Saturday, 15 September 2018

என்று தணியும் இந்த குடிபோதை மோகம்?

பாரதியும் அரவிந்தரும்
வாழ்ந்திட்ட பூமி
பாழான மதுவாலே
அழியுதடா சாமி..
அளவற்ற குடியாலே
சாகுதொரு சமுதாயம்.
அதில்தானே அரசாங்கம்
தேடுதிங்கு ஆதாயம்.
ஏழையின் பலவீனம்
ஏமாற்றும் மதுபானம்.
அரசுக்கு வருமானம்
அதுவன்றோ அவமானம்.!
மலிவுவிலையில் ஊருக்கு
ஒன்பது மதுக்கடை
மயக்கத்திலே மனிதன்
சாய்வதோ சாக்கடை.

அவ்வைப்பாட்டி வரிகளை
அர்த்தமாக ஆக்கினான்
ஊக்க  மதுகைவிடேல்
உவகையோடு சொல்கிறான்.
குடிப்பதற்குக் காரணம்
தேடுகிறான் தினம்தினம்
குடல்வெந்து போனபின்னே
ஆகிறானே நடைபிணம்.
மாணவரும் குடிக்கின்றார்
மங்கையரும் குடிக்கின்றார்.
வானத்திலே பறக்கின்றார்
மானமின்றி கிடக்கின்றார்..

மதுவிலக்கை ஓரங்கட்டி
மகாத்மாவைப் போற்றுகிறோம்
காந்திஜெயந் தியில்மட்டும்
கடைகளை மூடிக்கிறோம்.

கள்ளுண்ணாமை அதிகாரத்தைக்
காலில்போட்டு மிதித்துவிட்டு
திருவள்ளுவர் தினத்திலே
திறப்பதில்லை கள்ளுக்கடை.

ஆட்சிகள் மாறுமோ?
அதிகாரம் மாறுமோ?
மதுவிலக்கு வருமோ?
மனநிம்மதி தருமோ?
பகல்கனவாய் பாதியிலே
கலைந்தேதான் சென்றிடுமோ?

இலக்கணப் பிழையின்றி
எழுதினேனா தெரியவில்லை.
இதயத்துக் கோபமோ
இன்னமும் தீரவில்லை..

அடுத்த பதிவில் தொடரும்வரை உங்கள் கலியபெருமாள்.


2 comments:

  1. கொடுமை இந்த மோகம். எத்தனை இழப்புகள் - ஆனாலும் தாகமும் மோகமும் இன்னமும் தீரவில்லை - அரசுக்கும் குடிகாரர்களுக்கும்.

    ReplyDelete
    Replies
    1. அது மாறும் வரை இந்தியா இப்படித்தான் இருக்கும்..தாய்மார்கள்தான் பாவம்.

      Delete