Monday, 4 November 2013

நாங்கள் மாறிவிட்டோம் ...நீங்கள்..?

சுவாரஸ்யமான பதிவை எதிர்பார்த்து வந்தவர்கள் இத்தோடு அப்பீட்டு ஆகிக்கலாம்..கொஞ்சம் போராதான் இருக்கும் ..பொறுத்துக்கோங்க..புதுச்சேரியில் பலத்த மழையின் காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விட்டுவிட்டார்கள்..வெளியிலும் எங்கும் செல்ல முடியவில்லை...சரி இருக்கவே இருக்காங்க நம்ம திண்டுக்கல் தனபால் அண்ணன், வேலூர் உஷா அக்கா, காணாமல் போன விழியின் ஓவியம் மகேஷ்..எத எழுதனாலும் அதையும் படிச்சிட்டு கண்டிப்பா நாலு கமெண்ட்ஸ் ஆச்சும் எழுதிட மாட்டாங்களானு ஒரு நப்பாசைதான்..

சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்..நான் பதிவுலகத்திற்கு அறிமுகமான புதிதில் என்னையும் மதித்து என்னுடைய பதிவுகளுக்கு முதன்முதலில் பின்னூட்டங்கள் எழுதி எனக்கு ஊக்கம் அளித்தவர்கள் இவர்கள்தான்..இந்த பதிவின் மூலம் அவர்களுக்கு என் நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்...

சரி சரி விஷயத்துக்கு வந்துடறன்...இப்போ நம்ம உலகத்துக்கு பெரிய அச்சுறுத்தலா இருக்கற ரெண்டு விஷயம்னு பார்த்தோம்னா ஒன்று உலக வெப்பமயமாதல் மற்றொன்று பிளாஸடிக் கழிவுகளால் ஏற்படவுள்ள பிரச்சினைகள்தான்..

முதல் பிரச்சினையை தீர்ப்பதென்பது  கடினமான செயல்தான்..இன்றைய அவசர உலகத்தில் வாகன பயன்பாடு அதிகரித்துக்கொண்ண்டுதான் இருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை..நிச்சயம் குறையப்போவதும் இல்லை...அரசாங்கமும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதாய் தெரியவில்லை...விளைநிலங்களெல்லாம் விலைநிலங்களாக மாறுவதையும் தடுக்கமுடியவில்லை...அரசாங்கம்தான் ஏதாவது திட்டம் கொண்டுவரவேண்டும்..சுற்றுச்சூழலைப் பாதிக்காத வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தொழில் தொடங்க பெரிய அளவில் உதவி செய்யலாம்..என்று என்ன நடக்கும் என்று தெரியவில்லை..என்று வேண்டுமானாலும் ஆர்டிக்கும் அண்டார்டிக்காவும் நமது அண்டை நாடுகளாகலாம்..

இரண்டாவது பிரச்சினையான பிளாஸ்டிக் நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது...பெரிய பிளாஸ்டிக்குகளால் உடனடி பாதிப்பு இல்லையென்றாலும் என்னைக்கா இருந்தாலும்  நமக்கெல்லாம் ஆப்புதான்.. அதனால்உடனடியாக நம் நாட்டைவிட்டே துரத்தவேண்டிய எதிரி பிளாஸ்டிக் பைகள்தான்..கேரி பேக்குகள்,மளிகைசாமான் பைகள்,ஜவுளிக்கடை பைகள்,பால் பாக்கெட்டுகள் என்று பல்வேறு பெயர்களுடன் பலமுகங்களோடு நம்மைச் சுற்றியிருக்கும் பல்வேறு எதிரிகள்..நம்முடனேயே கூடவே இருந்து நம் நாட்டின் நிலத்தடி நீர்வளத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக்கொண்டிருக்கும் அசகாயசூரன்தான் இந்த பிளாஸ்டிக் பைகள்...

யாருக்குமே தெரியாதத சொல்ல வந்துட்டார்ரா பெரிய --------மாதிரி என்று நீங்கள் சொல்வது புரிகிறது..எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக இருந்தாலும் எத்தனை பேர் அதை அழிக்க முன்வந்தார்கள்,முயற்சியெடுத்தார்கள் என்பதே முக்கியம்..

இத்தகைய விழிப்பணர்வு வந்ததற்கும் காரணம் இருக்கிறது...புதுச்சேரி மாநிலத்தில் மாணவர்களுக்க் காலை உணவாக பாலும் பிஸ்கெட்டும் வழங்கி வருவதை அனைவரும் அறிவீர்கள் என்று நினைக்கிறேன்...எங்கள் பள்ளியின் பால் காய்ச்சும் ஊழியர்கள் காலி பால் பாக்கெட்டுகளை அப்படியே போட்டுவிட்டு போய்விடுவார்கள்..துப்புரவுப்பணியாளர்கள் அந்த காலி பால் பாக்கெட்டுகள்,பிஸ்கட் பாக்கெட்டுகளைப் பெருக்கி வாரி குப்பையில் (எங்கள் பள்ளி விளையாட்டு மைதானத்தின் ஒரு மூலையில்) கொட்டிவிடுவார்கள்...அக்குப்பைகள் கொஞ்சநேரத்தில் பள்ளிமுழுவதும் பறந்துவந்து எங்கள் பள்ளியே குப்பைமேடாகக் காட்சியளிக்கும்..

என்னுடன் பணிபுரியும் நண்பன் பெருமாள் இதைக்கண்டு இதற்கு ஏதாவது ஒரு வழி செய்யவேண்டும் என்று கூறிக்கொண்டே இருப்பான்..அந்த பிளாஸ்டிக் பைகளை எல்லாம் ஒரு பிளாஸ்டிக் பையில்போட்டு கட்டி குப்பையில் போட்டுவந்தோம்..அதுவும் சரியான தீர்வாக அமையவில்லை..

பிறகு என் நண்பன் பெருமாளின் யோசனைப்படி ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் உதவியோடு காலி பால்பாக்கெட்டை சாக்குகளில் சேமித்துவைத்து அதை  கடையில் போட்டு அதிலிருந்து வரும் பணத்தை பள்ளியின் செலவுக்குப் பயன்படுத்திக்கொண்டோம்..

இருந்தாலும் மனம் நிறைவடையவில்லை...இன்னமும் பிளாஸ்டிக் குப்பைகள் பள்ளி வளாகங்களில் இருந்தவண்ணமே இருந்தது...தனியார் பள்ளிகளில் கண்டிப்பு என்ற முறையால் பள்ளியைச் சுத்தமாக வைத்துக்கொள்கின்றனர்...ஆனால் எங்கள் ஊர் பள்ளிகளில் பிள்ளைகளுக்கு பால் வாங்கிக்கொடுக்கவும் மதிய உணவு ஊட்டிவிடவும் பெற்றோர்கள் பள்ளிக்குள் வருவார்கள்..அப்படி வரும்போது மாணவர்களுக்கு ஏதாவது ஸ்நாக்ஸ் வாங்கிக் கொடுத்துவிட்டு அந்த பிளாஸ்டிக் பைகளைப் பள்ளி வளாகத்திலேயே போட்டுவிடுவர்..அவர்களைப் பள்ளிக்குள் வரவேண்டாம் என்றும் சொல்லமுடியாது..பிளாஸ்டிக் கவர்களை பள்ளி வளாகத்தில் போடாதீர்கள் என்று கூறியும் பயனில்லை..

தமிழ்நாட்டில் ஒருசில நகராட்சிகளிலும்,ஊராட்சிகளிலும் பிளாஸ்டிக் இல்லாத ஊராட்சி என்ற அறிவிப்புப் பலகைகளைப் பார்த்ததுண்டு..நம் பள்ளியிலும் அதைப் பின்பற்றினால் என்ன என்ற யோசனை எனக்குள் தோன்றியது..உடனே செயல்படத்தொடங்கினேன்..

நம் பள்ளி பிளாஸ்டிக் இல்லா பள்ளியாக மாற்றப்படுகிறது என்று நோட்டீஸ் அடித்து பள்ளி வளாகங்களில் ஒட்டினோம்..ஒருநாள் முழுவதும் மாணவர்களின் உதவியுடன் பள்ளிவளாகத்தில் இருந்த பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றினோம்..சட்டமாக போட்டால்தான் நம் மக்கள் எதையுமே மதிக்கிறார்கள்..கட்டாயம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல்  தினம் தினம் பிளாஸ்டிக் பற்றிய விழிப்புணர்வை மாணவர்கள் மனதில் ஏற்படுத்தி வருகிறோம்...இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஆசிரியர்களாகிய நாங்கள் முதலில் அவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க முடிவு செய்தோம்..இனிமேல் ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் எப்பொழுதும் ஒரு துணிப்பையை வைத்திருக்க வேண்டும் என்றும் மாணவர்கள் எதிரில் பிளாஸ்டிக் பையைப் பயன்படுத்த வேண்டாம்
என்றும் முடிவு செய்துள்ளோம்..

உங்கள் பள்ளிவளாகம் மாறிவிட்டால் உலகமே சுத்தமாகிவிடுமா என்ன..இவனுக்கு வேற வேலையே கிடையாது போல என்று பலர் நினைக்கக் கூடும்..ஒவ்வொரு ஆசிரியரும் நினைத்தால் நிச்சயம் சாத்தியமாகும்...ஆசிரியர்களால் மட்டும்தான் சாத்தியமாகும்...அதனால்தான் இந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்..ஏற்கனவே இம்முறை பல பள்ளிகளில் பின்பற்றப்படலாம்..நான் ஒன்றும் முன்னோடியல்ல..இதுவரை செய்யாதவர்கள் இனிமேலாவது என் பின்னால் வாருங்கள் என்றுதான் அழைக்கிறேன்..

இதெல்லாம் வேலைக்கு ஆகாதப்பா என்று மட்டும் ஒதுங்கிக்கொள்ளாதீர்கள்..எங்கள் பள்ளியில் இப்பல்லாம் எங்களைவிட எங்கள் மாணவர்கள்தான் பயங்கர ஈடுபாட்டோடு பின்பற்றுகிறார்கள்..ஒன்று,இரண்டாம் வகுப்பு மாணவர்கள் யாராவது பள்ளி வளாகத்தில் பிளாஸ்டிக் குப்பைகளைப்போட்டால் உடனே ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் தாங்களாகவே ஆர்வமாகச்  சென்று அவர்களிடம் பிளாஸ்டிக் பைகளை பள்ளி வளாகத்தில் போடக்கூடாது என்று அறிவுரை கூறுகிறார்கள்..இது இது இதத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம்..இப்பயணம் எங்களோடு நின்றுவிடாமல் அனைத்துப்பள்ளிகளுக்கும் பரவவேண்டும்..இப்பதிவைப்படிக்கும் நண்பர்கள் உங்களுக்குத் தெரிந்த ஆசிரிய நண்பர்கள் யாரேனும் இருந்தால் அவர்களுக்கும் பகிருங்கள்..

இன்று ஒரு பள்ளி நாளை லட்சம் பள்ளிகளாக மாறலாம்...இன்று பிஞ்சுக்குழந்தைகளின் மனதில் நாம் விதைக்கும் சிறிய விதைகள் நிச்சயம் ஒருநாள் விருட்சமாக தழைத்தோங்கும் என்ற பேராசைக்கனவுகளோடு..உங்கள் இரா.கலியபெருமாள்...

23 comments:

  1. அற்புதமான பணி ! உங்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை....

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டுக்களை பலருடன் பகிர்வதன் மீலம் வெளிப்படுத்துங்கள்..நண்றி நண்பா..

      Delete
  2. ’குப்பை’களைப்பற்றி ’படுசுத்தமான’ விழிப்புணர்வுப் பகிர்வு. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களைப் போன்ற பெரியவர்களின் ஆசிர்வாதங்கள் இருக்கும்போது நிச்சயம் எங்கள் முயற்சி வெற்றி அடையும் என்று நம்புகிறேன்..

      Delete
  3. பிளாஸ்டிக் சில இடங்களில் / சில பொருட்களில் தவிர்க்க முடியாதது தான்... அதனை ஏன் தூக்கி வெளியில் போட வேண்டும்...? (வீட்டிலும் & வெளியிலும்) அது தான் தவறு...

    மக்கும் குப்பைகள் / மக்காத குப்பைகள் என்று தினமும் காலை நகராட்சியில் இருந்து வருகிறதே... எதற்கு...?

    உங்களின் நல்ல எண்ணம் சிறியதாக நினைக்க வேண்டாம்... என்றாவது ஒரு நாள் நீங்களே வியப்படைவீர்கள்... பாராட்டுக்கள்...

    குழந்தைகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. அந்த நாளைத்தான் எதிர்நோக்கி இருக்பிறேன் ஐயா..நன்றி

      Delete
  4. எனது வட்டத்தில் (g+) பகிர்ந்து கொண்டேன்... நன்றி...

    ReplyDelete
  5. அருமையான விழிப்புணர்வுப்பணி ..!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  6. வணக்கம் சகோதரரே..
    தங்களது அளப்பறிய பணிக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள் முதலில் தங்களுக்கு உரித்தாகட்டும். விழிப்புணர்வு தங்களின் செயலே ஏற்படுத்தும். ஒரு விதையை விதைத்து விட்டீர்கள் அது ஆழ வேறூன்றி விருட்சக மரமாக உருவெடுத்து பயனளிக்கும் என்பதில் வியப்பில்லை. தங்கள் பணிக்கும் பகிர்வுக்கும் நன்றி சகோதரரே..

    ReplyDelete
    Replies
    1. நிறைவேறும் நாளை எதிர்நோக்கி என்றும் நன்றியுடன்...

      Delete
  7. மிகவும் சிறப்பான ஆக்கம். விதையை எங்கு தூவுவது என்று ஆராய்ந்து சிறப்பாக தூவியுள்ளீர்கள். பலன் தர நாட்களாகலாம். மாதங்களாகலாம், வருடங்களுமாகலாம். ஆனால் நிச்சயம் பலன் கிடைக்கும். பாராட்டுகள் கலியபெருமாள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழி.

      Delete
  8. அருமையான ஆக்கம்,.தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  9. உண்மையில் பாராட்டத்தக்க செயல். விதை சிறியதுதான். விதைத்திருக்கிறீர்கள். நிச்சயம் விருட்சமாகும். வாழ்த்துக்கள்.
    மாணவர்களை கொண்டு வளாகத்தை சுத்தம் செய்யும்போது கவனம் தேவை. பத்திரிகைகளில் படம் எடுத்து போட்டு விடுவதற்கு வாய்ப்பு உண்டு. இது போன்ற செய்திகளுக்காகவே சில பத்திரிக்கைகள் காத்திருக்கின்றன.ஆசிரியர்களும் இந்தப் பணியில் ஈடுபட்டு புகைப்படமும் எடுத்துக் கொள்ளுங்கள்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ஐயா..உங்கள் அறிவுரைப்படியே நடக்கிறோம்.

      Delete
  10. நல்ல விஷயம். அணைத்து பள்ளிகலும் இதை கடைப்பிடிதால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete

  11. வணக்கம்!

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
    நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
    சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
    தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    01.01.2014

    ReplyDelete
  12. வணக்கம்

    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி. இதோ

    http://blogintamil.blogspot.com/2015/01/4_23.html?showComment=1421971764341#c6362785305064150399



    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  13. வணக்கம்!
    இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
    வாழ்த்துக்கள்!
    ஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு!
    திருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்
    பட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது
    படைப்புகள் யாவும்.

    நட்புடன்,
    புதுவை வேலு,
    www.kuzhalinnisai.blogspot.com

    (இன்றைய எனது பதிவு
    "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"
    சிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின்
    குழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம்
    படரட்டும்!
    (குழலின்னிசையை தொடர தாங்கள் உறுப்பினரானால் அகம் மகிழ்வேன்! நன்றி!)

    ReplyDelete