Tuesday, 7 May 2013

பிச்சைக்காரர்களும் மனிதர்கள்தானே...!!

    பிளாக் பக்கம் வந்து ஒருவார காலமாகிவிட்டது..உடலும் மனமும் ஒத்துழைக்காத காரணத்தால் ஒருவாரமாக எதுவும் எழுத முடியவில்லை..நண்பர்களின் பதிவுகளுக்குக் கூட கருத்துரை எழுதமுடியவில்லை..மன்னிக்கவும்..(ஒருவாரமாக நிம்மதியாத்தாண்டா இருந்தோம் அப்படித்தானே சொல்றீங்க..).

சென்றவாரம் முதல் என் மனதை அரிக்கும் ஒரு விஷயத்தையே உங்களுடன் இன்று பகிர விரும்புகிறேன்..மொட்டை போடுவதற்காக சென்றவாரம் கோவிலுக்குச் சென்றிருந்தேன்..நான்கைந்து பிச்சைக்காரர்கள் வரிசையாக அமர்ந்திருந்தார்கள்..பத்து ரூபாய் கொடுத்து அவர்களைப் பிரித்து எடுத்துக்கொள்ளுமாறு கூறிவிட்டுவந்தேன்..உடன்வந்த ஒருசிலர் அந்த பிச்சைக்காரர்களை கேவலமாக பார்த்தது மனதிற்குக் கஷ்டமாக இருந்தது..

மேலே குறிப்பிட்ட மனிதர்களை ஒருசில கேள்விகள் கேட்க விரும்புகிறேன்..
பிச்சைக்காரர்களைப் பற்றிய உங்கள் எண்ணம்தான் என்ன?.  அவர்களுக்கு நாம் ஏன் உதவ வேண்டும் என்பதுதானே ? .. வேறு வழியின்றிதான் பலர் பிச்சையெடுக்கிறார்கள்..பிச்சை எடுப்பது என்பது ஒன்றும் அவ்வளவு சாதாரண காரியமல்ல..ஒரு நாடகத்தில் பிச்சைக்காரன் வேடம் கொடுத்தால்கூட நாம் எவ்வளவு தயங்குவோம்..உண்மையில் பிச்சையெடுப்பவர்களின் மனநிலையை நினைத்துப்பாருங்கள்..

நான் ஒன்றும் பிச்சைக்காரர்களுக்கு வக்காளத்து வாங்குவதற்காக இங்கே வரவில்லை..பிச்சையெடுப்பதை சரியென்றும் நியாயப்படுத்தவில்லை..
உங்களுடைய எண்ணம் என்ன ?  பிச்சைக்கார்கள் பலர் உடல் நன்றாக இருந்தும் உழைக்காமல் நம்மை ஏமாற்றிப் பிழைக்கிறார்கள் என்பதுதானே..!
நீங்கள் வாழ்க்கையில் யாரிடமும் ஒருநாள் கூட ஏமாந்ததே இல்லையா என்பதுதான் என் கேள்வி..

ஒரு கோவிலுக்குச் செல்கிறீர்கள்..அர்ச்சனைத் தட்டெல்லாம் வாங்கிப் படைக்கிறீர்கள்..அர்ச்சகர் தீபத்தட்டை வரிசையாக காட்டி வருகிறார்..உங்கள் பக்கத்தில் இருப்பவர் அர்ச்சகரின் தட்டில் பத்து ரூபாய் போடுகிறார்..உடனே நீங்கள் உங்கள் வெட்டி கௌரவம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக இருபது ரூபாய் போடுகிறீர்கள்..அங்கே உங்கள் வறட்டு கௌரவத்திற்காக ஏமாறவில்லையா..?

நண்பருடன் ஒரு ஓட்டலுக்குச் செல்கிறீர்கள்..இருநூறு ரூபாய்க்குச் சாப்பிடுகிறீர்கள்..பில் கொடுக்கப் போகிறீர்கள்..நான்தான் கொடுப்பேன் என்று உங்களுக்குள் சண்டையெல்லாம் போட்டு முடித்து கடைசியாக யாரோ ஒருவர் பில் பணத்தைக் கொடுக்கிறீர்கள்..வரும்பொழுது உங்களுக்கு பரிமாறிய சர்வருக்கு நம்முடைய வெட்டி கௌரவம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக இருபது ரூபாய் டிப்ஸ் கொடுத்துவிட்டுத்தானே வருகிறோம்..அவர்களுடைய உழைப்புக்குத்தானே கொடுத்தோம் என்பதெல்லாம் வெறும்பேச்சு..எல்லாரும் கொடுக்கிறார்கள், நாமும் கொடுக்கிறோம் என்பதுதானே உண்மை..இங்கெல்லாம் நீங்கள் ஏமாறவில்லையா.. ?

தினம் தினம் ஏமாறும் காதலன்களே நீங்கள் ஒருநாள் கூட உங்கள் காதலியிடம் ஏமாந்ததில்லையா..வருடம் முழுதும் பத்துபைசா பேலன்ஸ்  மட்டுமே வைத்துக்கொண்டு உங்களுக்கு ஒரு மிஸ்டுகால் கொடுத்துவிட்டு மணிக்கணக்காய் உங்களிடம்  பேசி உங்கள் வருமானத்தில் பாதியை ரீசார்ஜ் செலவுக்கே காலி செய்யும் காதலிகளிடம் எந்த ஒரு இளைஞனும் ஏமாந்ததில்லையா..?

ஓட்டலில் சென்று இரண்டு இட்லி ஒரு வடை மட்டும் சாப்பிட்டு விட்டு எண்பது ரூபாய் பில் என்றதும் வாயையும்__________யும் மூடிக்கொண்டு பில்லைக் கொடுத்துவிட்டுத்தானே வருகிறோம்.. ஆனால் பிச்சைக்காரனுக்கு இரண்டு ரூபாய் கொடுக்க நமக்கு மனம் வருவதில்லை..

அப்படியானால் பிச்சையெடுப்பது சரியென்று நான் சொல்லவரவில்லை..சில இடங்களில் அது சமூகக் குற்றமாக்ககூட நடந்துவருவதை நான் மறுக்கவில்லை..நான் சொல்வதெல்லாம் அவர்களையும் சகமனிதர்களாய் மதியுங்கள்..அவர்களும் சதைப்பிண்டம் அடங்கிய உயிர்களே..

பிச்சைக்காரர்கள் இல்லாமல் இருக்கச் செய்வது அரசாங்கத்தின் கடமை..தமிழ்நாட்டின் எத்தனையோ கோயில்களிலும் பொது இடங்களிலும் பலர்  பிச்சையெடுக்கிறார்கள் என்பது அரசாங்கத்திற்கும் காவல்துறைக்கும் தெரியவே தெரியாதா.?. அரசாங்கத்தின் சார்பில் ஒரு சிறுதொழில் நிறுவனம் தொடங்கி அங்கே பிச்சைக்காரர்களுக்கு வேலை கொடுத்து மறுவாழ்வு கொடுக்கலாம்..அவர்களின் பிள்ளைகள் தங்கும் வசதி செய்து பள்ளிக்கூடம் அமைத்து அவர்களுக்குக் கல்வி கொடுக்கலாம்..

உழைக்கும் மக்களையே நீங்கள் உழைக்க வேண்டாம் என்று சொல்லி எல்லா இலவசங்களையும் கொடுத்து நம்மைச் சோம்பிறியாக்கும் இந்த அரசாங்கம் எப்படி பிச்சைக்காரர்களுக்கு  உழைப்பைக் கற்றுக்கொடுக்கும்..?

பிச்சைக்காரர்களைக் கேவலமாகப் பார்ப்பதைத் தவிர வேறு என்ன செய்திருக்கிறோம் நாம்..போக்கிரி படத்தில் விஜய் சொல்வது போல உப்புமாவாச்சும் கொடுத்திருப்போமா.. அபியும் நானும் படத்தில் ஒரு கதையை அற்புதமாக இணைத்திருப்பார் இயக்குநர்..தன் பள்ளி வாசலில் பிச்சை எடுக்கும் ஒருவரைக் கூட்டி வந்து அவர்கள் வீட்டில் வைத்துக்கொள்ளலாம் என்று  திரிஷா தன் தந்தையிடம் வாதிடுவார்..அதில் அவர் வெற்றியும் பெறுவார்..அந்த பிச்சைக்காரனை அவர்கள் குடும்பத்தில் ஒருவராக மதிப்பார்கள்..

 வசதி படைத்த பணக்காரர்கள் ஏன் இதை பின்பற்றக்கூடாது..சினிமாவில் காட்டுவதெல்லாம் நிஜ வாழ்க்கைக்கு ஒத்துவராது என்று பேசாதீர்கள்.. ஏற்றுக்கொள்ள தயங்கும் பல விஷயங்கள்தான் எதிர்காலத்தில்  எதார்த்தமாக மாறியிருக்கின்றன..ஒரு பத்து வருடத்திற்கு முன்னர் எங்கள் ஊரில் நைட்டி அணியும் பெண்களைத் தவறான பெண்கள் என்று கூறுவார்கள்..ஆனால் இன்று அப்படிச்சொல்ல முடியுமா..அப்படிப் பேசியவர்கள் எல்லாம் இன்று நைட்டியைப் போட்டுக்கொண்டுதான்  சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்..

வசதிபடைத்த தொழிலதிபர்கள் அனைவரும் ஒரு பிச்சைக்கார குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கலாம்..காரணமே இல்லாமல் மணிக்கணக்கில் செல்போனில் மொக்கைபோடும் காதலர்களே ..உங்களின் ரீசார்ஜ் செலவில் பாதியைக்குறைத்தாலே இந்தியாவின் பாதி குழந்தைகளைப் படிக்கவைக்கலாம்..

என்ன நல்லா குழப்பி விட்டேனா ?
 எப்படியோ நாரதர் கலகம் நன்மையில் முடிந்தால் சரி..சொல்லவந்த கருத்தைத் தெளிவாக்க் கூறினேனா என்று தெரியவில்லை..குறையிருந்தால் கருத்துரையில் கூறுங்கள்..அடுத்த பதிவில் தொடர்கிறேன் ..நன்றி..

7 comments:

 1. nalla pathivu sir..

  nanum tirupati malaikku nadanthu porache vayasanavarkal allathu una mutrroor yarachum pitchai eduththal kasu poduven.
  anal kovil undiyila poda matten..
  ReplyDelete
  Replies
  1. கண்ணுக்குத் தெரியும் மனிதனுக்குச் செய்யும் உதவியே கடவுளுக்குச் செய்யும் தொண்டு..

   Delete
 2. சொல்லப்பட்டவர்களுக்கு இதைப் பற்றிய சிந்தனையே கிடையாது என்பது தான் உண்மை... இல்லை... கொடுமை...

  ReplyDelete
  Replies
  1. அரசாங்கம் நினைத்தால் மட்டுமே அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்க முடியும்.

   Delete
 3. உங்களது பார்வையில் நீங்கள் சொன்ன கருத்துகள் அனைத்துமே ஏற்றக்கொள்ளக் கூடியவையே..!நியாயமானவைதான்...!! பகிர்வுக்கு நன்றி! பாராட்டுகள்...!

  ReplyDelete
 4. :-) பொரிஞ்சு தள்ளி இருக்கீங்க. //நைட்டி// :-)

  //அவர்களையும் சகமனிதர்களாய் மதியுங்கள்.// //கண்ணுக்குத் தெரியும் மனிதனுக்குச் செய்யும் உதவியே கடவுளுக்குச் செய்யும் தொண்டு.// உண்மைதான்.

  படத்திலுள்ள அந்தச் சிறுமி... அவங்க சிரிப்பு அழகு. பளிச்.

  ReplyDelete