..நீ எதப்புடுங்கனா எங்களுக்கென்ன..அத ஏன் எங்ககிட்ட சொல்ற..நீ ஆணியே புடுங்க வேணாண்ணுதானே சொல்றீங்க..

நீங்களாவது உஷாரா இருந்துக்கோங்கனுதான்  இந்த பதிவு..இடைப்பட்ட காலத்தில் நான் அறிந்துகொண்ட சில கிராம வைத்தியங்கள் உங்களுக்காக..பல்வலிக்கும் இடத்தில் இரண்டு கிராம்புத் துண்டுகளை வைத்துக்கொண்டால் பல்வலி ஓரளவு குறையும்..படிகாரத்தைவெண்ணீரில் போட்டு வாய்கொப்பளித்தால் ஈறுவலி குறையும்..பல்சொத்தை இருக்கும் இடத்தில் பப்பாளி பால்விட்டால் சொத்தை பரவாமல் இருக்கும்.. இவையெல்லாம் தற்காலிக தீர்வுகளே..வருமுன் காப்பதே நிரந்தரத் தீர்வாக இருக்கும்..

எனவே அன்பார்ந்த பெற்றோர்களே ,ஆசிரியர்களே  உங்கள் குழந்தைகளின் பல் சுத்தத்தில் அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள்..அசைவ உணவு சாப்பிட்டவுடன் வாயைச்சுத்தம் செய்ய கற்றுக்கொடுங்கள்..இரவில் படுக்கும்போது பல்துலக்காவிட்டாலும் பரவாயில்லை, வாயைக்கொப்பளித்து விட்டாவது படுக்கச் சொல்லுங்கள்..

யாருக்கும் தெரியாத மேட்டர அப்படியே சொல்ல வந்துட்டார்டா அப்படிதானே நினைக்கறீங்க..மனிதர்களைப்பற்றித் தெரியாதா..கெட்ட விஷயத்தை ஒருவர் சொன்னாலே கெக்களித்துக்கொண்டு கேட்போம் நாம்..ஆனால் நல்ல விஷயத்தை 400 பேர் 40 முறை சொன்னால்தான் 4 பேராவது கேட்போம்..மறுபடியும் ஒருமுறைக் கூறிக்கொள்கிறேன்  பத்திரமா பாத்துக்கோங்க உங்க பற்களை...அடுத்த பதிவில் தொடர்கிறேன் ..நன்றி..

.

Tuesday 7 May 2013

பிச்சைக்காரர்களும் மனிதர்கள்தானே...!!

    பிளாக் பக்கம் வந்து ஒருவார காலமாகிவிட்டது..உடலும் மனமும் ஒத்துழைக்காத காரணத்தால் ஒருவாரமாக எதுவும் எழுத முடியவில்லை..நண்பர்களின் பதிவுகளுக்குக் கூட கருத்துரை எழுதமுடியவில்லை..மன்னிக்கவும்..(ஒருவாரமாக நிம்மதியாத்தாண்டா இருந்தோம் அப்படித்தானே சொல்றீங்க..).

சென்றவாரம் முதல் என் மனதை அரிக்கும் ஒரு விஷயத்தையே உங்களுடன் இன்று பகிர விரும்புகிறேன்..மொட்டை போடுவதற்காக சென்றவாரம் கோவிலுக்குச் சென்றிருந்தேன்..நான்கைந்து பிச்சைக்காரர்கள் வரிசையாக அமர்ந்திருந்தார்கள்..பத்து ரூபாய் கொடுத்து அவர்களைப் பிரித்து எடுத்துக்கொள்ளுமாறு கூறிவிட்டுவந்தேன்..உடன்வந்த ஒருசிலர் அந்த பிச்சைக்காரர்களை கேவலமாக பார்த்தது மனதிற்குக் கஷ்டமாக இருந்தது..

மேலே குறிப்பிட்ட மனிதர்களை ஒருசில கேள்விகள் கேட்க விரும்புகிறேன்..
பிச்சைக்காரர்களைப் பற்றிய உங்கள் எண்ணம்தான் என்ன?.  அவர்களுக்கு நாம் ஏன் உதவ வேண்டும் என்பதுதானே ? .. வேறு வழியின்றிதான் பலர் பிச்சையெடுக்கிறார்கள்..பிச்சை எடுப்பது என்பது ஒன்றும் அவ்வளவு சாதாரண காரியமல்ல..ஒரு நாடகத்தில் பிச்சைக்காரன் வேடம் கொடுத்தால்கூட நாம் எவ்வளவு தயங்குவோம்..உண்மையில் பிச்சையெடுப்பவர்களின் மனநிலையை நினைத்துப்பாருங்கள்..

நான் ஒன்றும் பிச்சைக்காரர்களுக்கு வக்காளத்து வாங்குவதற்காக இங்கே வரவில்லை..பிச்சையெடுப்பதை சரியென்றும் நியாயப்படுத்தவில்லை..
உங்களுடைய எண்ணம் என்ன ?  பிச்சைக்கார்கள் பலர் உடல் நன்றாக இருந்தும் உழைக்காமல் நம்மை ஏமாற்றிப் பிழைக்கிறார்கள் என்பதுதானே..!
நீங்கள் வாழ்க்கையில் யாரிடமும் ஒருநாள் கூட ஏமாந்ததே இல்லையா என்பதுதான் என் கேள்வி..

ஒரு கோவிலுக்குச் செல்கிறீர்கள்..அர்ச்சனைத் தட்டெல்லாம் வாங்கிப் படைக்கிறீர்கள்..அர்ச்சகர் தீபத்தட்டை வரிசையாக காட்டி வருகிறார்..உங்கள் பக்கத்தில் இருப்பவர் அர்ச்சகரின் தட்டில் பத்து ரூபாய் போடுகிறார்..உடனே நீங்கள் உங்கள் வெட்டி கௌரவம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக இருபது ரூபாய் போடுகிறீர்கள்..அங்கே உங்கள் வறட்டு கௌரவத்திற்காக ஏமாறவில்லையா..?

நண்பருடன் ஒரு ஓட்டலுக்குச் செல்கிறீர்கள்..இருநூறு ரூபாய்க்குச் சாப்பிடுகிறீர்கள்..பில் கொடுக்கப் போகிறீர்கள்..நான்தான் கொடுப்பேன் என்று உங்களுக்குள் சண்டையெல்லாம் போட்டு முடித்து கடைசியாக யாரோ ஒருவர் பில் பணத்தைக் கொடுக்கிறீர்கள்..வரும்பொழுது உங்களுக்கு பரிமாறிய சர்வருக்கு நம்முடைய வெட்டி கௌரவம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக இருபது ரூபாய் டிப்ஸ் கொடுத்துவிட்டுத்தானே வருகிறோம்..அவர்களுடைய உழைப்புக்குத்தானே கொடுத்தோம் என்பதெல்லாம் வெறும்பேச்சு..எல்லாரும் கொடுக்கிறார்கள், நாமும் கொடுக்கிறோம் என்பதுதானே உண்மை..இங்கெல்லாம் நீங்கள் ஏமாறவில்லையா.. ?

தினம் தினம் ஏமாறும் காதலன்களே நீங்கள் ஒருநாள் கூட உங்கள் காதலியிடம் ஏமாந்ததில்லையா..வருடம் முழுதும் பத்துபைசா பேலன்ஸ்  மட்டுமே வைத்துக்கொண்டு உங்களுக்கு ஒரு மிஸ்டுகால் கொடுத்துவிட்டு மணிக்கணக்காய் உங்களிடம்  பேசி உங்கள் வருமானத்தில் பாதியை ரீசார்ஜ் செலவுக்கே காலி செய்யும் காதலிகளிடம் எந்த ஒரு இளைஞனும் ஏமாந்ததில்லையா..?

ஓட்டலில் சென்று இரண்டு இட்லி ஒரு வடை மட்டும் சாப்பிட்டு விட்டு எண்பது ரூபாய் பில் என்றதும் வாயையும்__________யும் மூடிக்கொண்டு பில்லைக் கொடுத்துவிட்டுத்தானே வருகிறோம்.. ஆனால் பிச்சைக்காரனுக்கு இரண்டு ரூபாய் கொடுக்க நமக்கு மனம் வருவதில்லை..

அப்படியானால் பிச்சையெடுப்பது சரியென்று நான் சொல்லவரவில்லை..சில இடங்களில் அது சமூகக் குற்றமாக்ககூட நடந்துவருவதை நான் மறுக்கவில்லை..நான் சொல்வதெல்லாம் அவர்களையும் சகமனிதர்களாய் மதியுங்கள்..அவர்களும் சதைப்பிண்டம் அடங்கிய உயிர்களே..

பிச்சைக்காரர்கள் இல்லாமல் இருக்கச் செய்வது அரசாங்கத்தின் கடமை..தமிழ்நாட்டின் எத்தனையோ கோயில்களிலும் பொது இடங்களிலும் பலர்  பிச்சையெடுக்கிறார்கள் என்பது அரசாங்கத்திற்கும் காவல்துறைக்கும் தெரியவே தெரியாதா.?. அரசாங்கத்தின் சார்பில் ஒரு சிறுதொழில் நிறுவனம் தொடங்கி அங்கே பிச்சைக்காரர்களுக்கு வேலை கொடுத்து மறுவாழ்வு கொடுக்கலாம்..அவர்களின் பிள்ளைகள் தங்கும் வசதி செய்து பள்ளிக்கூடம் அமைத்து அவர்களுக்குக் கல்வி கொடுக்கலாம்..

உழைக்கும் மக்களையே நீங்கள் உழைக்க வேண்டாம் என்று சொல்லி எல்லா இலவசங்களையும் கொடுத்து நம்மைச் சோம்பிறியாக்கும் இந்த அரசாங்கம் எப்படி பிச்சைக்காரர்களுக்கு  உழைப்பைக் கற்றுக்கொடுக்கும்..?

பிச்சைக்காரர்களைக் கேவலமாகப் பார்ப்பதைத் தவிர வேறு என்ன செய்திருக்கிறோம் நாம்..போக்கிரி படத்தில் விஜய் சொல்வது போல உப்புமாவாச்சும் கொடுத்திருப்போமா.. அபியும் நானும் படத்தில் ஒரு கதையை அற்புதமாக இணைத்திருப்பார் இயக்குநர்..தன் பள்ளி வாசலில் பிச்சை எடுக்கும் ஒருவரைக் கூட்டி வந்து அவர்கள் வீட்டில் வைத்துக்கொள்ளலாம் என்று  திரிஷா தன் தந்தையிடம் வாதிடுவார்..அதில் அவர் வெற்றியும் பெறுவார்..அந்த பிச்சைக்காரனை அவர்கள் குடும்பத்தில் ஒருவராக மதிப்பார்கள்..

 வசதி படைத்த பணக்காரர்கள் ஏன் இதை பின்பற்றக்கூடாது..சினிமாவில் காட்டுவதெல்லாம் நிஜ வாழ்க்கைக்கு ஒத்துவராது என்று பேசாதீர்கள்.. ஏற்றுக்கொள்ள தயங்கும் பல விஷயங்கள்தான் எதிர்காலத்தில்  எதார்த்தமாக மாறியிருக்கின்றன..ஒரு பத்து வருடத்திற்கு முன்னர் எங்கள் ஊரில் நைட்டி அணியும் பெண்களைத் தவறான பெண்கள் என்று கூறுவார்கள்..ஆனால் இன்று அப்படிச்சொல்ல முடியுமா..அப்படிப் பேசியவர்கள் எல்லாம் இன்று நைட்டியைப் போட்டுக்கொண்டுதான்  சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்..

வசதிபடைத்த தொழிலதிபர்கள் அனைவரும் ஒரு பிச்சைக்கார குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கலாம்..காரணமே இல்லாமல் மணிக்கணக்கில் செல்போனில் மொக்கைபோடும் காதலர்களே ..உங்களின் ரீசார்ஜ் செலவில் பாதியைக்குறைத்தாலே இந்தியாவின் பாதி குழந்தைகளைப் படிக்கவைக்கலாம்..

என்ன நல்லா குழப்பி விட்டேனா ?
 எப்படியோ நாரதர் கலகம் நன்மையில் முடிந்தால் சரி..சொல்லவந்த கருத்தைத் தெளிவாக்க் கூறினேனா என்று தெரியவில்லை..குறையிருந்தால் கருத்துரையில் கூறுங்கள்..அடுத்த பதிவில் தொடர்கிறேன் ..நன்றி..